Advertisment

முகலாய சகாப்தம், டெல்லி சுல்தானியம், எமர்ஜென்சி, குஜராத் கலவரம்; NCERT புத்தகங்களில் நீக்கம்

NCERT பாடப்புத்தகத்தில் புதிய திருத்தங்கள்; முகலாய சகாப்தம், டெல்லி சுல்தானியம், எமர்ஜென்சி, 2002 குஜராத் கலவரம் ஆகிய பகுதிகள் நீக்கம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
student

NCERT பாடப்புத்தகத்தில் புதிய திருத்தங்கள்

Ritika Chopra

Advertisment

6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் புதிய கல்வி அமர்வுக்காக இந்த வாரம் பள்ளிக்குத் திரும்புகையில், 2014 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசாங்கம் பொறுப்பேற்றதில் இருந்து மிக பெரிய மாற்றங்களுடன் புதிய சமூக அறிவியல் பாடப்புத்தகங்களை அவர்கள் தங்கள் மேசைகளில் காணலாம்.

2002 குஜராத் கலவரம், முகலாய சகாப்தம் மற்றும் சாதி அமைப்பு பற்றிய அனைத்து குறிப்புகளையும் அகற்றுவது மற்றும் எதிர்ப்புகள் மற்றும் சமூக இயக்கங்கள் பற்றிய அத்தியாயங்களை கைவிடுவது முதல், இந்த மாற்றங்கள் கடந்த ஆண்டு, கோவிட் சமயத்தில் ஏற்பட்ட கற்றல் பின்னடைவுகளில் இருந்து மாணவர்களை 'விரைவாக மீட்க' உதவும் வகையில் பாடத்திட்ட சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) மேற்கொண்ட 'திருத்தப்பட்ட (rationalization)' பயிற்சியின் விளைவாகும்.

இதையும் படியுங்கள்: 6-9 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு; பள்ளி கல்வித்துறை

இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த மாற்றங்களை முதன்முதலில் கடந்த ஆண்டு ஜூன் 18 முதல் 20 வரையில் மூன்று பகுதிகள் அடங்கிய தொடரில் தெரிவித்தது.

NCERT கடந்த ஆண்டு பாடப்புத்தகங்களில் உள்ள அனைத்து மாற்றங்கள் மற்றும் நீக்குதல்களின் விரிவான பட்டியலை வெளியிட்டிருந்தாலும், கல்வி அமர்வு தொடங்கியதால் இந்த மாற்றங்களை அறிமுகப்படுத்த முடியவில்லை. தற்போது 2023-24 கல்வியாண்டு தொடங்குகையில், திருத்தப்பட்ட உள்ளடக்கத்துடன் மறுபதிப்பு செய்யப்பட்ட புத்தகங்கள் சமீபத்தில் சந்தைக்கு வந்தன.

பாடப்புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய மாற்றங்கள்:

* முகலாயர் காலத்தின் உள்ளடக்கம் மற்றும் இந்தியாவின் முஸ்லீம் ஆட்சியாளர்கள் குறித்து பாடத்திட்டங்கள் அதிகமாக நீக்கப்பட்டுள்ளன. மம்லூக் (அடிமை வம்சம்), துக்ளக் வம்சம், கில்ஜி வம்சம் மற்றும் லோடி வம்சம் உட்பட பல வம்சங்களால் ஆளப்பட்ட டெல்லி சுல்தானியத்தின் பல பக்கங்கள் மற்றும் முகலாய பேரரசு ஆகிய பகுதிகள் 7 ஆம் வகுப்பு வரலாற்று பாடப்புத்தகமான நமது கடந்த காலம் (Our Pasts – II) புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

* ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள முகலாய பேரரசு என்ற அத்தியாயமும், ஹுமாயூன், ஷாஜஹான், பாபர், அக்பர், ஜஹாங்கீர் மற்றும் ஔரங்கசீப் போன்ற முகலாய பேரரசர்களின் மைல்கல் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை விவரிக்கும் இரண்டு பக்க அட்டவணை உட்பட, பலப் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

* 12 ஆம் வகுப்பு வரலாற்று பாடப்புத்தகத்தில், அரசர்கள் மற்றும் ஆட்சியின் முக்கிய நிகழ்வுகள் (கிங்ஸ் அண்ட் க்ரோனிகல்ஸ்): முகலாய அரசவைகள் (இந்திய வரலாற்றின் கருப்பொருள்கள் - பகுதி II) என்ற அத்தியாயம் நீக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் அக்பர் நாமா மற்றும் பாட்ஷா நாமா போன்ற முகலாய கால கையெழுத்துப் பிரதிகள் மற்றும் போர்கள், வேட்டையாடும் பயணங்கள், கட்டிட கட்டுமானங்கள் மற்றும் அரசவை காட்சிகள் மூலம் முகலாயர்களின் வரலாறு ஆகியவை விவரிக்கப்பட்டிருந்தன.

* 7 ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப்புத்தகமான Our Past – II இல், துணைக்கண்டத்தின் மீது படையெடுத்து சோம்நாத் கோவிலை தாக்கிய ஆப்கானிஸ்தானின் முகமது கஜினியின் இரண்டாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பு மாற்றப்பட்டுள்ளது. முதலில், அவரது பெயரிலிருந்து "சுல்தான்" என்ற தலைப்பு நீக்கப்பட்டது. இரண்டாவதாக, "ஒவ்வொரு ஆண்டும் அவர் துணைக்கண்டத்தை தாக்கினார்" என்ற வாக்கியம், "அவர் துணைக்கண்டத்தை 17 முறை (1000-1025 CE) ஒரு மத நோக்கத்துடன் தாக்கினார்" என்று திருத்தப்பட்டுள்ளது.

* எமர்ஜென்சியின் (அவசரநிலை) கொடூரமான தாக்கத்தைக் கையாளும் பத்திகள் நீக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் அரசியல் என்ற பாடத்தில் அவசரநிலை என்ற அத்தியாயத்தின் ஐந்து பக்கங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தி க்ரைசிஸ் ஆஃப் டெமாக்ரடிக் ஆர்டர் (ஜனநாயக ஒழுங்கின் நெருக்கடி) என்ற தலைப்பில் உள்ள நீக்கப்பட்ட உள்ளடக்கம், அந்த நேரத்தில் இந்திரா காந்தி அரசாங்கம் செய்த அதிகார துஷ்பிரயோகம் மற்றும் முறைகேடுகள் மற்றும் அவசரநிலையை விதிக்கும் முடிவைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் தொடர்பானது. அரசியல் கட்சிகளின் தொண்டர்களைக் கைது செய்தல், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள், சித்திரவதை மற்றும் காவலில் வைக்கப்பட்டு இருந்தப்போது நிகழ்ந்த மரணங்கள் மற்றும் கட்டாய கருத்தடை செய்தல் போன்ற அதிகப்படியான தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.

* சமகால இந்தியாவில் சமூக இயக்கங்களாக மாறிய போராட்டங்களை விவரிக்கும் மூன்று அத்தியாயங்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசியல் அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, "மக்கள் இயக்கங்களின் எழுச்சி" என்ற பாடம் 12 ஆம் வகுப்பு சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் அரசியல் என்ற பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

* 6 ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் (நமது கடந்தகாலம் – I) வர்ணங்கள் பற்றிய பகுதி பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. வர்ணங்களின் பரம்பரைத் தன்மை, தீண்டத்தகாதவர்கள் என மக்களை வகைப்படுத்துதல் மற்றும் வர்ண அமைப்பை நிராகரித்தல் போன்ற வாக்கியங்கள் அரசாட்சி, அரசர்கள் மற்றும் ஆரம்பகால குடியரசு அத்தியாயத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

* 2002 குஜராத் கலவரங்கள் பற்றிய அனைத்து குறிப்புகளும் அனைத்து NCERT சமூக அறிவியல் பாடப்புத்தகங்களிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, தற்போதைய 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் அரசியல் என்ற தலைப்பில் உள்ள கலவரங்கள் குறித்த இரண்டு பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. அத்தியாயத்தின் முதல் பக்கம், கரசேவகர்கள் நிறைந்த ரயில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தொடர்ந்து தீவைக்கப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளின் காலவரிசை பற்றிய ஒரு பத்தியைக் கொண்டுள்ளது, மேலும் வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக குஜராத் அரசை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) விமர்சித்ததைக் குறிப்பிட்டுள்ளது. “குஜராத் போன்ற நிகழ்வுகள், அரசியல் நோக்கங்களுக்காக மத உணர்வுகளைப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்துகள் குறித்து நம்மை எச்சரிக்கின்றன. இது ஜனநாயக அரசியலுக்கு அச்சுறுத்தலாக உள்ளது” என்று நீக்கப்பட்ட பத்தியில் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது பக்கம் (இப்போது நீக்கப்பட்டுள்ளது) மூன்று செய்தித்தாள் அறிக்கைகளின் தொகுப்பையும், கலவரங்களை குஜராத் அரசு கையாண்டது குறித்து NHRC யின் 2001-2002 ஆண்டு அறிக்கையில் இருந்து அவதானித்த ஒரு பகுதியையும் கொண்டுள்ளது. இந்த பிரிவில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் புகழ்பெற்ற “ராஜ் தர்மம்” என்ற கருத்தும் நீக்கப்பட்டுள்ளது. “முதலமைச்சருக்கு எனது ஒரு செய்தி என்னவென்றால், அவர் ‘ராஜ் தர்மத்தை’ பின்பற்ற வேண்டும். ஜாதி, இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் ஒரு ஆட்சியாளர் தனது குடிமக்களிடையே எந்தவிதமான பாகுபாடும் காட்டக்கூடாது” என்று வாஜ்பாய் மார்ச் 2002 இல் அகமதாபாத்தில் செய்தியாளர் கூட்டத்தில் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி தனது பக்கத்தில் அமர்ந்திருந்தப்போது கூறினார்.

தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் 2014 ஆம் ஆண்டிலிருந்து மூன்றாவது பாடநூல் மதிப்பாய்வு ஆகும். 2017 ஆம் ஆண்டு முதல் திருத்தம் செய்யப்பட்டது, இதில் NCERT 182 பாடப்புத்தகங்களில் சேர்த்தல், திருத்தங்கள் மற்றும் தரவு புதுப்பிப்புகள் உட்பட 1,334 மாற்றங்களைச் செய்துள்ளது. மாணவர்களின் சுமையை குறைக்க அப்போதைய கல்வி அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் உத்தரவின் பேரில் இரண்டாவது ஆய்வு 2019 இல் தொடங்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Education Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment