Advertisment

அனுமதி பெறாத சி.பி.எஸ்.இ. பள்ளிகள்: பெற்றோரே உஷார்

தற்போது தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்படும் பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ பள்ளிகளாகவே உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CBSE affiliated Schools are advised to used only new political map of india :

CBSE affiliated Schools are advised to used only new political map of india :

கமல.செல்வராஜ்

Advertisment

தமிழகத்தில் மத்திய அரசின் அனுமதியின்றி புற்றீசல் போல் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளதால், பிள்ளைகளை இப்பள்ளிகளில் சேர்ப்பதில் பெற்றோர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் 2009 ஆம் ஆண்டுவரை மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்பள்ளி நிர்வாகிகள் பெற்றோர்களிடம் தான்தோன்றித் தனமாக அதிக கட்டணம் வசூலித்து வந்தனர். பெற்றோர்களும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அதிகக் கட்டணம் செலுத்தி பிள்ளைகளை படிக்க வைப்பதை ஒரு கௌரவமாகவே கருதினர்.

இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக் குறைந்து ஒவ்வொருப் பள்ளிகளாக மூடும் நிலைக்கு வந்தது. இது ஏழை எளிய மாணவர்களின் கல்வியை கானல் நீராக்குமோ என்னும் ஐயப்பாட்டை கல்வியாளர்கள் மத்தியில் உருவாக்கியது.

இதனால் 2009 ஆம் ஆண்டு முதல், தமிழகத்தில் இயங்கி வந்த மாநில அரசுக் கல்வி, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் பள்ளிகளை ஒருங்கிணைத்து, அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு சமச்சீர் கல்வி முறையை அமல் படுத்தியது.

இதனால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவனும், மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவனும் ஒரே பாடத்தை படிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் செல்வாக்குச் சற்றே சரியத் தொடங்கியது. மாணவர் எண்ணிக்கையும் பெருமளவில் குறையத் தொடங்கியது.

அப்பொழுதுதான் தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் நடந்து கொண்டிருந்த சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது பெரும் வசதிபடைத்தவர்களின் பார்வைப் படத்தொடங்கியது. அப்பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் மிகவும் திறமைசாலிகளாக இருப்பார்கள் எனவும் போட்டித் தேர்வுகளில் அவர்கள் மிகவும் எளிதாக வெற்றி பெற்று விடுவார்கள் எனவும் பரவலாகப் பெற்றோர் மத்தியில் ஒரு கருத்து நிலவியது.

அக்கருத்து ஓரளவிற்கு உடன்படக்கூடியதாகவும் இருந்தது. ஏனென்றால் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அதற்கு ஏற்றார் போல் உருவாக்கப்பட்டிருக்கும். அதனால் பெரும் வசதி படைத்தப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அப்பள்ளிகளில் படிக்க வைத்தனர்.

இந்நிலையில்தான் ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்கு நீட் என்னும் தகுதித் தேர்வு நடைமுறைப் படுத்தப்பட்டது. இது சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்குப் பெரும் சாதகமாக மாறியது. இப்பள்ளிகளில் படித்தால் நீட் தேர்வில் மிகவும் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்றக் கருத்து காட்டுத்தீ போல் பெற்றோர் மத்தியில் பரவத் தொடங்கியது.

சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு கிராக்கி ஏறிய உடன் தமிழகத்தில், ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த பெரும்பாலான மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், தங்கள் பள்ளிகளில் இருந்த மெட்ரிக்குலேஷன் பள்ளி என்ற பெயர்ப்பலகையை மாற்றிவிட்டு சி.பி.எஸ்.இ பள்ளி எனப் பெயர் பலகையை மாட்டியுள்ளன.

மட்டுமின்றி தற்போது தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்படும் பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ பள்ளிகளாகவே உள்ளன. சி,பி.எஸ்.இ பள்ளிகள் முழுக்க முழுக்க மத்திய அரசின் தனிக் கட்டுப்பாட்டிற்குள் வருபவை. இப்பள்ளிகள் தொடங்குவதற்கு மத்திய அரசுப் பெரும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இருப்பதை விட முற்றிலும் வேறுபட்டக் கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு மைதானம், தகுதியும், தனித்திறமையும் வாய்ந்த ஆசிரியர்கள், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் அதற்கான வழிமுறைகள் அனைத்தும் முற்றிலும் வேறுபட்டவை. அதனால் மத்திய அரசிடமிருந்து சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான அனுமதி பெறுவதென்பது முயல் கொம்பாகவே உள்ளது.

