"கவுதம் அதானிதான், இருப்பதிலேயே மிகப் பெரிய வாராக்கடனாளி" - சுப்ரமணிய சுவாமி குற்றச்சாட்டு

வங்கி மோசடி, பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் என சொல்லப்படும் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார், சு.சாமி

ஆர்.சந்திரன்

வங்கி மோசடி செய்திகளுக்கு பஞ்சமில்லா காலமாகிவிட்ட இந்நாளில், பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் என சொல்லப்படும் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை முன்வைப்பது, பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரான சுப்ரமணியம் சுவாமிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது குற்றச்சாட்டின்படி, நாட்டில் தற்போதுள்ள மிகப் பெரிய வாராக்கடனாளி கவுதம் அதானிதான் எனவும், அந்த கடன்தொகைக்கு அவரைப் பொறுப்பாளியாக்காவிட்டால், பொதுநல வழக்கு தொடரப் போவதாகவும் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

சுவாமியின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் அதானி குழுமம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், வங்கிக்கடனை எவ்வளவு ஒழுங்காக திருப்பிச் செலுத்துகிறோம் என்பது மிக முக்கியம். அதானிக் குழுமத்தைப் பொறுத்தவரை, இதில் நாங்கள் சரியாகவே நடந்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

அதோடு, நீண்டகால தேவைகளுக்கான கடனுக்கு 50 சதவீதத்துக்கும் குறைவாகவே சுமார் 34,000 கோடி வரை கடன்பெற்று அதை சரியாக செலுத்திக் கொண்டிருக்கிறோம் எனவும் அவர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது 1,10,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட சொத்துகளை உருவாக்கியுள்ளதாகச் சொல்லும் அதானி குழுமத்தின் பட்டியலிட்ட நிறுவனங்களின் மதிப்பு 40,000 கோடி ரூபாய் எனவும் அதானி குழுமச் சார்பில் சொல்லப்படுகிறது.

ஆனால், அதானிக் குழும நிறுவனங்களான அதானி பவர் 47.609 கோடி ரூபாயும், அதானி டிரான்ஸ்மிஷன் 8,356 கோடியும், அதானி என்டர்பிரைஸஸ் 22,424 கோடியும் கடனில் உள்ளதாக ப்ளூம்பெர்க்கை மேற்கோள் காட்டி வணிக நாளேடு ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close