350 ரூபாய் மதிப்புள்ள நாணயத்தை வெளியிட இந்திய அரசு முடிவு

சீக்கிய மதத்தின் 10வது மற்றும் கடைசி குருவான குரு கோவிந்த் சிங்கின் 350வது பிறந்த தினத்தையொட்டி, இந்த புதிய நாணயத்தை 350 ரூபாய் மதிப்பில் வெளியிடப்படுகிறது.

ஆர்.சந்திரன்

கடந்த 2016ல் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பி பெற்ற அரசு அதன்பிறகு பல மதிப்புகளில் புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. மறுபுறம் இதுவரை இல்லாத உயர்மதிப்பில் ஒரு நாணயத்தை வெளியிடவும் அது முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

சீக்கிய மதத்தின் 10வது மற்றும் கடைசி குருவான குரு கோவிந்த் சிங்கின் 350வது பிறந்த தினத்தையொட்டி, இந்த புதிய நாணயத்தை 350 ரூபாய் மதிப்பில் வெளியிடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. குரு கோவிந்த் சிங் 1666ம் ஆண்டு பிறந்தார் என்கின்றன தகவல்கள்.

இந்த நாணயம் 35 கிராம் எடை கொண்டதாக இருக்கும் எனவும், 50 சதவீத வெள்ளி, 40 சதவீத செம்பு மற்றும் 5 சதவீத சிக்கல் மற்றும் ஸிங்க் போன்றவற்றின் கலவையாக இந்த நாணயம் வெளியாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.

இந்த நாணயத்தின் முகப்பு பக்கத்தில் தற்போது 1 ரூபாய் நாணயங்களில் இருப்பது போலவே 350 என்ற அதன் ரூபாய் மதிப்போடு, இந்திய ரூபாய்க்கான குறியீடும், 4 திசையிலும் சிங்க முகம் கொண்ட இந்திய அரசின் இலச்சினையும் அச்சிடப்பட்டிருக்குமாம். நாணயத்தின் பின்புறம், ஹர்மீந்தர் சாகிப் கட்டிடத்தின் தற்போதைய வடிவமும், 1666 – 2016 என, குரு கோவிந்த் சிங் அவர்களின் 350வது பிறந்த நாளை நினைவூட்டும் வகையிலான சொற்றெடரும் இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது.

இந்த விவரங்களை கசிய விட்டுள்ள, மத்திய அரசு அந்த நாணயத்தின் வடிவ மாதிரியை இன்னும் வெளியிடவில்லை.

×Close
×Close