எரிவாயுவின் விலை 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு

பூமிக்கடியில் இயற்கையாகவே வாயு வடிவில் கிடைக்கும் எரிவாயுவின் விலை மாற்றம் நமது இல்லத்தரசிகளை உடனடியாகவோ, நேரடியாகவோ பாதிக்காது.

ஆர்.சந்திரன்

சிஎன்ஜி எனப்படும் உயர் அழுத்த இயற்கை எரிவாயுவின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றின் விற்பனை விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமே வழங்கிய பின் பல மாற்றங்களுக்குப் பிறகு இப்போது அது தினமும் நிர்ணயிக்கப்பட்டு வெளியாகிறது. ஆனால், இயற்கை எரிவாயுவின் விலை இன்னும் மத்திய அரசால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. இது தற்போதைய நிலையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்படும் என்ற நடைமுறை உள்ளது. இதன்படி, ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை ஒரு விலையும், அக்டோபர் 1 முதல் மார்ச் 31 வரை ஒரு விலையும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விலைதான் இந்தியாவில் தற்போது இயற்கை எரிவாயு துரப்பண பணியில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்துக்குமான நடைமுறை.

அதன்படி, தற்போது 1 யூனிட் எரிவாயு 2.89 அமெரிக்க டாலருக்கு விற்கப்படுகிறது. அது ஏப்ரல் 1ம் தேதி முதல் 3.06 டாலராக, அதாவது 17 சென்ட்கள் அல்லது 0.17 டாலர் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இருந்த ஆறு மாதங்களுக்கு முன் செய்யப்பட்ட விலை மாற்றத்தில் 2.48ல் இருந்து 41 சென்ட்கள் விலை உயர்த்தப்பட்டன. அதற்கு முன் 3 ஆண்டுகளில் எரிவாயு விலை இந்தியாவில் அதிகரிக்கப்படவில்லை.

இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள எரிவாயு விலை நிர்ணயக் கொள்கை 2014ம் ஆண்டு அக்டோபரில் மோடி அரசு பொறுப்பேற்ற பின் உருவாக்கப்பட்டது. இதன்படி, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் கனடாவில் இயற்கை எரிவாயு என்ன விலைகளில் விற்கப்படுகிறதோ, அதன் சராசரியைக் கருத்தில் கொண்டு நிர்ணயிப்பது என முடிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய சந்தை நிலையில் 1 டாலர் விலை உயர்ந்தால், இந்திய எரிவாயு பணி நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 4000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என கணக்கிட்டுள்ளனர்.

இயற்கை எரிவாயுவின் இந்த விலை ஏற்றத்தால், இதை அதிகம் பயன்படுத்தும் தொழிலகளான யூரியா உற்பத்தி, மின் உற்பத்தி போன்ற தொழில்கல் பாதிக்கப்படும். அதனால், மின்கட்டணம் உயர வாய்ப்பும், யூரியா விலை அதிகரிக்க சந்தர்ப்பமும் உருவாகிறது.

எனினும், இதனால் வீடுகளில்… வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலை பாதிக்கப்பட வாய்ப்பில்லை. காரணம், எல்பிஜி எனப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு என்பது இயற்கை எரிவாயு வகை அல்ல. கச்சா எண்ணெயை உயர் வெப்ப நிலையில் பிரித்து வடிக்கும்போது, கிடைக்கும் ஒரு துணைப் பொருளே சமையல் எரிவாயு. அதனால், பூமிக்கடியில் இயற்கையாகவே வாயு வடிவில் கிடைக்கும் எரிவாயுவின் விலை மாற்றம் நமது இல்லத்தரசிகளை உடனடியாகவோ, நேரடியாகவோ பாதிக்காது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close