தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வின் முதல் ரவுண்ட்க்கான தற்காலிக ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனை எப்படி தெரிந்துக் கொள்வது மற்றும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியமான தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கவுன்சிலிங் சுற்று 1 தற்காலிக ஒதுக்கீட்டுக்கான முடிவை இன்று அதாவது செப்டம்பர் 13 அன்று வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தங்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டை சரிபார்த்து பதிவிறக்கம் செய்ய முடியும். -tneaonline.org.
இதையும் படியுங்கள்: நீட் தேர்வு; அரசுப் பள்ளி மாணவர்களில் 35% பேர் தேர்ச்சி; 6 மாவட்டங்களில் 100% தேர்ச்சி
ரேங்க் 1 முதல் 14,524 வரை உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ரவுண்ட் 1 கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதியுடையவர்கள்.
TNEA ரவுண்ட் 1 கவுன்சிலிங் தற்காலிக இடஒதுக்கீட்டை தெரிந்துக் கொள்வது எப்படி?
படி 1: முதலில், TNEA இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tneaonline.org/ பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
படி 2: ரவுண்ட் 1 தற்காலிக ஒதுக்கீடு பட்டியலுக்கான இணைப்பை கிளிக் செய்யவும்.
படி 3: தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியலுடன் கூடிய ஆவணம் திரையில் காண்பிக்கப்படும்.
படி 4: எதிர்கால பயன்பாடு மற்றும் குறிப்புக்காக முடிவைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தற்காலிக ஒதுக்கீடு வெளியான பிறகு, விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 14 ஆம் தேதி மாலை 5 மணி வரை ஒதுக்கப்பட்ட இருக்கை மற்றும் தங்களின் ஆவணங்களை ஏற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அவர்களது இடங்களை ஏற்றுக்கொண்ட விண்ணப்பதாரர்களுக்கான ஒதுக்கீடு தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அறிவிக்கப்படும்.
தற்காலிக இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
தற்காலிக ஒதுக்கீடு (Tentative Allotment) பெற்றவர்களுக்கு 2 நாட்கள் முடிவை தெரிவிக்க அவகாசம் வழக்கப்படும். இதில் 6 விருப்பங்கள் கொடுக்கப்படும்.
உங்களுக்கு வழக்கப்பட்ட தற்காலிக ஒதுக்கீடு உங்களுக்கு திருப்தியாக இருந்தால், நீங்கள் ஒதுக்கீட்டை உறுதி (Accept & Join) செய்ய வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கான ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். எனவே கண்டிப்பாக ஒதுக்கீட்டை உறுதி செய்துக்கொள்ளுங்கள். இவ்வாறு ஒதுக்கீட்டை உறுதி செய்த பின்னர் நீங்கள், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிக்குச் சென்று 7 நாட்களுக்குள் கல்வி கட்டணங்களை செலுத்தி, ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கான ஒதுக்கீடு ரத்தாகி விடும்.
அடுத்ததாக ஏற்றுக்கொள்கிறேன் மற்றும் மாற்ற விரும்புகிறேன் (Accept and Request for Upward movement) என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு செய்தால், நீங்கள் டி.எஃப்.சி (TNEA Facilitation centre) மையங்களுக்குச் சென்று 7 நாட்களுக்குள் கட்டணங்களை செலுத்த வேண்டும்.
மூன்றாவதாக, ஏற்றுக்கொள்ளவில்லை மற்றும் மாற்ற விரும்புகிறேன் (Decline & Upward) என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம். இதில் கவனிக்க வேண்டியது, உங்களுக்கு கிடைத்த சாய்ஸுக்கு மேல் உள்ள கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் அடுத்த ரவுண்டுக்கு செல்வீர்கள்.
நான்காவதாக நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை (Decline & Next Round) என்பதை தேர்ந்தெடுக்கலாம். இதனால் நீங்கள் அடுத்த ரவுண்டுக்கு செல்வீர்கள்.
ஐந்தாவதாக நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை மற்றும் வேறு படிப்புக்குச் செல்ல விரும்புகிறேன் (Decline & Quit) என்பதை தேர்ந்தெடுக்கலாம்.
ஆறாவது ஆப்ஷன், உங்களுக்கு தற்காலிக ஓதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லையென்றால், அடுத்த சுற்றில் தேர்ந்தெடுக்க தயாராகிறேன் என்பதை கிளிக் செய்யலாம்.
8 நாட்களுக்குப் பின்னர் உறுதி செய்யப்படாத இடங்களை, மாற்ற விரும்புவதாக ஆப்ஷனை தேர்ந்தெடுத்த மாணவர்களின் முன்னுரிமை பட்டியலில் அந்த இடங்கள், இருந்தால் அவர்களுக்கு வழங்குவார்கள். அடுத்த நாள் மீண்டும் உங்களுக்கு தற்காலிக இடஒதுக்கீடு வழங்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil