Education Tamil News: ஆசிரியர்களின் நேரடி வேலை வாய்ப்பின் அதிகபட்ச வயது வரம்பைப் பள்ளிக் கல்வித்துறை குறைத்திருக்கிறது. ஆசிரியர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு பொதுப் பிரிவில் 57 வயதிலிருந்து 40 வயதாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஒதுக்கப்பட்ட பிரிவுகளுக்கு 57 வயதிலிருந்து 45 வயதாகக் குறைத்துள்ளது. அப்போதைய பள்ளிக் கல்விச் செயலாளர் பிரதீப் யாதவின் ஜனவரி மாத அறிவிப்பின்படி, இரண்டாம் நிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு இதுபோன்ற மாற்றங்கள் பொருந்தும்.
ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக சில அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த புதிய வயது வரம்பு பள்ளிகளுக்கு அதிக இளம் ஆசிரியர்களைக் கொண்டுவரும் எனவும் சில அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், இந்த முடிவு பல ஆசிரியர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. இதனால் TET-க்கு (ஆசிரியர் தகுதித் தேர்வு) தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் உட்பட லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தமிழக ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமரன் தெரிவித்தார். "ஒவ்வொரு ஆண்டும் 40,000 மாணவர்கள் பி.எட் கல்லூரிகளிலிருந்து வெளியே வருகிறார்கள். அதே நேரத்தில் அரசாங்கம் 1,000-2,000 பேரை மட்டுமே சேர்த்துக் கொள்கிறது. அதுவும் நிரந்தரமாக இல்லை. இந்த நடவடிக்கையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்”என்றார்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் ஃபெடரேஷன் பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரேமண்ட், “வயது வரம்பு இருக்கக்கூடாது. இந்த உத்தரவை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"