சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முன்கூட்டியே " முழுமையான வினா வங்கி" வழங்கிட பாராளுமன்ற நிலைக்குழு மத்திய கல்வி அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தது. கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட கற்றல் பிரச்சினையை ஓரளவுக்கு சமாளிக்கும் வகையில் இந்த பரிந்துரை அளிக்கப்பட்டதாக கல்வித்துறை வட்டராங்கள் தெரிவிகின்றன.
பள்ளிக் கல்வியில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறித்து கல்வித்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு விளக்கமளித்த அரசாங்க அதிகாரிகள்," கொரோனா பெருந்தொற்று மற்றும் பொது முடக்கநிலை காரணமாக இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு இடையே கற்றல் இடைவெளிகளை இருப்பதை எடுத்துரைத்தனர். மேலும் இணைய வசதி இல்லாத, வானொலி மற்றும் தொலைக்காட்சிகளை அணுக கூடிய வாய்ப்பில்லாத கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் மெய்நிகர் வகுப்புகளைத் தவறவிட்டதாகவும் தெரிவித்தன.
ஸ்மார்ட் போன்கள், மடிக்கணினிகள், இணைய இணைப்பு குறைவாகவும், இடையூறாகவும் இருக்கும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு மெய்நிகர் வகுப்புகளுக்கான சாத்தியக் கூறுகளையும் நிலைக்குழு கேள்வி எழுப்பியது.
பள்ளிப் பாடங்களை மாணவர்களுக்கு எடுத்து செல்லும் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி நிலையத்தின் முயற்சிகளை மத்திய கல்வி அமைச்சகம் விளம்பரங்கள் மற்றும் பிற ஊடகங்கள் மூலம் ஊக்குவித்திருக்க வேண்டும் என்று நிலைக்குழுத் தலைவரும் பாஜக எம்.பியுமான வினய் சஹஸ்ரபுத்தே தெரிவித்தார்.
சிபிஎஸ்இ பொதுத் தேர்வுக்கு அனைத்து பாடங்களுக்கும் ஒரு "பெரிய வினா வங்கியை" உருவாக்க வேண்டும் என்ற சஹஸ்ராபுதேவின் ஆலோசனையை நிலைக்குழு ஆதரித்தது. வினா வங்கியின் அடிப்படையில் தேர்வுகளில் கேள்விகள் இருக்க வேண்டும் என்றும் வலியுறித்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள், 2021 மே 4ஆம் தேதி முதல் 2021 ஜூன் 10ஆம் தேதி வரை நடக்கும் எனவும், தேர்வு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி அறிவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் முன்னதாக அறிவித்தார். மேலும், 12ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் 2021 மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.