இவை அனைத்தையும் கருத்தில் கொள்ளாமல், எவ்வித அனுமதியும் பெறாமல் பெரும்பாலானப் பள்ளிகள் சி.பி.எஸ்.இ எனப் பெயர் பலகையை மட்டும் மாட்டிக் கொண்டு எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி, பெற்றோரிடமிருந்து அதிகக் கட்டணத்தையும் வசூல் செய்து வகுப்புகள் நடத்துகின்றன.

இவற்றில் ஒருசிலப் பள்ளிகள் மிகவும் புத்திசாலித்தனமாகத் தங்கள் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு வரை பிள்ளைகளை படிக்க வைத்து விட்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக, ஏதேனும் சி.பி.எஸ்.இ. அனுமதி பெற்றிருக்கும் பள்ளிகளுடன் உடன்படிக்கைச் செய்து கொண்டு, பத்தாம் வகுப்பு தேர்வை அந்தப் பள்ளிகளுடன் இணைத்து எழுத வைக்கின்றனர்.

அவ்வாறு செய்யும் போது அம்மாணவர்கள் ஓராண்டு முழுவதும் அவர்கள் படித்த பள்ளியிலுள்ள சீருடையை அணிந்து செல்வார்கள். தேர்வு எழுதச் செல்லும் போது அவர்கள் எந்தப் பள்ளியின் பெயரில் தேர்வு எழுதுகிறார்களோ அதே பள்ளியிலுள்ள சீருடையில் சென்று தேர்வு எழுத வேண்டும். அதோடு அந்த பள்ளிகள் விதிக்கும் அனைத்துக் கட்டுபாடுகளுக்கும் கட்டுப்பட்டு அதிக கட்டணமும் கட்ட வேண்டும்.

இதே நியைத்தான் சில பள்ளிகள் பத்தாம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. அனுமதி பெற்று விட்டு, மேல்நிலை வகுப்புகளை அனுமதியின்றி நடத்தி வருகின்றனர். அவர்களும் +2 தேர்வு எழுதுவதற்கு இதே நிலையைதான் கடைபிடிக்கின்றனர்.

இவ்வாறு ஒரு பள்ளியில் படித்து விட்டு இன்னொருப் பள்ளியின் பெயரில் தேர்வு எழுதினால், அவர்களுக்கான சான்றிதழ்கள் கூட படித்தப் பள்ளியின் பெயரைக் கொண்டிருக்காது. மாறாக, எந்தப் பள்ளியின் பெயரில் தேர்வு எழுதினார்களோ அந்தப் பள்ளியின் பெயரில்தான் இருக்கும். இப்படிப்பட்ட மிக மோசமான கல்விக் களேபரத்திலும் இந்த அதிமேதாவிகள் ஈடுபடுகின்றனர்.

தற்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மொத்தம் பதினெட்டாயிரத்து ஆறு(18006) சி.பி.எஸ்.இ,(Central Board of Secondary Education) பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் எந்தெந்தப் பள்ளிகள் மத்திய அரசின் முழுமையான அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன என்பதை நன்கு தெரிந்து கொண்ட பின்னர் மட்டுமே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இல்லையோல் கடைசியில் பெரும் கஷ்டத்திற்கும், நஷ்டத்திற்கும், மன உளச்சலுக்கும் ஆளாக நேரிடும்.

அடுத்தக் கல்வியாண்டிற்கான வகுப்புகள் இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்க இருக்கும் நிலையில் அந்தந்த மாவட்ட நிர்வாகம், எந்தெந்தப் பள்ளிகள் உரிய அங்கீரம் பெற்றிருக்கின்றன என்ற விவரத்தை வெளிப்படையாகப் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் தெரிவிப்பது அனைவருக்கும் நலம் தருவதாக இருக்கும்.

மட்டுமின்றி சி.பி.எஸ்.இ. நிர்வாகமும், தங்கள் பெயரில் போலியாக நடத்தப்படும் பள்ளிகளைத் தீவிரமாகக் கண்காணித்து அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)

 

Cbse Dr Kamala Selvaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment