ஆர்.சந்திரன்

நாட்டின் மாறி வரும் தேவைக்கு ஏற்ப திட்டமிட வேண்டும் என்ற காரணத்தை முன்வைத்து மாற்றியமைக்கப்பட்டு, புதிய பெயர் சுட்டப்பட்ட நிதி ஆயோக், இப்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. எந்த அடிப்படைக் காரணமும் இல்லாமல், தனியார் மயமாக்கலுக்கு பரிந்துரைக்க, ‘அந்த அமைப்பு என்ன, தனியாரின் செய்தித் தொடர்பாளர் வேலை செய்கிறதா?’ என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

திட்டக்கமிஷன் என்ற பெயரில் – நாட்டின் எதிர்கால தேவைகள் குறித்து முன்னதாகவே யோசித்து திட்டமிடவும், மத்திய அரசின் திட்டச் செலவுகளுக்கு எவ்வித முன்னுரிமை கொடுப்பது என்பதையும் பரிந்துரைக்க உருவாக்கப்பட்ட அமைப்பை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றவுடன், முற்றிலும் திருத்தி அமைத்தனர். அப்போது, அதற்கு நிதி ஆயோக் என பெயர் மாற்றமும் செய்தனர். அந்த அமைப்பின் மீதுதான் தற்போது இந்த விமர்சனம் வைக்கப்படுகிறது.

இதன்படி, “தற்போது விமானப் போக்குவரத்துத் துறையில் பல தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்பதால், அரசுக்கு அத்துறையில் வேலை இல்லை எனவும், அதனால், அரசு விமான நிறுவனத்தைத் தனியார் மயமாக்கிவிடலாம் எனவும் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வாதம் மிகவும் குழந்தைத்தனமாக உள்ளதோடு, இதே வகையில் யோசித்தால், பல அரசு நிறுவனங்களை நாம் மூட வேண்டிவரும். தனியார்மயமாக்கலின் செய்தி தொடர்பு அதிகாரி போல நீதி ஆயோக் செயல்படுகிறது” என, இத்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு விமர்சனம் செய்துள்ளது. அதோடு, தனியார்மயமாக்கலுக்கு ஆதரவாக 11 காரணங்களை முன்வைத்துள்ள இந்த அமைப்பு, அவற்றில் எதேனும் ஒன்றுக்காவது, ஆதாரப்பூர்வமான வாதங்களை முன் வைக்கிறதா என்றால், எதுவுமே இல்லை என்பதும் கவலையளிக்கிறது என பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

தற்போது ஏர் இந்தியா, இந்திய விமானப் போக்குவரத்து துறையின் 14 சதவீத சந்தைப் பங்கை மட்டும்தான் பெற்றுள்ளது என்பதால், அரசு இதில் தீவிர கவனம் செலுத்தவில்லையோ… அரசின் முன்னுரிமைத்துறையாக இது இல்லையோ எனவும் சந்தேகம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூறியுள்ளது. 2017ம் ஆண்டு ஜூன் மாதமே, மத்திய அமைச்சரவை இந்த நிறுவனத்தை தனியார் மயமாக்க முடிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

×Close
×Close