மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதை காப்புரிமை குறைப்பு : அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, இந்தியாவின் பதிலடியா?

இந்திய பருத்தி விவசாயிகளிடையே இன்று பிரபலமாக உள்ள, மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளுக்கான காப்புரிமைத் தொகையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆர்.சந்திரன்

இந்திய பருத்தி விவசாயிகளிடையே இன்று பிரபலமாக உள்ள, மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளுக்கான காப்புரிமைத் தொகையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 2வது முறையாக இந்த காப்புரிமை குறைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு காரணம் குறித்து இருவேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் இந்தியா பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் எடுத்து வரும் பல நடவடிக்கைகளுக்கு இது எதிர்வினையா என்ற கேள்வி ஒருபுறம் எழுப்பப்படுகிறது. மறுபுறம், இந்திய விவசாயிகளிடையே தற்போது மரபணு மாற்றப்பட்ட பயிர் வகைகளுக்கு எதிரான கருத்து பரவலாக அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.

இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகும் – மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகள் – மான்சாண்டோ என்ற அமெரிக்க நிறுவனத்தால் உருவாக்கி இந்திய நிறுவனங்களுக்கு உற்பத்தி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதனால், இவற்றின் விற்பனையில் காப்புரிமை தொகை மான்சாண்டோவுக்கு கிடைத்து வந்தது. 2016ம் ஆண்டு, மத்திய அரசு இந்த காப்பரிமை தொகையை 70 சதவீதத்துக்கு மேல் குறைத்தது. செவ்வாயன்று வெளியான அரசு ஆணையில் இது மீண்டும் 20.4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது இந்த விதைகளைப் பயன்படுத்தி விவசாயிகள் பெறும் உற்பத்தி வருவாயில் 0.5 சதவீதம் மட்டுமே காப்புரிமைத் தொகையாக கிடைப்பதாக மான்சாண்டோவின் இந்திய பங்குதாரர் மைக்கோ மான்சாண்டோ பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மான்சாண்டோ பருத்திக்கான காப்புரிமையைக் குறைத்தது மட்டுமின்றி, அப்பருத்தி விதைக்கான விலையையும் 7.5 சதவீதம் வரை… அதாவது 450 கிராம் எடை கொண்ட ஒரு பாக்கெட் பருத்தி விதை 740 ரூபாய் என அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. இது அமெரிக்க நிறுவனத்தை எரிச்சலடையச் செய்துள்ளது. இதனால், விரைவில் இந்நிறுவனம் தனது இந்திய இருப்பை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு வரும் அல்லது தள்ளப்படும் என இந்நிறுவனத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறி வருகின்றன. இதனால், இந்திய பருத்தி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதோடு, இந்தியாவின் பருத்தி தேவையும் பற்றாக்குறைக்கு தள்ளப்படும் என எச்சரிக்கும் தொனியில் அவர்கள் பேசி வருகிறார்கள். பருத்தி விலையை தற்போதுள்ள விலையுடன் குறைந்தது பாக்கெட்டககு 150 ரூபாயாவது உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது. காரணம், தற்போது இந்தியாவில் நடக்கும் பருத்தி சாகுபடியில் 90 சதவீதம் இந்த விதையைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, மத்திய அரசின் இந்த முடிவுக்கான காரணம் குறித்த திட்டவட்டமான தகவல் தெரிவிக்கப்படவில்லை. 2016ம் ஆண்டு பொறுப்புக்கு வந்த டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு தலைவலியை அதிகரித்தார். விசாக் கட்டணம், உயர்வு, ஆட்குறைப்பு என பலமுனைகளில் ஐடி துறையினரை பாதித்து வந்த அவரது அண்மைய நடவடிக்கையான உலோகப் பொருள் இறக்குமதிக்கான (உருக்கு மற்றும் அலுமினியம்) பொருள் குவிப்பு வரிவிதிப்பு உலக நாடுகள் பலவற்றிடம் பதட்டத்தை அதிகரித்துள்ளது. இது இந்திய நிறுவனங்களையும் ஓரளவு பாதிக்கும் என சொல்லப்படுகிறது.

மறுபுறம், விவசாயத் துறைக்கு வந்தால், இந்தியாவுக்குள் அமெரிக்க கோழிக் கால்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என உலக வர்த்தக மையத்தில் (WTO) இந்தியா மீது அமெரிக்க வழக்கு தொடர்ந்தது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதியைக் குறைக்க சிறப்பு விதிகளை இந்தியா விதிக்கக் கூடாது என சொல்லும் இதே அமெரிக்கா, இந்தியாவில் இருந்து இரால் மீன் இறக்குமதிக்கு சிறப்பு விதிகளை முன்வைத்து சிக்கலை உருவாக்குகிறது.

இந்தியா மட்டுமின்றி, பல உலக நாடுகளும், ஏன்…. அமெரிக்காவிலேயே உள்ள பொருளாதாரம் புரிந்த பலரும் டிரம்பின் நடவடிக்கையையும் போக்கையும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், டிரம்ப்க்கு பாடம் புகட்டும் நடவடிக்கையாகத்தான் இந்தியா தற்போது இரண்டாவது முறையாக மான்சாண்டோவை பாதிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால், இதற்கு வேறு காரணங்கள் இருந்தாலும், தற்போதைய சூழலில் அமெரிக்காவின் போக்கு எல்லா மட்டங்களிலும் கண்டனத்துக்கு உள்ளாகி வருவதுடன், விரைவில் எதிர் நடவடிக்கைகளைச் சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

×Close
×Close