TNPSC Chairman ensures no malpractices in exams: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் வினாத்தாள் லீக், விடைத்தாள் முறைகேடு போன்ற எந்த முறைகேடுகளும் நடக்க முடியாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, டிஎன்பிஎஸ்சி தலைவர் கே.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இதில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வர்கள் தமிழக தேர்வர்களிடையே மிகவும் பிரபலமான தேர்வுகள். இந்த தேர்வுகளை 10 முதல் 16 லட்சம் பேர் ஒவ்வொரு முறையும் எழுதி வருகின்றனர்.
தமிழக இளைஞர்களில் பெரும்பாலானோரின் கனவு அரசு வேலை தான். முன்னர் அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் நடத்திய தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டன. அந்த வகையிலான வேலைவாய்ப்புகளில் முறைகேடுகள் மற்றும் தகுதியானவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. பின்னர் பெரும்பாலான அரசுத் துறைகளின் காலியிடங்களை நிரப்பும் பொறுப்பு டிஎன்பிஎஸ்சி வசம் வந்தது. டிஎன்பிஎஸ்சியானது தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வந்தது. இந்த தேர்வு முறைகளில் வெளிப்படைத் தன்மை, தேர்வு செயல்முறைகளில் மாற்றங்கள், ஆன்லைன் விண்ணப்பம் போன்ற நடைமுறைகள் மாற்றப்பட்டன. இதனால் தமிழக இளைஞர்கள் மிக மகிழ்ச்சி அடைந்து, தங்களின் அரசு வேலை கனவு நனவாகும் என்று, இந்த தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்தநிலையில், ஒரு சில இடங்களில் இந்த தேர்வுகளில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக கடந்த குரூப் 4 தேர்வில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்றிருந்தனர். இதுகுறித்த விசாரணையில், விடைத்தாளில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. பின்னர் அந்த முறைகேடுகளை தடுக்கும் வகையில், டிஎன்பிஎஸ்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. மேலும், எதிர்காலங்களில் முறைகேடுகள் நடைபெறா வண்ணம், விடைத்தாள் மற்றும் விண்ணப்பச் செயல்முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் வைக்கும் கருவூல அறைகளை ஆய்வு செய்தார்.
இதையும் படியுங்கள்: பழனி முருகன் கோயில் வேலைவாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித்தகுதி போதும்!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேர்வாணையத்தின் தலைவர் பாலசந்திரன், “ஓ.எம்.ஆர் மூலம் தேர்வு எழுதுவதால் ஏற்படும் தவறுகளை முழுவதுமாக களைய TNPSC பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. TNPSC தேர்வின்போது ஓஎம்ஆர் படிவத்தில் இருந்த தனிநபர் தகவல்கள் தேர்வு அறையிலையே பிரித்து எடுக்கப்படுவதால் தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதை தவிர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்விற்கான விடைத்தாள் கொண்டுவரும் வாகனங்களில் முறைகேடு நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்கும் வகையில் TNPSC அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் TNPSC தேர்வுகளை அச்சமின்றி எழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
TNPSC தேர்வு வினாத்தாள்கள் கசிவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. விடைத்தாள் யாருடையது என்பதை கணினி மூலம் மட்டுமே கண்டறியப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. விடைத்தாள் திருத்தத்தில் இருந்த தில்லுமுல்லுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் திருத்தும் பணியில் முறைகேடுகள் இல்லாத அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குருப் 4 தேர்வுகள் முன்பே திட்டமிட்டபடி, மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாத மத்தியில் அதற்கான அட்டவணை வெளியாகும், குரூப்-4 தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கான பாடத் திட்டம் (Syllabus) தயார் செய்யும் பணி ஓரிரு நாட்களில் நிறைவுறும். பிற அரசு மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் நடைபெறும் நாட்களை தவிர்த்து, டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதிகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. காலிப்பணியிடம் தற்போது 5 ஆயிரம் என கணக்கிடபட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை தேர்வு தேதி அறிவித்து கலந்தாய்வு வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எந்த பாடத்திட்டத்தை படித்தால் தேர்வு எழுத முடியும் என்ற விபரத்தையும் TNPSC வெளியிடப்பட்டுள்ளது. TNPSC தேர்வாணையம் மீது தேர்வர்களுக்கு நம்பிக்கை எழுந்துள்ளது.
நிரந்தர பதிவுடன் -ஆதார் அட்டை இணைப்பு கால அவகாசம் நிறைவு பெற்றுவிட்டது. அந்த கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை” இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil