/indian-express-tamil/media/media_files/2025/09/15/scott-bessent-2025-09-15-05-29-05.jpg)
ஜி7 கருவூலத் துறை செயலர் ஸ்காட் பெசென்ட், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் நடந்த நிகழ்வின் போது பேசுகிறார். Photograph: (AP Photo)
US G7 Oil Tariffs: உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர, ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளின் மீது அழுத்தத்தை அதிகப்படுத்த ஜி7 நாடுகளை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அமெரிக்க கருவூலத் துறை வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ரஷ்ய எண்ணெய் வாங்குபவர்கள் மீது தடைகளை அதிகரிக்க ஜி7 நாடுகளிடமிருந்து "உறுதிமொழிகளை" அமெரிக்கா பெற்றுள்ளது. ரஷ்ய எண்ணெயை அதிகம் வாங்குபவர்கள் சீனா மற்றும் இந்தியா நாடுகள் ஆகும்.
"புதினின் போர் இயந்திரத்திற்கு நிதி ஆதாரமாக இருக்கும் வருவாயை மூலத்திலேயே துண்டிக்கும் ஒரு ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் மட்டுமே, இந்த அர்த்தமற்ற கொலையை முடிவுக்கு கொண்டுவர போதுமான பொருளாதார அழுத்தத்தை நம்மால் ஏற்படுத்த முடியும்," என்று அமெரிக்க கருவூலத் துறை செயலர் ஸ்காட் பெசென்ட் மற்றும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜாமிசன் கிரீர், ஜி7 நிதி அமைச்சர்களிடம் கூறியதாக கூட்டு அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியா மற்றும் சீனா மீது அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்காவின் அழைப்பு, வாஷிங்டன் இந்தியப் பொருட்களின் மீதுள்ள வரியை திடீரென 50% ஆக உயர்த்திய சில வாரங்களுக்குப் பிறகு வருகிறது. இந்த வரி சீனாவை விட (30%) அல்லது வியட்நாம் மற்றும் வங்கதேசம் போன்ற மற்ற போட்டியாளர்களை விடவும் (20%க்கும் குறைவான வரிகளைச் சந்திப்பவர்கள்) அதிகமாகும். இதனால், அதிக மனித உழைப்பு தேவைப்படும் துறைகளில் வேலை இழப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளதுடன், வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளையும் சிக்கலாக்கியுள்ளது.
"அதிபர் டிரம்பின் துணிச்சலான தலைமையின் காரணமாக, அமெரிக்கா ஏற்கனவே ரஷ்ய எண்ணெய் வாங்குபவர்களுக்கு எதிராக பெரும் நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர உறுதியுடன் இருப்போம் என எங்கள் ஜி7 நாடுகளின் கூட்டாளிகள் அளித்த உறுதிமொழிகளால் நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம். இந்த முக்கியமான நேரத்தில் அவர்கள் எங்களுடன் இணைந்து உறுதியான நடவடிக்கையை எடுப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்," என்று பெசென்ட் மற்றும் கிரீர் தெரிவித்தனர்.
ஜி7 என்பது அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு முறைசாரா கூட்டமைப்பாகும்.
வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஃபாக்ஸ் நியூஸ் உடனான நேர்காணலில், ரஷ்ய எண்ணெயை வாங்குவதால் இந்தியா மீது வரி விதிப்பது எளிதான முடிவு அல்ல என்றும், இது புது டெல்லியுடன் ஒரு பிளவை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.
"பாருங்கள், இந்தியா தான் அவர்களின் மிகப்பெரிய வாடிக்கையாளர். அவர்கள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது 50% வரி விதித்தேன். இது செய்ய எளிதான விஷயம் அல்ல. இது ஒரு பெரிய விஷயம், மேலும் இது இந்தியாவுடன் ஒரு பிளவை ஏற்படுத்துகிறது. ஆனால் நான் அதை ஏற்கனவே செய்துவிட்டேன். நான் நிறைய செய்துள்ளேன். இது நமது பிரச்னையை விட ஐரோப்பாவின் பிரச்சனை என்பதை நினைவில் கொள்ளுங்கள்," என்று டிரம்ப் கூறினார்.
எனினும், இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை தொடரும் என உறுதியாகக் கூறி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் எண்ணெய் கொள்முதல்கள் பொருளாதார மற்றும் வணிகக் காரணங்களால் தீர்மானிக்கப்படுகின்றன என்று கூறினார்.
டிரம்ப் நிர்வாகத்தால் இந்தியப் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட 50% வரியின் தாக்கம், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்களால் ஓரளவுக்கு ஈடு செய்யப்படும் என்றும் நிதியமைச்சர் கூறினார். இந்த சீர்திருத்தங்களில் பல பொருட்களுக்கான மறைமுக வரி விகிதங்களை எளிமையாக்குதல் மற்றும் குறைத்தல் ஆகியவை அடங்கும். அதிக அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "கை கொடுக்க" அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று சி.என்.என் -நியூஸ்18 என்ற தொலைக்காட்சி செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் சீதாராமன் கூறினார்.
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோர் ஆகும், மேலும் அதன் தேவையில் சுமார் 88% பூர்த்தி செய்ய இறக்குமதியை நம்பியுள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய், பொதுவாக தள்ளுபடி விலையில் கிடைப்பதால், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவுக்கு பில்லியன் கணக்கான டாலர் அந்நிய செலாவணியை சேமிக்க உதவியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us