முதன்முறையாக 10,000 புள்ளிகளை கடந்து நிஃப்டி சாதனை - Nifty breaches 10,000 mark for first time ever; Sensex hits new high in opening trade | Indian Express Tamil

முதன்முறையாக 10,000 புள்ளிகளை கடந்து நிஃப்டி சாதனை

தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டி வரலாற்றில் முதன் முறையாக 10,000 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

முதன்முறையாக 10,000 புள்ளிகளை கடந்து நிஃப்டி சாதனை

தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டி வரலாற்றில் முதன் முறையாக 10,000 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

பங்குச் சந்தையில் நிஃப்டி என்ற குறியீடு கடந்த 1996-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது அதன் அடிப்படை மதிப்பு ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஆண்டுதோறும் அதன் மதிப்பு உயர்ந்து வந்தது. அண்மையில் சென்செக்ஸ் 30,000 புள்ளிகளைக் கடந்த நிலையிலும் நிஃப்டி 10,000 புள்ளிகளை தொடாமல் இருந்தது.

இந்நிலையில், தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டி வரலாற்றில் முதன் முறையாக 10,000 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. கடந்த ஒரு மாதகாலமாகவே இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் காணப்படுவதோடு தினம் ஒரு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்றைய வர்த்தகத்தின் போது நிஃப்டி 10,000 புள்ளிகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9,982.05 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்தது.

இதனையடுத்து இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில், 44.90 புள்ளிகள் அல்லது 0.45 சதவீதம் உயர்வுடன் 10,011.30 புள்ளிகளுக்கு சென்று தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டி வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. அதேபோல், மும்பை பங்குச்சந்தை 32,374.30 புள்ளிகளுக்கு சென்று புதிய உச்சத்தை எட்டியது.

வர்த்தக நேர தொடக்கத்தில், ஹீரோ மோட்டோ கார்ப், பார்த்தி ஏர்டெல், எச்.டி.எஃப்.சி வங்கி, டாட்டா ஸ்டீல், ஐசிசிஐ வங்கி, பவர் கிரிட், கோட்டாக் வங்கி, பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, என்டிபிசி, எம்&எம், டாக்டர் ரெட்டீஸ், அதானி போர்ட்ஸ், ஐடிசி லிமிடட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சுமார் 1.28 சதவீதம் வரை உயர்ந்து சிறப்பான வர்த்தகத்தை வெளிப்படுத்தின.

இது தவிர, ஆசிய சந்தைகளில் உள்ள இதர பங்குச் சந்தைகளான ஹாங்காங்-ன் ஹாங் செங் 0.09 சதவீதம் வரையும், ஜப்பானின் நிக்கெய் 0.13 சதவீதம் வரையும் ஷாங்காய் சந்தை 0.32 சதவீதம் வரையும் உயர்ந்தன.

அதேசமயம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்-ன் மதிப்பு 5 பைசாக்கள் வீழ்ச்சியடைந்து 64.39-க்கு வர்த்தகமாகின. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் மத்தியில் அமெரிக்க டாலர்களுக்கு புதிய கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கம் ரூபாய் மதிப்பு மீது எதிரொலித்துள்ளது என பங்கு வர்த்தக டீலர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Nifty breaches 10000 mark for first time ever sensex hits new high in opening trade