பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி : 63 நாளில், 143 மோசடி புரிந்துணர்வு கடிதங்கள்!

இந்த மோசடி மூலம் SWIFT மின்னணு பரிமாற்ற முறையை கையாண்டுள்ளார்

11,500 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ள மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், தற்போது நடந்து வரும் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன்படி, இந்த சதி செயலுக்கு துணை நின்ற இவ்வங்கிக் கிளையின் ஓய்வுபெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டியே. இந்த மோசடி மூலம் SWIFT மின்னணு பரிமாற்ற முறையை கையாண்டுள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் பணி ஓய்வு பெற்றுள்ள அவர், அதற்குமுன், சரமாரியாக போலி புரிந்துணர்வுக் கடிதங்களை வழங்கியுள்ளார்.

2011ம் ஆண்டே, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹூல் சோக்சியின் நிறுவனங்களுக்கு முறைகேடாக கடன்உதவி செய்ய, இத்தகைய மோசடி நடைமுறை தொடங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், 2011 முதல், கடந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி வரை – கிட்டத்தட்ட 6 ஆண்டுகளில் – மொத்தமாக 150 புரிந்துணர்வு கடிதங்கள் மூலம், 6500 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் தொடங்கி…, கோகுல்நாத் ஷெட்டி ஓய்வு பெற்ற மே மாதத்தின் 2 தேதி வரை, – அதாவது 63 நாட்களில் கிட்டத்தட்ட 143 புரிந்துணர்வு கடிதங்களும், அதன்மூலமாக 3000 கோடி ரூபாயும் கடனாக அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வங்கி விடுமுறை நாள் தவிர, மற்ற எல்லா நாட்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும், சராசரியாக நாளொன்றுக்கு 2 புரிந்துணர்வு கடிதங்கள் வீதம் வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுதவிர, இந்த புரிந்துணர்வு கடிதங்கள் வழக்கமாக 90 நாட்கள் கால அவகாசம் கொண்டதாக இருக்கும் என்பதே பொது நடைமுறை. ஆனால், தற்போது அந்த கால அவகாசம், எல்லா நடைமுறைகளையும் மீறி, “360 நாட்களுக்கு ஏற்றவை” என்றும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதோடு, இந்த கடிதங்கள் கோகுல்நாத் ஷெட்டி ஓய்வுபெற்றுவிட்டாலும், நிரவ் மோடி மற்றும் சோக்சிக்கு நிதித்தேவையின்போது கஜானாவின் கதவுகள் அடுத்த ஓராண்டுக்கு எப்போதும் திறந்திருக்கும்படி பார்த்துக் கொள்ள முன்னதாகவே திட்டமிட்டு செய்யப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுதவிர, தற்போது நடக்கும் விசாரணையின் வலையில் சிக்காத இவ்வங்கி கிளையின் ஊழியர் ஒருவர், “முறையான அங்கீகாரம்  இன்றி, போலியான புரிந்துணர்வு கடிதம் தருவதும், அதன்மூலம் பணம் கைமாறுவதும் இப்போது புதிதாக நடக்கும் காரியம் அல்ல; நீண்ட நாட்களாகவே இவ்விதமான காரியங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன” என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close