பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடிப் போலவே, சிட்டி யூனியன் வங்கியிலும்!

12.8 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்த மோசடி குறித்து, இந்த வங்கி பங்குசந்தைகளுக்கு தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் முழுக்க மீடியாக்களில் முக்கிய இடத்தைப் பிடித்த பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியைப் போலவே, இன்னொரு நிதி மோசடி – சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிட்டி யூனியன் வங்கியில் நடைபெற்றுள்ளது. 12.8 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்த மோசடி குறித்து, இந்த வங்கி பங்குசந்தைகளுக்கு தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிட்டி யூனியன் வங்கி தெரிவித்துள்ள தகவலின்படி, கடந்த பிப்ரவரி 7ம் தேதி வங்கிப் பணி நிறைவில், கணக்கு வழக்கு சரிபார்ப்பின்போது 3 முறைகேடான பணப் பரிமாற்றங்கள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ‘ஸ்விஃப்ட் (SWIFT)’என்ற, மின்னணு பணப்பபரிமாற்ற முறை மூலம், இந்த வங்கியால் அதிகாரப் பூர்வமாக இல்லாமல், ஆனால், அவர்களது ‘ஜன்னல்’ வழியே செய்யப்பட்டுள்ள இந்த பணபரிமாற்றம் 3 வெளிநாட்டு வங்கிகளில் முடிந்துள்ளது.

இதில் நியூயார்க் நகரத்தின் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி (SCB)மூலம் துயாயில் உள்ள ஒரு வங்கிக்கு அனுப்பப்பட்ட 5 லட்சம் அமெரிக்க டாலர் நடுவழியில் இடைமறிக்கப்பட்டு, திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதுதவிர ஃபிராங்க்பர்ட் நகரத்தின் SCB, துருக்கியில் உள்ள வங்கிக்கு 3,72,150 யூரோக்களை இடம் மாற்றியுள்ளது. அதேபோல, நியூயார்க்கின் பேங்க் ஆப் அமெரிக்கா, சீன வங்கிக்கு 10 லட்சம் அமெரிக்க டாலரை அனுப்பியுள்ளது.

இந்த இரு பணப் பரிமாற்றத்தைச் சரிசெய்து, கைமாறிய தொகையை மீட்க சிட்டி யூனியன் வங்கி சார்பில் சம்மந்தப்பட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை மூலம் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இந்த வங்கி வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது. ஏற்கனவே வங்கிகளில் வெளிச்சத்துக்கு வராத பல கண்ணி வெடிகள் மறைந்திருக்கின்றன என ரிசர்வ் வங்கியை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close