Advertisment

பொறியியல் மோகம் குறைந்ததா? என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள்?

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anna Univesity Engineering Colleges, Anna Univesity News in Tamil, Anna Univesity Latest News in Tamil, அண்ணா பல்கலைக்கழகம்

Anna Univesity Engineering Colleges, Anna Univesity News in Tamil, Anna Univesity Latest News in Tamil, அண்ணா பல்கலைக்கழகம்

Anna University News: தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பொறியியல் இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு அரசு தேவையில்லாமல் இருக்கிற பொறியியல் கல்லூரிகளை  மூட சொல்லிவிடலாம். அரசாங்கம் நடத்துக்கிற கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இது ஒன்றுதான் இந்த பிரச்னைக்கு தீர்வு என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் உள்பட மொத்தம் 479 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 2019 ஆம் கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டில் மொத்தம் 1,72,940 இடங்கள் கிடைத்தன. இந்த இடங்களில் 83,396 இடங்கள் நிரம்பியுள்ளதாகவும் 89,544 இடங்கள் காலியாக உள்ளதாகவும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் டி.புருஷோத்தமன் தெரிவித்துள்ளார். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் கூடுதலாக 6,396 பேர் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது.

ஒரு காலத்தில் பொறியியல் படிப்பது என்பது பலருடைய கனவாக இருந்தது. பொறியியல் படிப்பு என்பது பல மாணவர்களின் லட்சியமாக இருந்தது. இதனால், பல மாணவர்கள் இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த காலங்கள் உண்டு. ஆனால், 2000-க்கு பிறகு தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிக அளவில் தோன்றின. இதனால், தமிழகத்தில் பொறியியல் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அப்போது, பொறியியல் படித்த மாணவர்கள் நல்ல வேலை கிடைத்து கை நிறைய சம்பாதிக்கவும் செய்தனர்.

2000 ஆண்டுகளின் இறுதியில் உலக அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, பல பொறியியல் படித்த இளைஞர்கள் வேலை இழந்தனர். பொறியியல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் குறையத் தொடங்கியது. தனியார் பொறியியல் கல்லூரிகளில் லட்சக் கணக்கில் செலவு செய்து பொறியியல் படித்தவர்கள் ரூ.10,000 சம்பளத்துக்கு வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதன் பிறகுதான், மாணவர்களிடையே பொறியியல் படிப்பு மீதான ஆர்வமும் குறையத் தொடங்கியது. இதனால், பல தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. ஆனாலும், இன்னும் ஐஐடி, என்.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களில் படிக்க மாணவர்களிடையே ஆர்வம் அப்படியேதான் இருக்கிறது. இதனைக் குறிப்பிட்டு, பொறியியல் படிப்பின் தரம், பொறியியல் கல்லுரிகளின் தரம் குறைந்ததே மாணவர்கள் பொறியியல் படிக்க முன்வராததற்கு காரணம் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டாததற்கு என்ன காரணம் என்பது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஐஇ தமிழுக்கு பேசுகையில், “பொதுவாக நீட் தேர்வு வந்த பிறகு பிளஸ் 1-இல் அறிவியல் பாடப் பிரிவுகளை தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால், பொறியியல் படிக்க வருகிற மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. முதலில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கிற 16 - 17 வயது மாணவர்களுக்கு தகுந்தாற்போல், பாடத்திட்டங்களை வைப்பதற்கு பதிலாக அதிக பாடச்சுமைகளை ஏற்றி மாணவர்களை மிரட்டிவிட்டார்கள். அதனால், அறிவியல் பாடப்பிரிவை தேர்வு செய்யும் மாணவர்கள் குறைந்துவிட்டார்கள். இதனால், பொறியியல் படிப்புக்கு தயாராக முடியாது என்று பலரும் ஒதுங்கிவிட்டார்கள்.

இரண்டாவது, பொறியியல் கல்லூரிகளில் படிக்கிற மாணவர்களை பொறியாளர்களாக ஆக்குவோம் என்று எந்த கல்லூரியும் சொல்லவில்லை. கேம்பஸ் இண்டர்வியுவை வைத்தே ரேங்கிங் கொடுக்கிறார்கள். அந்த கேம்பஸ் இண்டர்வியுவில் செலக்ட் ஆனவர்களில் பொறியாளர்களாக ஒரு சிலரைத் தவிர மற்றவர்களால் சிறந்து விளங்க முடியவில்லை.  கேம்பஸ் இண்டர்வியுவில் தேர்வாகதவர்களுக்கு எந்த விதமான வேலையும் கிடைக்கவில்லை. பலர் பொறியியல் படிப்பை நான்கு ஆண்டுகள் நிறைவு செய்த பின்னரும், அவர்கள் தேர்ச்சி பெறாததால் படிப்பை முடிக்க முடியவில்லை. பொறியியல் படிப்பில் சேர்ந்த சில மாணவர்கள், பொறியியல் கல்விக்கட்டணம் செலுத்த முடியாத காரணத்தாலோ அல்லது வங்கியில் கல்விக்கடன் எதிர்பார்த்தோ கிடைக்காத மாணவர்கள் படிப்பை தொடர முடியாமால் பாதியில் கைவிட்டுள்ளனர். இதைப்பற்றியெல்லாம், எந்த ஆய்வும் இல்லை. அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளாக, பொறியியல் படித்த மாணவர்கள் என்னவானார்கள், பொறியியல் படிப்பு பற்றி நிலவரம் என்ன என்று எந்த ஆய்வுகளும் இல்லாமல் இருக்கிறது. அதனால், முதலில் சந்தையில் பொறியியல் படிப்புக்கு வேலைவாய்ப்பு, வரவேற்பு இருக்கிறது என்றபோது நிறையபேர் சேர்ந்தார்கள். இப்போது, பொறியியல் படிப்புக்கு சந்தையில் வேலைவாய்ப்பு இல்லை என்று கூறும்போது யாரும் சேர முன்வரவில்லை. இதுதான் பொறியியல் படிப்பில் யாரும் சேர முன்வராததற்கு காரணம்.

