நாட்டில் நிலவும் கொடிய நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மத்திய அரசு ஒட்டுமொத்த மக்களையும் வீட்டிற்குள் முடங்கியிருக்கச் செய்துள்ளது. மக்களை முடக்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பே பள்ளியிலிருந்து தொடங்கிப் பல்கலைக் கழகம் வரையிலும் மாணவ மாணவியருக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனால் மாணவர்களை நோய் தொற்றிலிருந்து காத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் பெற்றோருக்கு ஒரு பக்கத்தில் இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் அவர்களின் படிப்பு கேள்விக்குறியாகுமோ என்ற ஐயப்பாடு அனைத்துப் பெற்றோர்கள் மத்தியிலும் இருந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் என்.எம் வித்யா கேந்திரா சீனியர் செகண்டரி ஸ்கூல் சயின்ஸ் டீச்சர் மேரி சுபா. இந்த ஊரடங்கு சூழலில் வாட்ஸ்அப் குரூப் மூலமாக தனது மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்
பாராட்டலாம் தானே!#coronavirusindia pic.twitter.com/hKOozRMMR0— IE Tamil (@IeTamil) March 30, 2020
முதலில் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற நிலையில் தற்போது அது ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வின்றி அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூடவே அடுத்த மாதம் நடைபெற இருந்த நீட் மற்றும் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளும் அடுத்த தேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை விட்ட நேரத்தில் மாணவர்கள் ஒரு வேளை குஷியாக இருந்திருக்கலாம். ஏனென்றால் நண்பர்களோடு ஊர் சுற்றலாம், நன்றாக விளையாடலாம் என்றெல்லாம் கருதியிருப்பார்கள். இந்நிலையில் திடீரென வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிட்ட உடன் மிகவும் சோர்ந்து போனது மாணவர்களாக மட்டுமே இருக்க முடியும். ஏனென்றால் மாணவர்களுக்கு ஒட்டுமொத்த வீட்டு வாசம் என்பது ஒருவகையில் சிறை வாசம் போன்றதுதான்.
முதலில் விடுமுறை கிடைத்த போது மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் ஆனந்தம் அடைந்திருக்கலாம். ஏனென்றால் இனி பள்ளிக்குப் போக வேண்டாம், பாடம் நடத்த வேண்டாம். ஆனால் அவர்களிலும் சில விதிவிலக்கான ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்வார்கள். மாணவர்களின் படிப்பைப் பற்றி பெற்றோரை விட அக்கறைக் காட்டக்கூடிய ஆசிரியர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்வார்கள்.
அப்படிப்பட்ட ஆசிரியர்களில் ஓர் ஆசிரியர்தான் இந்த மேரி சுபா. இவர் கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் என். எம். வித்யா கேந்திரா சீனியர் செக்கண்டரி (சி.பி.எஸ்.இ) பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். பாடம் கற்பிப்பதிலும், மாணவர்களிடையே ஒழுக்கத்தை நிலைநாட்டுவதிலும் சிறந்த ஆசிரியர் என்று இயல்பாகவே பெயர் பெற்றவர்.
அப்பள்ளிக் கூடத்தில் சீனியர் செக்கண்டரி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் கற்பித்து வரும் இவருக்கு பள்ளிக்கூடத்திற்கு நீண்ட விடுமுறை விட்ட உடனையே ஒரு சோகம் கௌவிக் கொண்டது. இவ்வளவு நாள்கள் பாடம் நடத்தாமல் இருந்தால் மாணவர்களின் படிப்பு பாழ்பட்டுப் போகுமே என நினைத்த அந்த ஆசிரியர், கடைசியாக ஒரு புது வழியைக் கண்டுபிடித்தார்.
தனது செல்போனில் ஒரு வாட்ஸ்அப் குரூப் தொடங்கி, அதில் தனது வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களையும் இணைத்து ஒவ்வொரு நாளும் தனது வீட்டில் இருந்து கொண்டே தான் கற்பிக்கும் பாடத்தின் ஒரு பகுதியை வீடியோ அல்லது ஆடியோவாகப் பதிவிட்டுகிறார். இதனை மாணவர்கள் கேட்டுவிட்டு, அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனே அவரிடத்தில் மெசேஜ் மூலமாகவோ, போனில் அழைத்தோ அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறார்.
முதல் வீடியோவில் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய அறிவுரையை வழங்குகிறார். அதன் பிறகு பாடத்தை நடத்துகிறார். இந்த ஆசிரியரின் இச் செயல்பாடு அனைத்து மாணவர்களையும் ஆச்சரியப்படச் செய்துள்ளது. கூடவே அனைத்துப் பெற்றோரும், “எல்லா ஆசிரியர்களும் இதுபோல் மாணவர்களின் படிப்பில் இப்படி அக்கறை காட்டினால் நம்நாடு என்றோ எங்கோ சென்றிருக்கும்” என வெகுவாகப் பாராட்டுகின்றார்கள்.
இறைபணிக்கு நிகரான ஆசிரியர் பணியை இந்த ஒரு மேரி சுபா ஆசிரியை மட்டுமல்ல, நம் நாட்டின் வேறு ஏதேனும் மூலை முடுக்கிலிருந்து ஓர் ஆசிரியர் செய்து வருகிறார் என்றால் அந்த ஆசிரியருக்கும் சேர்த்து நாம் எல்லோரும் ஒரு சபாஷ் சொல்லுவோம்.
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.