தொடர் வைப்பு நிதி கணக்கு தொடங்க வேண்டுமா? இதோ முழு விவரம்

தபால் நிலையங்களைப் பொறுத்தமட்டில், 5 ஆண்டுத் தொடர் வைப்புநிதி கணக்குகள் மட்டுமே உள்ளன

பெரிய முதலீடுகள் செய்வதற்கு சிறு சேமிப்புத் திட்டங்கள் தான் தொடக்கப் புள்ளியாக இருக்கும். இது போன்ற ஒரு திட்டம் தான் தொடர் வைப்பு நிதி கணக்கு. மொத்தமாகப் பணத்தை முதலீடு செய்வதைக் காட்டிலும் இந்தத் திட்டத்தில் தொடர்ந்து பணம் செலுத்தி வைப்பு நிதிக்கான வட்டிச் சலுகைகளை அனுபவிக்கலாம்.

இந்தத் தொடர் வைப்புநிதி கணக்கில் தனிநபர் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பணம் செலுத்திவர வேண்டும். ஆனால் நிரந்தர வைப்புநிதியை போல இதிலும் பணம் முடக்கப்படும். இதன் மூலம் சேமிப்பு பழக்கமும் வளரும். இந்தியாவில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்திய அஞ்சல் ஆகிய இரண்டும் சேமிப்பு அல்லது தொடர் வைப்புநிதி கணக்குகளைத் துவங்க மிகவும் பிரபலமான வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றன.

எஸ்.பி.ஐ அல்லது இந்திய அஞ்சலில் தொடர் வைப்புநிதி கணக்கை திறக்க, கே.ஒய்.சி (KYC -Know your customer) தேவைகளைப் பூர்த்திச் செய்யும் விதமாகத் தனிநபர் மற்றும் இருப்பிட ஆதாரங்களை முதலில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை போன்ற ஆவணங்களுடன், உங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் தேவைப்படும். நீங்கள் ஏற்கனவே எஸ்.பி.ஐ வங்கியின் வாடிக்கையாளர் எனில், இணையவழி வங்கிச்சேவையின் மூலம் எளிதில் தொடர் வைப்புநிதி கணக்கை துவங்கலாம்.

எனவே தொடர் வைப்புநிதி கணக்கை துவங்க சேமிப்பு/நடப்பு கணக்கு அவசியம். எந்தவொரு தனிநபரும் இந்த இரு நிறுவனங்களிலும் தொடர் வைப்புநிதி கணக்கை துவங்கலாம். கூட்டு கணக்குகளும் அனுமதிக்கப்படுகின்றன. தபால் நிலையங்களில் குழந்தைகளின் பெயரில் கூடத் தொடர் வைப்புநிதி கணக்கை துவங்கலாம். 10 வயது குழந்தைகள் தங்கள் கணக்குகளைத் தாங்களே பராமரிக்கலாம்.

எஸ்.பி.ஐ வங்கியை பொறுத்தவரை இரண்டுவித தொடர் வைப்புநிதி கணக்குகளை வழங்குகிறது. வழக்கமான மற்றும் விடுமுறை காலச் சேமிப்புக் கணக்குகள். வழக்கமான கணக்குகள் (Regular account) வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்ப தொடர் வைப்புநிதியை முதலீடு செய்ய வழிவகுக்கிறது.

எஸ்.பி.ஐ ‘ஃபிளக்ஸி'(Flexi) டெபாசிட்’என்ற பெயரில் இன்னொரு வகைக் கணக்கும் உள்ளது. இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப முதலீடு செய்யும் பணத்தின் அளவை மாற்றிக்கொள்ளலாம். தொடர் வைப்புநிதி கணக்கை போலவே இருக்கும் இத்திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகளாக இருக்கலாம். மேலும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ 5,000 லிருந்து அதிகபட்சமாக ரூ50,000வரை முதலீடு செய்யலாம்.

தபால் நிலையங்களில் 5 ஆண்டுக்காலத் தொடர் வைப்புநிதி கணக்குகள் திறக்க முடியும். குறைந்தபட்ச மாதாந்திர வைப்புநிதி எஸ்.பி.ஐ கணக்கைப் பொறுத்தவரை, மாதம் குறைந்தபட்சமாக ரூ.100 முதலீடு செய்யவேண்டும். அதற்கு அதிகமாக முதலீடு செய்யும் போது அந்தத் தொகை ரூ10 ன் பெருக்குத்தொகையாக இருப்பது அவசியம். தபால்நிலையங்களில் மாதாமாதம் குறைந்தபட்சமாக ரூ.10 முதலீடு செய்யவேண்டும். அதற்கு அதிகமாக முதலீடு செய்யும் போது அந்தத் தொகை ரூ.5 ன் பெருக்குத்தொகையாக இருப்பது அவசியம்.

இவை இரண்டிலும் அதிகபட்ச முதலீடு இவ்வளவு தான் என்று இல்லை. எஸ்.பி.ஐ வங்கி வழங்கும் தொடர் வைப்புநிதியின் கால அளவு குறைந்தபட்சம் 12 மாதங்களும் அதிகபட்சமாக 120 மாதங்களாக இருக்கலாம். தபால் நிலையங்களைப் பொறுத்தமட்டில், 5 ஆண்டுத் தொடர் வைப்புநிதி கணக்குகள் மட்டுமே உள்ளன.

எஸ்.பி.ஐ-யை பொறுத்தவரையில் பகுதி வைப்புநிதியை திரும்பப் பெற முடியாது. தபால் நிலையங்களில் குறைந்தபட்சம் ஓராண்டு கடந்தபின்னர் 50% தொகையைத் திரும்பப் பெறமுடியும்.

உங்கள் மாதாந்திர வைப்புநிதியை செலுத்த தவறும் போது அதற்குக் கட்டணம்/அபராதம் விதிக்கப்படும்.

எஸ்.பி.ஐ வங்கியை பொறுத்தவரை, 5 ஆண்டுகளுக்குக் குறைவாக உள்ள தொடர் வைப்புநிதிக்கு மாதத்திற்கு, ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் ரூ 1.50 என்ற விகிதத்திலும், 5 ஆண்டுகளுக்கு அதிகமாக உள்ள தொடர் வைப்பு நிதிக்கு மாதத்திற்கு ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் ரூ 2 என்ற விகிதத்திலும் அபராதம் விதிக்கப்படும்.

தபால் நிலையத்தை பொறுத்தவரை, தொடர் வைப்புநிதியின் ஒவ்வொரு 5 ரூபாய்க்கும் 5 பைசா என்ற விகிதத்திலும் அபராதம் விதிக்கப்படும். 4 தடவைக்கு மேல் வைப்புநிதியை செலுத்தத் தவறினால் தொடர் வைப்புநிதி கணக்கு முடித்து வைக்கப்படும். அடுத்தச் சில மாதங்களில் கணக்கை மீட்கவில்லை என்றால் நிரந்தரமாக முடக்கப்படும்.

இந்தியா அஞ்சலின் வட்டி விதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கப்படும். வட்டிவிகிதங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, தபால் நிலையங்களின் விகிதங்கள் சிறப்பாக உள்ளன. இவை 5 ஆண்டுகாலக் கணக்கிற்கு 7.3% வட்டி தருகிறது. எஸ்.பி.ஐ வங்கியைப் பொறுத்தவரை, உங்கள் ஃபிக்சட் டெபாசிட் கணக்கிற்கு என்ன வட்டி விகிதமோ, அதே வட்டியே இதற்கும் கொடுக்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close