Advertisment

சோஷியல் எஞ்ஜினீயரிங்: சாதிவாரியாக வளைக்கும் பாஜக!

பாஜக தனது சோஷியல் எஞ்சினியரிங் மூலம் சாதிவாரியாக ஆதரவுத் தளங்களை வளைத்தாலும் தமிழகத்தில் வெற்றிபெறுமா என்பது காலம்தான் பதில் சொல்ல முடியும். ஏனென்றால், பாஜக செய்யும் சோஷியல் எஞ்ஜினியரிங்கைத்தா திராவிட கட்சிகள் வேறுவழிகளில் வேறு முறையில் செய்துவந்துள்ளார்கள்.

author-image
Balaji E
New Update
bjp, bjp social engineering, bjp accumulate people as caste wise, பாஜக, சோஷியல் எஞ்ஜினியரிங், திமுக, அதிமுக, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், tamil nadu assembly election 2021, tamil nadu politics, dmk, admk

இந்தியாவில் வட மாநிலங்களில் தனது சோஷியல் எஞ்ஜினீயரிங் மூலம் ஆட்சியைப் பிடித்த பாஜக தற்போது தமிழகத்தில் சாதிவாரியாக தனது ஆதரவு வட்டத்துக்குள் கொண்டுவரும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Advertisment

பாஜக எல்லா சாதிகளையும் இந்துக்களாக ஒருங்கிணைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. பாஜகவின் நோக்கம் சாதி எதிர்ப்பு நோக்கம் அல்ல. எல்லா சாதிகளும் பாஜகவின் வட்டத்துக்குள் அப்படியெ சாதிகளாகவே வளருங்கள் என்பதுதான்.

உதாரணத்துக்கு, மகாராஷ்டிராவில், பாஜக எதிர்ப்பு வாக்குகளாக இருந்த தலித் வாக்குகளைப் பிரித்து எல்லாவற்றையும் தனது ஆதரவு வட்டத்துக்குள் கொண்டுவந்தது. மகாராஷ்டிராவில் பட்டியல் பிரிவில் இருந்து முதலில் சமார்களை தனது ஆதரவு வட்டத்துக்குள் கொண்டுவந்தது. பிறகு, ராம்தாஸ் அத்வாலே போன்ற தலித் தலைவர்களை வளைத்து தனது ஆதரவட்டத்தை எல்லா சாதியினரும் உள்ள கட்சியாக மாறியது.

உத்தரப் பிரதேசத்தில், மாயாவதியும் முலாயம் சிங் யாதவ்வும் பலத்துடன் இருந்தபோது, பாஜக மாயாவதியின் ஜாதவ் சாதியை தவிர்த்து வால்மீகி போன்ற எண்ணிக்கையில் சிறிய சிறிய தலித் சாதிகளை இந்து அடையாளங்களுடன் பாஜக ஆதரவு தளத்துக்கு கொண்டுவந்தனர். பின்னர், சமார் சாதிகளைக் கொண்டுவந்தனர் இதையடுத்து, ஜாதவ் சாதியிலேயே பாஜக தலைவர்களை உருவாக்கினார்கள். அதே போல, யாதவ் சாதியிலும் பலருக்கு பொறுப்புகளைக் கொடுத்து அவர்களையும் பாஜக வட்டத்துக்குள் கொண்டுவந்தனர். இப்படி எல்லா சாதிகளையும் அப்படியே சாதிகளாகவே இந்து அடையாளத்துக்குள் கொண்டுவரும் ஒரு தேர்தல் சோஷில் எஞ்ஜினியரிங்கை பாஜக கச்சிதமாக செய்து முடித்தது. அதனால், இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை வென்றது. உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியையும் கைப்பற்றியது.

இந்த சோஷியல் எஞ்ஜினியரிங்கைத்தான் பாஜக தமிழகத்திலும் மேற்கொண்டு ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. அதிலும், தமிழகத்தில் இருபெரும் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா தலைவர்கள் இல்லாத நிலையில் சோஷியல் எஞ்ஜினியரிங்கை கட்டமைக்க தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

காங்கிரஸ் ஆதரவு தளமாக இருந்த நாடார் சமூகத்தை பாஜக ஆதரவு தளத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, பாஜகவால் பொன்.ராதாகிருஷ்ணன் மாநில தலைவராகவும் மத்திய இணை அமைச்சராகவும் ஆக்கப்பட்டார். அவருக்குப் பிறகு, காங்கிரஸ் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து தமிழிசையை பாஜகவுக்குள் கொண்டுவந்தனர். அவரை மாநிலத் தலைவராக்கினார்கள். இதையடுத்து, அவரை தெலங்கானா ஆளுநராக்கி தென் மாவட்டங்களில் வலிமையாக உள்ள நாடார்களின் வாக்குகளை பாஜக அதரவுத் தளமாக மாற்றினார்கள். ஆனாலும், நாடார்கள் சமூகத்தில் இன்னும் காங்கிரஸ் பாரம்பரியம் என்பது தொடர்ந்து இருந்து வருவதையும் பாஜக அறிந்தே உள்ளது.

அதே போல, தமிழகத்தில் பாஜக உயர் சாதியினருக்கான கட்சியாக அறியப்பட்டதால் தலித்துகள் விலகியிருந்த நிலையில், பட்டியல் சாதிகளில் உள்ள ஒரு பிரிவினரான பள்ளர்கள் உள்ளிட்ட 7 சாதிகளின் நீண்ட கால கோரிக்கையான தேவேந்திர குல வேளாளர்கள் பெயர் மாற்ற கோரிக்கையை நிறைவேற்றியதன் மூலம் தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் அந்த சமூகத்தினரை பாஜகவின் ஆதரவு தளத்துக்குள் கொண்டுவந்துள்ளனர்.

பிரதமர் மோடி அண்மையில் சென்னை வந்தபோது, தேவேந்திர குல வேளாளர்கள் சமூகத்தைப் பற்றி புகழ்ந்து பேசிய அவர்களின் ஆதரவை பெற்றுள்ளார்.

அதே நேரத்தில், தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர்களுக்கும் முக்குலத்தோருக்கும் இடையே உரசல் இருப்பதால் பாஜக தேவேந்திர குல வேளாளர்களுக்கு ஆதரவாக இருப்பது முக்குலத்தோர் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆளும் அதிமுகவின் அதிகாரம் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த சசிகலா, ஓ.பி.எஸ் கைகளில் இருந்தது வேறொரு சமூகத்தின் கைக்கு மாறியதில் பாஜகவுக்கு பங்கு உள்ளது என்றும் கருதுகின்றனர்.

ஏற்கெனவே பாஜக ஆதரவு தளமாக இருந்த முக்குலத்தோர் இப்படி அதிருப்தி அடைவதை சரிகட்டத்தான் சசிகலாவை அதிமுகவில் இணைக்க பாஜக அழுத்தம் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், சசிகலா அவராகவே அரசியலில் இருந்து ஒதுங்குவதாக தெரிவித்திருப்பதன் மூலம் இதற்கு காரணம் பாஜக அல்ல என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, முக்குலத்தோர் சமூகத்தை பாஜக திருப்திபடுத்தும் விதமாக சமாளித்து வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் கொங்கு வேளார் கவுண்டர்களின் ஆதரவு தளத்தை பாஜக வலுவாகப் பெற்றுள்ளது. வட மாவட்டங்களில் வன்னியர்களின் வாக்குத் தளத்தை பெரும்பான்மையாகக் கொண்ட பாமக தொடர்ந்து பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருவதால் வன்னியர்களை பாமக தக்கவைத்துக்கொண்டுள்ளது. பல இடங்களில் வன்னியர்களும் பாஜகவின் பின்னால் திரண்டு வருகின்றனர்.

பட்டியல் சாதியில் உள்ள மற்றொரு பிரிவினரான அருந்ததியர்களை வளைப்பதற்கு அந்த சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகன் பாஜக மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதன் மூலம் கொங்கு மாவட்டங்களில் பரவலாக உள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்த அருந்ததியர்களை பாஜக தனது ஆதரவு வட்டத்துக்குள் கொண்டுவந்திருக்கிறது.

சாதி ஒழிப்பு, சாதி எதிர்ப்பு அரசியலை வரலாறாகக் கொண்ட பறையர்களையும் பாஜக தனது ஆதரவு தளத்துக்குள் கொண்டுவரும் நோக்கத்தில், அவர்களுக்கும் ஆண்ட பரம்பரை வரலாறு இருக்கிறது என்று வீர சோழப் பறையர்கள் என்று அவர்களில் ஒரு குழுவினரை வளர்த்து வருகிறது. மேலும், அவர்கள் ஆதி திராவிடர் என்ற அடையாளத்தை புறக்கணித்து பறையர்களுக்கு சிவ சாம்பவ பறையர் என்ற பெயரில் அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் பாஜகவின் பின்னால் திரண்டுள்ளனர்.

அண்மையில், மத்திய உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரை சூட்டவும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயரில் சிறந்த விளையாட்டு வீரருக்கு விருது வழங்கவும் மத்திய அரசின் சார்பில் தபால்தலை வெளியிடவும் நாடார் சமுதாய முக்கிய தலைவர்களான பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன், நெல்லை நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் பத்மநாபன் நாடார், அகில இந்திய நாடார் மகாஜன சபை தலைவர் கார்த்திகேயன் நாடார் ஆகியோர் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த சந்திப்புக்கு பாஜகவைச் சேர்ந்த திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம்தான் ஏற்பாடு செய்துள்ளார்.

