கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிக்கு தேசிய அளவில் 4-ம் இடம்
தேசிய தரவரிசைப் பட்டியல் நிறுவனம் வெளியிட்டுள்ள சிறந்த 100 கலை அறிவியல் கல்லூரிகளின் பட்டியலில் கோவையைச் சேர்ந்த 9 கலை அறிவியல் கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன. இதில் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிக்கு நான்காம் இடம் கிடைத்துள்ளது.
Advertisment
ஆண்டுதோறும் கல்வி, மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள், கல்லூரியின் செயல்பாடுகளை கணக்கிட்டு தேசிய தரவரிசைப் பட்டியல் நிறுவனமான என்.ஐ.ஆர்.எஃப் (NIRF) தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பொறியியல், கலை அறிவியல் என வெவ்வேறு பிரிவுகளின் கீழ் தரவரிசை ப்பட்டியலை என்.ஐ.ஆர்.எஃப். வெளியிடுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி முதலிடம் பிடித்துள்ளது.
கலை - அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் கோவையை சேர்ந்த 9 கல்லூரிகள் இடம் பிடித்த நிலையில், பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி தேசிய அளவில் நான்காம் இடத்தையும், மாநில அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்று அசத்தியுள்ளது.
இந்த நிலையில், கல்லூரியின் தலைவர் நந்தினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடு முழுவதிலும் 2,700 கலைக் கல்லூரிகளில் எங்கள் கல்லூரி 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 6வது இடம் பிடித்திருந்தது. கடந்த 7 ஆண்டுகளாக தரவரிசை பட்டியலில் எங்களது கல்லூரி இடம் பிடித்து வருகிறது. இந்த தரவரிசை பட்டியல் மூத்த பேராசிரியர்கள், மாணவர் சேர்க்கை, கற்பித்தல் உள்ளிட்ட 5 படி நிலைகளின் ஆய்வுக்கு பின்னர் வழங்கப்படுகிறது. இதில் சில படி நிலைகளில் தேசிய அளவில் முதல் 3 இடங்களை பிடித்த கல்லூரிகளை காட்டிலும் எங்கள் கல்லூரி அதிக புள்ளிகள் பெற்றுள்ளது.
பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 40 துறைகள் செயல்பட்டு வருகின்றன. 450 பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தாண்டு புதிய துறைகளும் துவங்கப்படுகின்றன. அடுத்தாண்டு இந்த தரவரிசை பட்டியலில் மேலும் முன்னேற்றம் அடைவோம். தரவரிசைக்கான சான்றிதழை கல்லூரி முதல்வர் மீனா பெற உள்ளார். இந்த இடத்தை அடைய உழைத்த பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பாராட்டுக்கள் என்று கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கல்லூரி செயலர் யசோதாதேவி, துறை இயக்குநர்கள் பாலசுப்ரமணியன், சதாசிவம் ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த தேசிய தர வரிசைப்பட்டியலில் கோவையை சேர்ந்த 9 கல்லூரிகள் முதல் 100 இடங்களில் இடம் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் 20 ஆவது இடத்தை பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியும், 29 ஆவது இடத்தை கொங்குநாடு கலைக் கல்லூரியும், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி 33 ஆவது இடத்தையும், கோவை அரசு கலைக்கல்லூரி 44 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
இதேபோல் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரி 71 ஆவது இடத்தையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைக் கல்லூரி 86 ஆவது இடத்தையும், எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கல்லூரி 89 ஆவது இடத்தையும், ஜி.ஆர்.டி.கல்லூரி 99 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil