பெற்றோர்களுக்கு குழந்தைகளின் எதிர்காலத்தை குறித்த கவலை எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். குறிப்பாக பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோருக்குக் கூடுதல் கவலை இருக்கும்.
இது அவர்களுக்கான செய்தி தான். குழந்தைகளுக்கு தீபாவளி பரிசாக எதிர்காலத்தைச் சிறப்பாக மாற்றிடும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் இன்றே முதலீடு செய்ய தொடங்குங்கள். தினமும் 1 ரூபாய் சேமிப்பதன் மூலம், அவர்கள் வாழ்க்கையைப் பிரகாசமாக மாற்றிட முடியும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது நீண்ட கால முதலீட்டு திட்டமாகும். இதில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் மகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து நீங்கள் கவலை ஏதும் இல்லாமல் இருக்க முடியும். இந்த திட்டத்தின் அதிக வட்டி கிடைக்கிறது. எவ்வித ஆபத்தும் கிடையாது. மகளின் எதிர்காலம் சிறப்பாகுவது மட்டுமின்றி வருமான வரியும் மிச்சப்படுத்த முடிகிறது. இத்திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டு ஆகும்.
மத்திய அரசின் பிரபலமான திட்டம் இது. சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் 10 வயது வரையிலான மகள் பெயரில் கணக்கைத் திறக்கலாம். இதில், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
மகளுக்கு 18 வயது ஆகும் வரை இந்தத் திட்டத்தில் உங்கள் முதலீடு லாக் செய்யப்பட்டிருக்கும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் திட்டத்திலிருந்து மொத்தத் தொகையில் 50% திரும்பப் பெறலாம். அதை மகள் பட்டப்படிப்பு அல்லது மேல் படிப்புக்கு பயன்படுத்தலாம். அவளுக்கு 21 வயது ஆகும்போது தான் மொத்த பணத்தையும் திரும்பப் பெற முடியும்.
வட்டி விகிதம்
இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வருமான வரிச் சட்டம் 80 சி-இன் கீழ் வரி விலக்கு கிடைக்கிறது தற்போது இதற்கு ஆண்டுக்கு 7.6% வட்டி வீதம் அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு வீட்டில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு திறக்கலாம். இரட்டையர் இருந்தால், 3 மகள்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
திட்டத்தின் பலன்
நீங்கள் மாதம் 3 ஆயிரம் ரூபாய் சேமித்தால், ஆண்டிற்கு 36 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள். இப்படி நீங்கள் 14 ஆண்டுகள் முதலீடு செய்தால், 7.6% வட்டியுடன் ரூபாய் 9 லட்சத்து 11 ஆயிரத்து 576 ரூபாய் கணக்கில் இருக்கும். இந்த பணத்தை 21 ஆண்டுகள் கழித்து எடுக்கையில், ரூபாய் 15 லட்சத்து 22 ஆயிரத்து 221 ரூபாயாக கைக்கு கிடைக்கும்.
எப்போது முதலீடு தொடங்க வேண்டும்?
உங்கள் மகளுக்கு 10 வயதாகும் போது முதலீடு செய்யத் தொடங்கினால், 11 வருடங்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். மகளின் 5 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால் 16 வருடங்கள் முதலீடு செய்யலாம். அதனால் முதிர்வு தொகை அதிகரிக்கும். நீங்கள் 21 வருடங்கள் முழுவதுமாக பணத்தை டெபாசிட் செய்ய வேண்டியதில்லை, கணக்கு துவங்கியதிலிருந்து 15 ஆண்டுகளுக்கு மட்டுமே பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும்.
இன்றைய தினமே தீபாவளி பரிசாக உங்களின் மகளின் எதிர்காலத்தை வெளிச்சமாக்கும் இத்திட்டத்தில் இணையுங்கள்….
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil