பிட்காயின் போன்ற கிரிப்டோ நாணயங்களை இந்தியாவில் பணமாக மாற்றுவதற்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதோடு, இந்த வகை கரன்ஸிகளின் வணிகத்தை கட்டுப்படுத்த, தனி வழிகாட்டு ஆணையத்தைத் தொடங்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
கிரிப்டோ கரன்ஸி வணிகத்தை வழி நடத்த தேவையான பரிந்துரைகளை வழங்க, கடந்த ஆண்டே ஒரு குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது. அதன் அறிக்கை வரும் மார்ச்க்குள் மத்திய அரசிடம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்ஸிகளை, இந்திய ரூபாய் உள்ளிட்ட மற்ற அனுமதிக்கப்பட்ட நாணயங்களாக மாற்றிக் கொள்ள இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள நிதி பரிமாற்ற முறைகளின்படி தடை விதிக்கப்படும். எனவே, சட்டவிரோதமாகவோ, இந்தியாவுக்கு வெளியிலோதான் இந்த நாணயங்களை பணமாக்க முடியும் என்ற நிலை வரும். “இது ஆபத்தானது” என கிரிப்டோ கரன்ஸி குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்த ஆய்வுக் குழுவின் தலைவர் கார்க் தெரிவித்துள்ளார்.