இப்படி, பாஜக தனது சோஷியல் எஞ்சினியரிங் மூலம் சாதிவாரியாக ஆதரவுத் தளங்களை வளைத்தாலும் தமிழகத்தில் வெற்றிபெறுமா என்பது காலம்தான் பதில் சொல்ல முடியும். ஏனென்றால், பாஜக செய்யும் சோஷியல் எஞ்ஜினியரிங்கைத்தா திராவிட கட்சிகள் வேறுவழிகளில் வேறு முறையில் செய்துவந்துள்ளார்கள்.

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான் நடந்து வருகிறது. தமிழகம் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்டது. தமிழ்நாட்டில் மக்கள் சாதி பெயர்களை குடும்பங்களுக்குள் உறவுகளுக்குள் ஊருக்குள் பயன்படுத்தினாலும் வெளியே பள்ளிக்கூட பெயர்களில் அரசு வேலைகளில் சாதிப் பெயரை பின்னொட்டாக பயன்படுத்துவதில்லை. இது திராவிட இயக்கத்தின் ஒரு பெரிய சாதனையாக இன்றுவரை திராவிட இயக்க ஆதரவாளர்களால் கூறப்படுகிறது.

திராவிட இயக்கம் என்பதே பிராமண எதிர்ப்பை முன்னிறுத்திய பிராமணர் அல்லாதோர் இயக்கத்தின் நீட்சிதான். மற்றொரு வகையில், அது இடைநிலை சாதிகள் மற்றும் பட்டியல் சாதிகளின் திரட்சியாக இருந்தது. திமுக உருவானபோது, பிராமணர் அல்லாத உயர் தட்டு சாதிகள், பெரும்பான்மை இடைநிலைச் சாதிகள், பட்டியல் சாதிகள் ஆகியவற்றின் திரட்சியாக உருவானது.

திமுகவில் இருந்து பிரிந்து எம்.ஜி.ஆர் ஆதிமுகவை உருவாக்கியபோது, திமுகவில் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காத பெரும்பான்மை இடைநிலைச் சாதிகள், வெண்மணி சம்பவத்துக்கு பிறகு திமுக மீது அதிருப்தி அடைந்த பட்டியல் சாதிகளில் பெரும் பகுதியினர் என திரண்டனர்.

திராவிட இயக்கம் சாதி எதிர்ப்பை கருத்தியல் அளவில் கொண்டிருந்தாலும், அதன் வாரிசாக உருவெடுத்து ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தேர்தல் அரசியலில் சாதிகளை பயன்படுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன. இந்த இரு கட்சிகளும் தேர்தல் அரசியலில் போடும் சாதி வாக்கு வங்கி சமன்பாடுகள் பாஜகவின் சோஷியல் எஞ்ஜினியரிங்க்கு சற்றும் குறைந்தவை அல்ல.

தமிழகத்தில், மதரீதியான துருவ அரசியலை உருவாக்க முடியாதது நிலை நிலவி வருகிறது. அதற்கு காரணம் தமிழகத்தில் சிறுபான்மை மதத்தினரின் மக்கள் தொகை மிகவும் குறைவானது. அதே நேரத்தில், மத ரீதியான உரசல்கள் ஒன்றிரண்டு சம்பவங்களைத் தவிர பெரிதாக எதுவும் இல்லை. திராவிட கட்சிகள் இரண்டுமே இந்து எதிர்ப்பையோ அல்லது சிறுபான்மை எதிர்ப்பையோ முன்வைப்பவைகளும் இல்லை. அதனால், இங்கே இந்துத்துவ அரசியலோ அல்லது முஸ்லிம், கிறிஸ்தவம் என சிறுபான்மை அரசியலோ வலிமையாக எழ முடியாத நிலை உள்ளது. அதனால், பாஜக தமிழகத்தில் மத அரசியல் செய்வதைவிட மக்களை சாதி வாரியாக திரட்டி சோஷில் எஞ்ஜினியரிங் மூலம் வெற்றி அடைய முடியும் என்று செயல்பட்டு வருகிறது.

அதனால், உண்மையில், பாஜக பல மாநிலங்களில் வெற்றிகரமாக மேற்கொண்ட சோஷியல் எஞ்ஜினியரிங் திராவிட கட்சிகளிடம் இருந்து பெற்ற உத்தி என்றே கருத வாய்ப்புள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Bjp Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment