Advertisment

'நாட்டு நலன் கருதி நல்ல முடிவு எடுங்க நண்பா'! - விஜயகாந்தை சந்தித்த திருநாவுக்கரசர்

தேமுதிகவிற்கான தொகுதி ஒதுக்கீடு முடிவானவுடன், மற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் அதிமுகவிற்கு பெரிய சிரமம் இருக்காது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijayakanth Alliance 2019, DMDK Alliance, விஜயகாந்த், விஜயகாந்த் கூட்டணி

DMDK Alliance: தமிழக தேர்தல் களத்தில் இன்று பரபரப்பு ‘மூவ்’கள் அரங்கேறின. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகளை அழைத்து திமுக பேச்சுவார்த்தைக் குழுவினர் பேசினர். ‘இது முதல்கட்டப் பேச்சுதான். மீண்டும் சந்தித்து பேசுவோம்’ என்றார் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன். மாலையில் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகளை திமுக குழு சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. விஜயகாந்தை தேமுதிக அணிக்கு இழுக்க அதிமுக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை நட்பு ரீதியாக சந்தித்து திமுக அணிக்கு அழைத்தார்.

Advertisment

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் கட்சிகள் இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆளும் அதிமுகவைப் பொறுத்தவரை பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவந்து அவர்களுக்கு 7+1 என்ற கணக்கில் இடம் ஒதுக்கப்பட்டது. அதேபோல் பாஜகவுடன் கைக்கோர்த்துள்ள அதிமுக அவர்களுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது. ஆக, இவ்விரு கட்சிகளுக்கும் சேர்த்து 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆனால், விஜயகாந்தின் தேமுதிக கட்சியுடனான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. திமுகவைப் பொறுத்தவரை நேற்று(பிப்.20) காங்கிரசுக்கு தமிழகம் 9 + புதுச்சேரி 1 என பத்து தொகுதிகளை திமுக ஒதுக்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து மற்ற கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு ஏறக்குறைய இன்று இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேரம் வாரியாக நிகழ்வுகள்:

13:00 PM - தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், "பாராளுமன்றத் தேர்தல் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசினோம். அப்போது, நாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என விஜயகாந்திடம் கூறினேன்” என்றார்.

11:45 AM - தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்னும் சற்று நேரத்தில் நேரில் சந்திக்கிறார். அப்போது, கூட்டணி குறித்து அவர் ஆலோசனை நடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

11:16 AM - அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக - மார்க்சிஸ்ட் இடையேயான முதற்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுற்றது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "முதற்கட்ட பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்திருக்கிறது. எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் உள்ளிட்ட விவரங்களை நாங்கள் தெரிவித்திருக்கிறோம். 'மற்ற கூட்டணிக் கட்சிகளிடம் ஆலோசனை நடத்திய பிறகு சொல்கிறோம்' என திமுக தரப்பில் தெரிவித்து இருக்கிறார்கள்.  எங்கள் பேச்சுவார்த்தை தொடரும்' என்றார்.

11:00 AM - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குழு அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடன் சந்திப்பு. கூட்டணி தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேமுதிகவின் சுதீஷ், பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு பங்கேற்பு. விஜயகாந்த் இல்லத்தில் நடைபெறும் சந்திப்பில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

10:37 AM - சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் முதல்வரை சந்தித்துள்ளனர். தேமுதிகவின் நிலைப்பாடு குறித்தும், தேமுதிக விவகாரத்தில் அடுத்தக் கட்ட நகர்த்தல் குறித்தும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

10:20 AM - திமுக - மார்க்சிஸ்ட் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷணன், முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர். சுமார் ஒருமணி நேரத்திற்கு இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10:00 AM - திமுகவின் தோழமை கட்சியாக அந்த அணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இன்னும் சற்று நேரத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது. துரைமுருகன் தலைமையிலான இந்தக் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்படுகிறது.

குறைந்தது 7 தொகுதிகளை டிமாண்ட் செய்யும் தேமுதிக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேரடியாக சந்தித்து பேசியும் இறங்கி வர மறுத்து வருகிறது. இருப்பினும், இன்று தேமுதிகவுடனான கூட்டணியை அதிமுக உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றைத் தவிர, புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, தமிழ் மாநில காங்கிரஸ், என் ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடனும் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேமுதிகவிற்கான தொகுதி ஒதுக்கீடு முடிவானவுடன், மற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் அதிமுகவிற்கு பெரிய சிரமம் இருக்காது. இன்று தேமுதிகவை காம்ப்ரமைஸ் செய்வதே அதிமுகவின் முக்கிய பணியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

திமுகவைப் பொறுத்தவரை கூட்டணி ஹவுஸ்ஃபுல் போர்டு போடாத குறை தான். நேற்று(பிப்.20) காங்கிரசுக்கு தமிழகம் 9 + புதுச்சேரி 1 என பத்து தொகுதிகளை திமுக ஒதுக்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுதவிர, மதிமுக 4 இடங்களை கேட்க, விசிக 2 தொகுதிகளை முன்வைக்கிறது.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவை திமுகவின் நீண்ட கால தோழமை கட்சிகளாக இருந்து வருகின்றன. இக்கட்சிகளுக்கு தலா 1 இடம் ஒதுக்கலாம் என தெரிகிறது. இதில், மமக மற்றும் கொ.ம.தே.க ஆகிய இரு கட்சிகளும் திமுக சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று திமுக தலைமை கூறியிருக்கிறது. இதனால், பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று மாலைக்குள் திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dmk Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment