Advertisment

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவு இத்தனை சதவீதம்தான்... கருத்துக் கணிப்பை வெளியிட்ட முனைவர் வசந்திதேவி

Tamilnadu private organization neet exam opinion poll results released: தமிழ்நாட்டில் 87% பேர் நீட் தேர்வை விரும்பவில்லை; கல்விப் பாதுகாப்பு கூட்டமைப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு

author-image
WebDesk
New Update
TN SSLC Result 2021 Live updates :  10ம் மதிப்பெண் பட்டியல் வெளியீடு

தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என பெரும்பாலானோர் தெரிவித்திருப்பதாக, கல்விப் பாதுகாப்பு கூட்டமைப்பு கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

Advertisment

"நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குத் தேவையா?" என்ற தலைப்பில் கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு என்ற அமைப்பு, பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதை மூத்த கல்வியாளர் முனைவர் வசந்தி தேவி வெளியிட, மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் பெற்றுக் கொண்டார்.

இந்த ஆய்வினை வழக்கறிஞர் பிரிட்டோவும், கா.கணேசனும் ஒருங்கிணைத்தனர். இந்தக் கருத்துக்கணிப்பில் 42,834 பேர் பங்கேற்றனர். கருத்துக்கணிப்பில் ஒன்பது பிரதானக் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அவை…

1.நீங்கள் நீட் தேர்வை விரும்புகிறீர்களா?

2.தமிழக மாணவர்கள் நீட் தேர்வினால் பாதிப்படைகிறார்களா?

3.மாணவர்கள் தற்கொலைக்கு நீட் தேர்வு வழி வகுக்கிறதா?

4.நீட் தேர்வினால் இடஒதுக்கீடு முறை பாதிக்கப்படுகிறதா?

5.சமச்சீரற்ற கல்விமுறைகளில் (State Board, CBSE, ICSE, International) பயிலும் மாணவர்களுக்கு ஒரே தேர்வு முறை சரிதானா?

6.நீட் தேர்வு முறையால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்களா?

7.நீட் தேர்வு தமிழ்நாட்டின் உரிமையில் - நலனில் தலையிடுகிறதா?

8.நீட் தேர்வு மூலம் யாருக்கெல்லாம் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கிறது?

9.இன்றைய தமிழ்நாடு அரசு நீட் தேர்விற்கு முற்றிலும் விலக்குப் பெறும் என்று நம்புகிறீர்களா?

கருத்துக்கணிப்பில், பெரும்பாலானோர் நீட் தேர்வை விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதாவது 87.1% மக்கள் நீட் தேர்வை விரும்பவில்லை என்ற கருத்து தெரிவித்துள்ளனர். வெறும் 11.9% மக்கள் மட்டும் நீட் தேர்வை விரும்புவதாகக் கூறியுள்ளனர். நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்புக்கு ஏற்படுவதாக 90.5% மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.

நீட் தேர்வினால் இடஒதுக்கீடு முறை பாதிப்புக்கு உள்ளாகும் என்ற அச்சத்தை 83.2% மக்கள் வெளிப்படுத்தினர். 9.1% மக்கள் இடஒதுக்கீட்டுக்கு இதனால் பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளனர். அதேநேரம் 7.7% மக்கள் இதுபற்றித் தெரியவில்லை என தெரிவித்தனர். இதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக 89.7% மக்கள் கூறியுள்ளனர். அதேநேரம், பாதிப்பு இல்லை என்று 7.1% மக்களும், தெரியாது என்று 3.2% மக்களும் கூறினர்.

நீட் தேர்வு மாணவர்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்றும் அவர்களிடத்தில் தற்கொலை எண்ணத்தைத் தூண்டுகிறது என்றும் 86.9% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமச்சீரற்ற கல்வி முறையில் பயிலும் மாணவர்களுக்கு ஒரே தேர்வு முறை சரியல்ல என்று 67% மக்கள் கருத்துத் தெரிவித்தனர். அதேநேரம், 24.2% பேர் இந்த தேர்வு முறை சரி என்ற கருத்தையும் முன் வைத்தனர்.

நீட் தேர்வு மாநில உரிமைகள் மற்றும் நலனில் தலையிடுகிறது என்ற கருத்தை மிக அழுத்தமாக 79.6% மக்கள் முன்வைத்தனர். 11.1% மக்கள் மட்டுமே நீட் தேர்வு தமிழ்நாட்டின் உரிமையில் தலையிடவில்லை என்ற பதிலை முன்வைத்த வேளையில் 9.3% மக்கள் தெரியவில்லை என்றனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயில்வதோடு, தனியார் நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும், வசதி வாய்ப்பு மிகுந்த மாணவர்கள்தான் நீட் தேர்வில் வெற்றிபெற முடியும் என்ற கருத்தை பெரும்பாலான மக்கள் பதிவு செய்தனர். கிராமப்புற, ஏழை எளிய மாணவர்கள், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற கருத்தை வெறும் 2- 3 சதவீத மக்களே கூறினர்.

கருத்துக்கணிப்பில் பங்கேற்ற மக்களில் 75.8% மக்கள் தமிழ்நாடு அரசு நீட் தேர்விற்குக் கட்டாயம் விலக்குப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தனர். இதில், 36.5% மக்கள் தமிழ்நாடு அரசு நீட் தேர்விற்கு முற்றிலும் விலக்கு பெறும் என்ற முழுமையான நம்பிக்கையை தெரிவித்தனர்.

மக்களின் நம்பிக்கையை காக்கும்பொருட்டு தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் விரைவாக எடுக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டே தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு பெற வேண்டும்.

இவ்வாறு கல்வி பாதுகாப்புக் கூட்டமைப்பு கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Neet Tamilnadu School Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment