Advertisment

ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் பிரதான் மந்திரி முத்ர யோஜனா திட்டத்தின் கீழ் புதிய தொழில்கள் தொடங்கலாம்

ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களினால் நன்மை அடைவார்களா தொழில் முனைய விரும்பும் இந்திய இளைஞர்கள்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Start up India Scheme

Start up India Scheme

இந்தியாவில் சொந்தமாக தொழில் தொடங்க முனைவோர்களுக்கான திட்டங்கள் பற்றி சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். ஏற்கனவே இந்தியாவில் தொழில் தொடங்குதல் தொடர்பாக பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கின்றது மத்திய அரசு. மேக் இன் இந்தியா போலவே ஸ்டார்ட் அப் இந்தியா என்ற திட்டமும் பிரதம அமைச்சர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது. 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில்  இருந்த பல்வேறு சிக்கலான அம்சங்கள் நீக்கி எளிமையாக்கியுள்ளது, மத்திய அரசு. எளிமையான இந்த திட்டங்களின் மூலமாக மாற்றுச் சிந்தனையுடன் இருக்கும் இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்கும் சாத்தியக் கூறுகளை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றது, மத்திய அரசு.

Advertisment

90களின் பிற்பாதியில் அனைவராலும் அறிந்து கொள்ளப்பட்ட இணையதள வசதி வந்த பின்பு, தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளும் அது தொடர்பான தொழில்களும் மேற்குலகில் வெகு விரைவாக பரவி வந்தது. அமேசானின் அலெக்ஸா மற்றும் கூகுளின் கூகுள் அசிஸ்டண்ட் ஆகிய பெரிய கண்டுபிடிப்புகள் நம்முடைய கற்பனைத்திறனிற்கும் அப்பாற்பட்டதாய் தான் இன்றும் இருக்கின்றது. ஃபிண்டெக், சைபர் செக்கியூரிட்டி, ப்ளாக் செயின், ரோபாட்டிக்ஸ், ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் போன்ற தொழில் நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகள் மனித வளர்ச்சியினை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றவை. தொழில்நுட்பம் சாராத ஏர்பிஎன்பி மற்றும் உபர் போன்ற கண்டுபிடிப்புகளும் மக்கள் மத்தியில் வெகு விரைவாக சென்று சேர்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சிறு ஐடியா இருந்தால் போதும். உங்களின் கனவுகளை நிஜமாக்க இங்கு சர்வதேச சந்தைகளும் நிதி நிறுவனங்களும் காத்துக் கொண்டிருக்கின்றன.

உலக அரங்கில் இன்றும் அதிகமாக சொந்தத் தொழில் முனைபவர்கள் யாவரும் மேற்குலகைச் சார்ந்தவர்கள். குளோபல் ஸ்டார்ட் அப் எக்கோ சிஸ்டம் அறிவித்த அறிக்கை ஒன்றில் 41% சுய தொழில் முனைபவர்கள் அமெரிக்காவில் இருக்கின்றார்கள். அவர்களைத் தொடர்ந்து பட்டியலில் 35% இடம் பிடித்திருக்கின்றார்கள் சீனர்கள்.

இந்தியாவின் அஸ்ஸோச்சம் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், இந்தியாவில் 10,000 தொழில்கள் தொடங்கப்படும் எனில் அதில் 43% தொழில்கள் தொழில்நுட்பம் சார்ந்தவையாகவே இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 800 புது தொழில்கள் தொடங்கப்படுகின்றன. பெங்களூரு, ஃப்ளிப் கார்ட், ஓலா, பேடிஎம் போன்ற பெரிய  நிறுவனங்களை உருவாக்கிய மிக முக்கியமான இடமாகும். சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையிலும் இங்கு புதிய புதிய செயலிகளும் திட்டங்களும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. BYJU என்ற பெங்களூருவை சேர்ந்த நிறுவனம் 6 முதல் 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான கற்கும் திறனை மேம்படுத்தும் செயலியினை வெளியிட்டிருக்கின்றது. இதுவரை 16 மில்லியன் முறை அந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கின்றது.

அமெரிக்காவுடன் நாம் இதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சிலிக்கான் வேலி அனைத்து விதமான புதிய ஐடியாக்களுக்கும் இடம் தரும் அமைப்பாகவே செயல்படுகின்றது. உலகின் தலை சிறந்த நிறுவனங்களான ஆப்பிள், பேஸ்புக், ஒராக்கில், விசா, இண்டெல், சிஸ்கோ ஆகியவை சிலிக்கான் வேலியில் தான் அமைந்துள்ளது. புதிய ஐடியாக்களை செயல்படுத்தும் முனைப்பில் உருவாக்கப்படும் அனைத்து தொழில்களும் மேற்சொன்ன நிறுவனங்களில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களாகவே இருப்பார்கள். இவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு உதவும் வகையில் அந்தந்த நிறுவனங்கள் அவர்களுக்கு உதவுகின்றன. கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற செயல்களுக்கு நிதி உதவியும் அளிக்கின்றன, அப்பெரிய நிறுவனங்கள். சிலிக்கான் வேலி பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை மட்டும் வைத்திருக்காமல்,  பெரிய கல்வி நிறுவனங்களையும் கொண்டுள்ளது. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக் கழகம் என இரண்டிலும் படித்து வரும் மாணவர்களுக்கு சவால் நிறைந்த சூழலை உருவாக்கி அதில் வெற்றி அடையவும் வைக்கின்றது சிலிக்கான் வேலி.

தடையில்லாமல் இயங்கும் நகரம், திறமை மிக்கவர்கள் மற்றும் அதிக முதலீடினை தரும் நிதி நிறுவனங்கள், மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிதாக தொழில் முனைய நினைப்பவர்களின் கனவுகளுக்கு துணையாக நிற்கின்றது. இந்தியாவில் திறமை மிக்கவர்களுக்கு பஞ்சமே இல்லை. இந்தியாவில் மட்டும் 2.6 மில்லியன் இளைஞர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மற்றும் கணிதம் கற்றுத் தேர்ந்தவர்கள்.

10,400 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. ஐஐடி மட்டும் 23 இடங்களில் இருக்கின்றன. 31 தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இரண்டும் சேர்ந்து இந்தியாவில் 13 தொழில் முனையும் மையங்கள், 16 டெக்னாலஜி பிசினஸ் இன்குபெட்டர்கள், மற்றும் 6 ஆராய்ச்சி மையங்களை திறப்பதற்கான அனுமதியை அளித்துள்ளாது.

2016 கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் பெங்களூரு, டெல்லி, மற்றும் மும்பையில் அதிக அளவு டெக்னாலஜி ஹப்கள் இருக்கின்றன. அந்த நகரங்களைத் தொடர்ந்து புனே, திருவனந்தபுரம், அகமதாபாத், ஹைதராபாத், ஜெய்ப்பூர், சண்டிகர், மற்றும் மைசூர் போன்ற நகரங்களில் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் நகரங்கள் மட்டுமல்லாது சிறு சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் கூட புதியதாக தொழில் முனைய இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.

மத்திய அரசின் பிரதான் மந்திரி முத்ர யோஜனா திட்டத்தின் மூலமாக இதுவரை 6.5 மில்லியன் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதுவரை சுமார் 30,000 கோடி ரூபாய் வரை இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருக்கின்றது. வட்டி விகிதம் மற்றும் பெரிய தொகையை கடன் தருவதால் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக பெரியதாக தொழில் தொடங்க முனைபவர்களுக்கு வங்கிகளின் மூலம் கடன் பெறுதல் என்பது மிகவும் சவலான காரியமாகவே இருக்கின்றது. ஆகவே அவர்கள் தனியார் நிதி நிறுவனங்களின் மூலம் கடன் பெற்றுக் கொள்கின்றார்கள். கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 17 பில்லியன் அமெரிக்க டாலர்களை புதிய ஸ்டார்ட் அப்களுக்காக முதலீடு செய்திருக்கின்றது தனியார் நிதி நிறுவனங்கள். இந்த நிதி நிறுவனங்களின் ஒழுங்கு முறைகள் யாவற்றையும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் மேற்கொண்டு வருகின்றது. ஸ்டார்ட் அப்களுக்கு நிதி உதவி அளிக்க மட்டும் ரூபாய் 10,000 கோடியை நிதியாக ஒதுக்கியிருக்கின்றது இவ்வாரியம். இந்திய அரசாங்கமும் தொழில் முனைவோர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரையிலான வருமான வரியை தள்ளுபடி செய்திருக்கின்றது. டாட்டா போன்ற பெரிய நிறுவனங்களும் தொழில் முனைவோர்களுக்கு நிதி அளிக்க முன்வந்திருக்கின்றது.

டையர் 2 மற்றும் டையர் 3 வகுப்பில் வரும் 20 நகரங்களில் தொழில் முனைய விரும்புவர்களுக்கு அதிக அளவில் முதலீடு செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களை ஒன்றிணைக்க முடியும் என்று நம்புகின்றது. இந்தியாவில் உருவாக்கப்படும் புதிய தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்பினால் இந்தியாவில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இந்தியாவில் புதிதாக தொழில்நுட்பம் சார்ந்த தொழில் தொடங்க இது மிக முக்கியமான தருணமாகும் என்பதால் இளைஞர்கள் இதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ளுதல் நல்ல எதிர்காலத்தை உருவாக்கும்.

Pradhan Mantri Mudra Yojana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment