எல்.வி.பி-யை பொதுத்துறை வங்கியுடன் இணைக்க வேண்டும் – வங்கி ஊழியர் சம்மேளனம்

லஷ்மி விலாஸ் வங்கிக்கு வர்த்தகத் தடை விதித்திருப்பது ரிசர்வ் வங்கி தவறான முடிவு என்றும் எல்.வி.பி வங்கியை டி.பி.எஸ் வங்கி ஏற்கும் திட்டத்தை கைவிட்டு பொதுத்துறை வங்கியுடன் இணைக்க வேண்டும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

By: November 19, 2020, 8:49:58 PM

லஷ்மி விலாஸ் வங்கிக்கு வர்த்தகத் தடை விதித்திருப்பது ரிசர்வ் வங்கி தவறான முடிவு என்றும்
எல்.வி.பி வங்கியை டி.பி.எஸ் வங்கி ஏற்கும் திட்டத்தை கைவிட்டு பொதுத்துறை வங்கியுடன் இணைக்க வேண்டும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழக தலைவர் தி.தமிழரசுவும் பொதுச் செயலாளர் என்.ராஜகோபாலும் எல்.வி.பி வங்கி குறித்து ரிசர்வ் வங்கி எடுத்துள்ள முடிவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது, “தமிழகம் உள்பட 16 மாநிலங்களிலும், 3 யூனியன் பிரதேசங்களிலும் 563 கிளைகளுடன் பல பகுதிகளில் 94 வருடங்களாக செயல்பட்டு வரும் லஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாட்டிற்கு 17.11.2020 முதல் வர்த்தகத் தடையை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. வங்கியின் நிதி நிலைமையில் ஏற்பட்டிருக்கும் மோசமான சரிவினால்தான் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக ரிசர்வ் வங்கியின் பத்திரியை செய்தி தெரிவித்துள்ளது.

வங்கியின் வாடிக்கையாளர்கள் யாவரும் தங்கள் கணக்கிலிருந்து 16.12.2020 வரை அதிகபட்சமாக ரூ.25,000-க்கும் மேல் பணம் எடுக்க முடியாது. லஷ்மி விலாஸ் வங்கியை சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் திட்டத்தையும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாகவே லஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாடும் மற்றும் நிதிநிலைமையும் திருப்திகரமாக இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரைமுறையற்று கடன் வழங்கியதும், அதை கறாராக வசூலிக்க தவறியதும்தான் இந்த வங்கியின் சீரழிவுக்கு முக்கியமான காரணமாகும். மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உடனடியாக தலையிட்டு அதனை சரிசெய்ய முயற்சிக்கவில்லை. இதன் காரணமாக வங்கியிலுள்ள பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

யெஸ் வங்கி என்ற தனியார் வங்கியும், டிஎச்எப்எல், ஐஎல்&எப்எஸ் போன்ற வங்கிகளல்லாத நிதி நிறுவனங்களும் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வரும் சூழ்நிலையில் எல்விபி வங்கியை வெளிநாட்டு தனியார் வங்கியுடன் இணைப்பதற்கான மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முயற்சி தவறான போக்காகும். 33 கிளைகளுடன் இயங்கிவரும் டிபிஎஸ் வங்கி, எல்விபி வங்கியை எடுத்துக் கொள்வதால் வாடிக்கையாளர்களின் சேமிப்பு பாதுகாக்கப்படாது. சுமார் 60% கிளைகளை கிராமப்புறத்திலும், சிறு நகரங்களிலும் கொண்டுள்ள எல்விபி வங்கியின் கிளைகள் பெருமளவு மூடப்படும் ஆபத்து உள்ளது. அங்கு பணிபுரியும் 4,000 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பணிப்பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, எல்விபி வங்கியை ஒரு பொதுத்துறை வங்கியுடன் இணைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

எனவே, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் – தமிழ்நாடு கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது:

* எல்.வி.பி வங்கியை ஒரு பொதுத்துறை வங்கியுடன் இணைக்க வேண்டும்.

* கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தொகையை கறாராக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* எல்விபி வங்கியை பொதுத்துறை வங்கியுடன் இணைப்பதால் பொதுத்துறை வங்கிக்கு ஏற்படும் கூடுதல் செலவினத்தை அரசு ஏற்க வேண்டும்.

* எல்விபி வங்கியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

* இந்தியாவில் செயல்படும் அனைத்து தனியார் வங்கிகளையும் உடனடியாக பொதுத்துறை வங்கிகளாக மாற்ற வேண்டும். என்று வலியுறுத்தியுள்ளனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Lakshmi vilas bank issue bank employee association statement

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X