அடுத்ததாக, தனியார் பொறியியல் கல்லூரிகளில் என்ன கட்டமைப்பு வசதி இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அண்ணா பல்கலைக்கழகம் அளிக்கிற பட்டியல்படி அந்த கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் அதன்பிறகு அந்த கல்லூரியில் எந்த அடிப்படை கட்டமைப்பு வசதியும் இல்லாதது தெரியும்போது என்ன சிரமப்பட்டார்கள் என்பது குறித்து கூறும்போது அடுத்து வரும் மாணவர்கள் அந்த கல்லூரியை, அந்த துறையை தேர்வு செய்யாமல்தானே போவார்கள்.

நாட்டில் பொறியாளர்களுக்கு தேவை இருக்கிறதா என்று கேட்டால் பொறியாளர்களுக்கான தேவை என்றைக்குமே இருக்கத்தான் செய்யும். மக்களுக்கு சரியான தகவல்கள் இல்லாமல் போகும்போது, பொறியியல் படித்தவர்கள் படும் சிரமத்தை பார்க்கிறபோது நாமும் அதில் சேர்ந்து சிரமப்பட வேண்டாம் என்றுதான் முடிவு செய்வார்கள்” என்று கூறினார்.

பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்க்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று கேட்டபோது பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், “அரசு நடத்துகிற பொறியியல் கல்லூரிகளைத் தவிர மற்ற அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் மூடிவிடலாம். ஒரு கல்லூரி என்றால் போதுமான ஆசிரியர் வேண்டும் இல்லையா; 500 தனியார் கல்லூரிகள் இருக்கிறது என்றால், ஒரு பாடப்பிரிவுக்கு எத்தனை ஆசிரியர் தேவையோ அத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்களா; மொத்த கல்லூரியில் தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்தார்களா? என்றால் இல்லை. ஒரு கல்லூரியை மாணவர்கள் தேர்வு செய்கிறார்கள் தேர்வு செய்யாதது என்பது இரண்டாம் பட்சம்தான். இவையெல்லாம் இருந்தால்தானே மாணவர்கள் அந்த கல்லூரியை தேர்வு செய்வார்கள். அதனால், இதுபோல, தேவையில்லாமல் இருக்கிற பொறியியல் கல்லூரிகளை  அரசு மூட சொல்லிவிடலாம். அரசாங்கம் நடத்துக்கிற கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இது ஒன்றுதான் இந்த பிரச்னைக்கு தீர்வு” என்று கூறினார்.

அதே போல, சமூக செயற்பாட்டாளர் பேராசியர் கல்யாணி நம்மிடம் பேசுகையில், “முதலில் நாட்டுக்கு எவ்வளவு பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த பொறியாளர்களை உருவாக்க எத்தனை பொறியியல் கல்லூரிகள் தேவை என்பது போன்ற எதனையும் கருத்தில் கொள்ளாமல் பொறியியல் படிப்பு வணிகமயமாக்கப்பட்டு ஏராளமான தனியார் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளாதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எதற்கு இத்தனை தனியார் பொறியியல் கல்லூரிகள்? தேவையில்லாத கல்லூரிகளை எல்லாம் மூடிவிடலாம்.” என்று கூறினார்.

பொறியியல் படிப்பு ஏன் மாணவர்களிடம் செல்வாக்கு இழந்தது என்பது குறித்து பேசிய பேராசிரியர் சிவக்குமார் “சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் குவாண்டம் கணினி நோக்கி நகர்ந்துவிட்டார்கள். ஆனால், அரசு புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தாததால் இங்கே பொறியியல் படித்த மாணவர்களால் போட்டிப்போட முடியவில்லை. மேலும், 2000 ஆம் ஆண்டில் வந்தது போன்ற ஒய்2கே பிரச்னை 2025 ஆம் ஆண்டிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதும் ஏராளமான இளைஞர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையெல்லாம் கேள்விப்படும் மாணவர்கள் கலை அறிவியல் படிப்பை நோக்கி செல்கிறார்கள். அங்கேயும் மாணவர்கள் அதிகரிக்கும்போது என்ன நடக்கும் என்பது தெரியவில்லை.

முதலில் மத்திய மாநில அரசுகள் எவ்வளவு பொறியாளர்கள் தேவையோ அந்த அளவுக்கு கல்லூரிகளை உருவாக்க வேண்டும் அதைவிடுத்து, தேவைக்கு அதிக அளவில் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிக்கும்போது இப்படித்தான் நடக்கும். மேலும், பல தனியார் கல்லூரிகளில், சில மாணவர்கள் எம்.இ. படித்துக்கொண்டே பி.இ மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள். அங்கே எப்படி பொறியியல் கல்வி தரமாக இருக்கும். இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டுமானால் அரசு தேவையில்லாமல் இருக்கும் பொறியியல் கல்லூரிகளை எல்லாம் மூட வேண்டும். அரசு மேக் இன் இந்தியா என்று கூறினால் மட்டும் போதாது பொறியியல் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தற்சார்புடன் செயல்பட வேண்டும் படிக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.” என்று கூறினார்.

Anna University Prince Gajendra Babu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment