ஸ்நாப்டீல் - பிளிப்கார்ட் இணைப்பில் இழுபறி!!

பிளிப்கார்ட் போடும் சில நிபந்தனைகளால் ஸ்நாப்டீல் - பிளிப்கார்ட் நிறுவனங்கள் இணைப்பில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.

பிளிப்கார்ட் போடும் சில நிபந்தனைகளால் ஸ்நாப்டீல் – பிளிப்கார்ட் இணைப்பில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.

ஸ்நாப்டீல் நிறுவனத்தில் சாப்ட்பேங்க் 30 சதவீத பங்குகளும், நெக்ஸஸ் 10 மற்றும் கலாரி 8 சதவீத பங்குகளையும் வைத்திருக்கின்றன. ஜப்பானைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான சாப்ட்பேங்க் ஸ்நாப்டீல் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்துள்ளதால், ஸ்நாப்டீல் நிறுவனத்தை விற்பதற்கான பேச்சுவார்த்தையை கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

தொடர்ந்து, ஸ்நாப்டீலை, பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக, ஸ்நாப்டீல் நிறுவனர்கள், இயக்குனர் குழு, முக்கிய முதலீட்டாளரான கலாரி கேபிடல் ஆகியவற்றிடம் கடந்த ஏப்ரல் மாதமே சாப்ட்பேங்க் அனுமதியை பெற்று விட்டது. பின்னர், அதற்கு அடுத்த மாதத்தில் மற்றொரு முதலீட்டு நிறுவனமான நெக்ஸஸ் நிறுவனமும் விற்பனைக்கு ஒப்புக் கொண்டது.

நிறுவனங்கள் இணைப்பு தொடர்பாக முதலீட்டாளர்கள், நிறுவனர்களிடையே பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்துவிட்டன. ஆனாலும், இதுவரை இணைப்பு என்பது கைகூடவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், பிளிப்கார்ட் நிறுவனம் முன்வைக்கும் இரண்டு விதிமுறைகளும் இணைப்பு இழுபறிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இரண்டு நிறுவனங்களும் கருத்து கூற மறுத்து விட்டது.

எனினும், “நிறுவன இணைப்பு பின்னர், நிதி இழப்பு உள்ளிட்ட ஏதேனும் இழப்பு ஏற்பட்டு விடாமல் இருக்க இரண்டாண்டுகளுக்காவது இழப்பு காப்பீடு வழங்க வேண்டும். பிளிப்கார்ட் நிறுவனம் செய்யும் தொழில் போன்றே தொழில் செய்யும் வேறு நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யாமல் தடுக்கும் ஒப்பந்தம் உள்ளிட்ட இரண்டுக்கும் ஒப்புக் கொள்ள வேண்டும் என பிளிப்கார்ட் நிறுவனம் கோரி வருகிறது. ஆனால், இதனை ஏற்க ஸ்நாப்டீல் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது” என ஸ்நாப்டீல் நிறுவனத்துக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

நிர்வாகக் குழு மற்றும் பங்குதாரர்கள் மத்தியில் இந்த விதிமுறைகள் ஏதேனும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என கூறி ஸ்நாப்டீல் வழக்கறிஞர்கள் தொடர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இணைப்பில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதேபோல், நல்ல ஒரு விலைக்காகவும் பிளிப்கார்ட் நிறுவனத்திடம் ஸ்நாப்டீல் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முன்னதாக, ஸ்நாப்டீல் நிறுவனத்துக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிட்ட பிளிப்கார்ட் நிறுவனம், பேச்சுவார்த்தைக்கு பின்னர், 850 மில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிட்டுள்ளது. ஆனால், ஒரு பில்லியன் அமெரிக்க டாலராவது தேவை என ஸ்நாப்டீல் நிறுவனம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close