12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கணித பாடத்தில் பாடத் திட்டத்திற்கு வெளியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. தமிழ் மொழித் தாள், ஆங்கிலம், இயற்பியல், பொருளாதாரம், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன.
இதையும் படியுங்கள்: 12-ம் வகுப்பு பாடங்களில் சென்டம் எடுத்தால் ரூ. 10000; சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கல்விக்கான அறிவிப்புகள்
இந்தநிலையில், நேற்று கணிதம், விலங்கியல், வணிகவியல், நர்சிங் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. தொழிற்கல்விப் படிப்பான பொறியியல் படிப்புக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதில், கணித மதிப்பெண் முக்கியப் பங்கு வகிக்கும்.
கணித தேர்வு பலருக்கு கடினமாக இருந்தாலும், அதிக சென்டம் வருவது கணித பாடத்தில் தான். இந்தநிலையில், நேற்று நடைபெற்ற கணிதத் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். சில வினாக்கள் கடினமாகவும், ஆழமாக யோசித்து விடையளிக்கும் வகையிலும் இருந்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, கணிதத் தேர்வில் வினாக்கள் சற்று கடினமாகக் கேட்கப்பட்டதால், இந்த ஆண்டு கணிதத் தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண்கள் மற்றும் 95-க்கு மேல் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையக்கூடும், அதன் காரணமாக பொறியியல் படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், 12-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் பாடத்திட்டத்திற்கு வெளியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டது குறித்து தமிழக அரசின் தேர்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12-ஆம் வகுப்பு கணிதப்பாடத் தேர்வில் கடினமான வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை கணித ஆசிரியர்களும் உறுதி செய்திருக்கின்றனர்!
கணிதப்பாடத் தேர்வில் குறைந்தது 3 வினாக்கள் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்திலிருந்து (சி.பி.எஸ்.இ) கேட்கப்பட்டுள்ளன. மாநிலப் பாடத்திட்ட நூல்களை மட்டும் படித்து தேர்வு எழுதிய மாணவர்களால் முழு மதிப்பெண்களை எடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. இது நியாயமல்ல!
கணிதத்தில் 100% மதிப்பெண் பெறுவது தான் மாணவர்களின் இலக்கு. ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தையும் படித்தால் தான் 100% மதிப்பெண் எடுக்க முடியும் என்பது அறமல்ல. வினாத்தாள் தயாரிப்புக் குழுவினர் அவர்களின் திறமையை காட்டுவதற்காக மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கக்கூடாது!
12-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் பாடத்திட்டத்திற்கு வெளியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டது குறித்து தமிழக அரசின் தேர்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும். மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க அவர்களுக்கு உரிய அளவில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil