Advertisment

பொங்கலுக்குப் பிறகு 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் கிளாஸ்? அரசு பரிசீலனை

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தலைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

author-image
WebDesk
New Update
பொங்கலுக்குப் பிறகு 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் கிளாஸ்? அரசு பரிசீலனை

School education dept counsel to Online class after pongal: கொரோனா மூன்றாவது அலை அதிகரித்துவரும் நிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதைத் தவிர்க்குமாறும், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்துமாறும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

சென்னை உயர் நீதிமன்றத்தில் நெல்லையைச் சேர்ந்த அப்துல் வஹாபுதீன் தாக்கல் செய்த மனுவில், ”தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்குத் தடை விதித்து, ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த வேண்டும். கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின்போது பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டு, ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன.

தற்போது கொரோனா மூன்றாவது அலை மிக தீவிரமாகப் பரவி வரும் சூழலில், 1 முதல் 9ஆம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. இதனால் அந்த மாணவர்கள் எளிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன், மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்குத் தடை விதித்து, ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், மழலையர் வகுப்புகள் மற்றும் 1 முதல் 9 வரை நேரடி வகுப்புகளுக்கு அனுமதி இல்லை. அதேநேரம் 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவே பள்ளிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நேரடி வகுப்புகள் நடத்துவதும், அந்த வகுப்புகளில் கலந்து கொள்வதும் கட்டாயமில்லை என ஏற்கெனவே அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து பள்ளிகள் முடிவெடுக்கலாம் என்றும் தமிழக அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. நேரடி வகுப்புகள் நடத்தினால் கலந்துகொள்வது மாணவர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், மூன்றாவது அலை அதிகரித்து வரும் நிலையில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதைத் தவிர்த்து ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த வேண்டும் எனத் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். இதன் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் என அனைவரது பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்தனர்.

இதனையடுத்து, 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்பு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளது. பொங்கல் விடுமுறை முடிந்து 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Education Online Class
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment