SBI News: பாரத ஸ்டேட் வங்கி தனது ஓராண்டு எம்.சி.எல்.ஆர். விகிதத்தை 10 அடிப்படைப் புள்ளிகள் குறைத்திருக்கிறது. இதனால் வீட்டுக் கடன் வட்டி விகிதம் இன்னும் குறைகிறது. பாரத ஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து மற்ற வங்கிகளும் இந்தச் சலுகையை அளிக்கின்றன.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ( State Bank of India- SBI) வீட்டுக் கடன் வழங்குவதிலும் முன்னணி வங்கியாக திகழ்கிறது. பெரும்பாலும் எஸ்.பி.ஐ.-யில் வீட்டுக் கடன்கள் எம்.சி.எல்.ஆர். (marginal cost of funds based lending rate) ஓராண்டு கால புள்ளிகள் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களில் பலர் எம்.சி.எல்.ஆர். முறையில் இருந்து ரெப்போ விகிதம் மற்றும் MSME கடன் முறைகளுக்கு மாறினர். கடந்த அக்டோபர் 1 முதல் இந்த மாற்றம் நடந்தது. எனினும் இன்னமும் ஏராளமானோர் எம்.சி.எல்.ஆர் முறையில் நீடிக்கிறார்கள்.
State Bank of India News In Tamil- பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன்
இந்தச் சூழலில் ஸ்டேட் வங்கி கடந்த 9-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ஓராண்டு எம்.சி.எல்.ஆர் விகிதத்தில் 10 அடிப்படைப் புள்ளிகளை குறைத்திருக்கிறது. இதன் மூலமாக எம்.சி.எல்.ஆர். விகிதம் 7.90 சதவிகிதம் ஆகியிருக்கிறது. டிசம்பர் 10 முதல் இது அமலுக்கு வந்தது. இந்த நிதியாண்டில் தொடர்ச்சியாக 8-வது முறையாக இப்படி எம்.சி.எல்.ஆர் விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த பலனை வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது ஸ்டேட் வங்கி.
இதேபோல பாங்க் ஆப் இந்தியா 20 அடிப்படைப் புள்ளிகளை குறைத்து, தனது எம்.சி.எல்.ஆர் விகிதத்தை 8.20 சதவிகிதமாக நிறுத்தியிருக்கிறது. இதற்கிடையே ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை 5.15 சதவிகிதமாக மாற்றாமல் வைத்திருக்கிறது.
புதிய கடன்களைப் பொறுத்தவரை ஸ்டேட் வங்கி, ரெப்போ பிளஸ் 2.65 சதவிகிதம் என கணக்கிடுகிறது. வீட்டுக் கடன்களுக்கு, வாங்குகிற நபர்களைப் பொறுத்து 15 முதல் 75 அடிப்படைப் புள்ளிகள் வரை சேர்த்துக் கொள்கிறது ஸ்டேட் வங்கி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.