Ritika Chopra
1996-2015 ஆண்டுக்கு இடையே மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் நடத்திய 10, 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வில் முதலிடம் பெற்ற 86 மாணாக்கர்களின் தற்போதைய முன்னேற்றங்களை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஆய்வு செய்தது.
ஆய்வில் தெரிய வந்தவை:
மொத்த எண்ணிக்கையில், பாதிக்கும் மேற்பட்டோர் அதவாது 46 பேர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பெரிய நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சிலர், பட்ட மேற்படிப்பை படித்து வருகின்றனர். வெளிநாட்டில் வசிப்பவர்களில் நான்கில் மூன்று பங்கினர், அதவாது 34 பேர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அமெரிக்கா இலக்கு நாடாக இருந்தாலும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், சீனா, கனடா, பங்களாதேஷ், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இதர மாணவர்கள் வசித்து வருகின்றனர்.
வெளிநாடுகாளில் பணிபுரிபவர்களில், தொழில்நுட்பத் துறையில் அதிக எண்ணிகையில் வேலை செய்கின்றனர். அதைத் தொடர்ந்து மருத்துவம், நிதி ஆகிய துறைகளில் பணி புரிந்து வருகின்றனர்.
அமெரிக்காவில் பணிபுரியும் 10 பேரில் நான்கு பேர் சிலிக்கான் பள்ளத்தாக்கில் தொழில்நுட்பத் துறையில் உள்ளனர். உதரணமாக, 1999 இல் ஜாம்ஷெட்பூர் லிட்டில் ஃப்ளவர் பள்ளியில் மேற்படிப்பை முடித்த பிஸ்வநாத் பாண்டா, தற்போது சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் மூத்த பொறியியல் இயக்குநராக பணியமர்த்தப் பட்டுள்ளார். பட்டியலில் உள்ள 11 டாப்பர்கள் கூகுள் நிறுவனத்தில் மட்டும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
37 வயதான கருண கணேஷ், 1999-ல் 10 ஆம் வகுப்பு ஐசிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்தார். அதன்பின், அமெரிக்காவைச் சேர்ந்த யுனைடெட் வேர்ல்ட் கல்லூரியில் படிப்பைத் தொடங்கினார். ( இது 80 நாடுகளைச் சேர்ந்த 200 மாணவர்களை ஒன்றிணைக்கும் சர்வதேச போர்டிங் பள்ளியாகும்). அவர், தற்போது நியூயார்க்கில் உள்ள மெமோரியல் ஸ்லோன்-கெட்டரிங் புற்றுநோய் மையத்தில் மருத்துவ-விஞ்ஞானியாக உள்ளார்.
"உலகத்தரம் வாய்ந்த உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுப்புவதில் யு.டபிள்யூ.சி பள்ளி முக்கியத்துவம் பெறுவதால், இங்கு படிக்க ஆர்வம் கண்டேன். பெற்றோர் உறுதுணையாக இருந்தனர்" என்று கணேஷ் தெரிவித்தார்.
அயல்நாட்டிற்கு செல்ல காரணம் என்ன?
முதலிடம் பிடித்த மாணவர்கள் மற்ற நாடுகளுக்கு செல்ல முதன்மைக் காரணம் உயர் கல்வி. அதாவது, 70% க்கும் அதிகமானோர் தங்கள் இளங்கலை (அ) முதுகலை படிப்பை வெளிநாட்டில் மேற்கொண்டுள்ளனர். 86 பேரில் சிலர் பேர் மட்டுமே பணிகளுக்காக அயல்நாட்டிற்கு சென்றிருக்கின்றனர்.
உதாரணமாக, தற்போது போஸ்டன் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் உதவி பேராசிரியராக பணியாற்று வரும் சோம்நாத் போஸ் (40 வயது) 2008 ஆம் ஆண்டில் கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பையும், எய்ம்ஸ் நிறுவனத்தில் எம்.டி. படிப்பையும் முடித்தார். "2008ல் கிரிட்டிக்கல் கேர் மருத்துவத் துறை இந்தியாவில் ஆரம்பக் கட்டத்தில் தான் இருந்தது. அமெரிக்காவில் மாணவர்களுக்கு இந்த துறையில் பல வாய்ப்புகள் கிடைத்தது" என்று போஸ் தெரிவித்தார்.
2008ல் தானே பள்ளியில் படித்த ஜானகி ஷெத் (28 வயது) , ஐ.சி.எஸ்.இ தேர்வில் 98.6 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றார். மும்பை ஐ. ஐ.டி-ல் பொறியியல் இயற்பியலில் பி.டெக் முடித்தவுடன், 2014ல் லாஸ் ஏஞ்சல்ஸின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பிஹெச்டி படிப்பைத் தொடர்ந்தார். வெளிநாடு செல்வதற்கான காரணம் குறித்து கேட்டதற்கு, "இந்தியாவில், பொதுவாக அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளுக்கு திட்ட நிதியுதவி போதுமானதாக இருப்பதில்லை. சில விலைமதிப்பற்ற கல்வி அனுபவங்கள் ஐ.ஐ.டி.ல் கிடைத்தாலும், பி.எச்.டி மேற்படிப்புக்கு இந்தியா போதுமானதாக இல்லை என்பதை நான் உணர்ந்தேன்”என்று தெரிவித்தார்.
2015-ல் 12 ஆம் வகுப்பு ஐ.எஸ்.சி தேர்வில் முதலிடம் பிடித்த ஆர்க்யா சாட்டர்ஜி (24 வயது), மும்பை ஐ. ஐ. டி யில் பொறியியல் இயற்பியல் பட்டத்தை முடித்தார். அயல்நாடு செல்வதற்கான காரணங்கள் குறித்த கேள்விக்கு," ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவிப்பதோடு மட்டுமின்றி, தகவல் அளித்தல், கல்வி புகட்டுதல் மற்றும் விழிப்புணர்வூட்டும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். தகவல்களையும், அறிவையும் ஒருவருக்கொருவர் எளிமையான முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் எனது கல்வி வாழ்கையின் போது இத்தகைய அனுபவம் பெரும்பாலும் கிடைக்கவில்லை, ”என்று சாட்டர்ஜி கூறினார்.
இப்போது மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் பிஎச்டி படிப்பைத் தொடர்ந்து வருகிறார்.
பட்டியலில், பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் அதாவது 48 பேர், பொறியியல் பாடங்களில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளனர். பொறியியல் படித்தவர்களில், 36 சதவீத மாணவர்கள் ஐ.ஐ.டி- ல் படித்துள்ளனர். 12 பேர் மட்டுமே மருத்துவத் துறையை தேர்வு செய்தனர்.
எவ்வாறாயினும், சமூக கட்டமைப்பு, குடும்ப சூழல் போன்ற காரணிகள் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய பங்கு வகித்ததாகவும் மாணவர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.
இந்தியாவில் தங்கிய மாணவர்கள்: உயர் படிப்புகளை முடித்த பிறகு இந்தியாவுக்குத் திரும்பிய (அ) இந்தியாவில் மேற்படிப்பைத் தொடர்ந்த மாணவர்களில் பெரும்பாலானோர் நிதித் துறையை தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்கடுத்தப் படியாக தொழில்நுட்பத் துறை, கன்சல்க்டிங் மற்றும் வணிகத் துறையை தேர்ந்தெடுத்துள்ளனர்.
சமூக, பொருளாதார சவால்கள் : வாரியத் தேர்வில் முதலிடம் பெற்ற 86 மாணவர்கள் பட்டியலியால் ஒருவர் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவைச் சேர்ந்தவர். பட்டியலின, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் இப்பட்டியலில் இடம் பெறவில்லை. நாளிதழின் கேள்விகளுக்கு பதிலளித்த 76 மாணவர்களில், ஐந்து பேர் மட்டுமே முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரின் இம்பால் நகரைச் சேர்ந்த முகமது இஸ்மத்,(29) 2012 -ல் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ வாரியத் தேர்வில் முதலிடம் பிடித்தார். ஆசிரியர் ஒருவரின் உதவியால் வாரியத் தேர்வுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்தியவர். டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பி. எஸ்சி படிப்பதற்கு தனியார் நிறுவனம் இவருக்கு நிதியுதவி அளித்தது.
குடும்பத்தில் ஏற்பட்ட சில நெருக்கடி காரணமாக, இஸ்மத் கடந்த 4 ஆண்டுகளாக தனது தனிப்பட்ட வாழ்க்கை அபிலாஷைகளை நிறுத்தி வைக்க வேண்டிய சூழல் உருவாகியோது. தற்போது, மத்திய அரசு குடிமைப் பணித் தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறார்.
மேலும், வாரியத் தேர்வின் போது, நான்கில் மூன்று பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. மீதமுள்ளவர்களின் ஆண்டு வருமானம் ரூ .1 லட்சம் முதல் ரூ .5 லட்சம் வரை இருந்தது. இப்பட்டியலில், ஒருவர் மட்டுமே தனது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ .1 லட்சத்துக்கும் குறைவு என்று தெரிவித்தார்.
மேலும், பட்டியலில் உள்ள பெரும்பாலான டாப்பர்கள் டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களைச் சேர்ந்தவர்கள். தற்போதைய, கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நகரங்களும் இவைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.