Advertisment

ஒற்றை இலக்கத் தொகுதிகளுக்கு இடதுசாரிகள் ஒத்துப்போவார்களா?

திமுக கூட்டணியில் இடதுசாரிகள் ஒற்றை இலக்கத் தொகுதிகளுக்கு ஒத்துப்போவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
cpi, cpm, how many seats sharing in dmk alliance, tn assembly elections 2021, சிபிஐ, சிபிஎம், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021, திமுக கூட்டணி, k balakrishnan, mutharasan,dmk

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே கிட்டத்தட்ட கூட்டணிகள் பற்றியும் தொகுதிப் பங்கீடு பற்றியும் திவிரமான விவாதங்கள் சமூக ஊடகங்களிலும் அரசியல் தளத்திலும் நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் களம் கண்ட கூட்டணியே வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் களம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவில் கூட்டணி உறுதியாக இருந்தாலும் தொகுதி பங்கீடுதான் சலசலப்பு ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Advertisment

திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியமைக்க முடியாமல் போனதற்கு காரணம் திமுக குறைவான இடங்களில் போட்டியிட்டதே காரணம் என்று திமுகவினர் நம்புகின்றனர். அதனால், திமுக வருகிற சட்டமன்றத் தேர்தலில் 170-180 தொகுதிகள் வரை போட்டியிட திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், சிறிய கூட்டணி கட்சிகளை திமுக சின்னத்திலேயே போட்டியிட வைக்கவும் பேசப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அதே போல, திமுக தொகுதி பங்கீட்டில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தவிர மற்ற அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை பங்கீடு செய்ய முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இது குறித்து திமுக கூட்டணியில் உள்ள விசிகவும் மதிமுகவும் திமுக என்ன முடிவெடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் உள்ளதாகவே சமீபத்தில் திருமாவளவனும் வைகோவும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், அதே திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) (சிபிஎம்) ஆகிய இரு கட்சிகளும் இன்னும் அமைதியாக இருக்கின்றன.

சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடந்த நவம்பர் மாதம் ஐஇ தமிழுக்கு பேட்டியில் திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கேட்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் கடந்த காலங்களில் நாங்கள் போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற இடங்கள் எந்தெந்த தொகுதிகளில் எங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதையெல்லாம் கணக்கிட்டு அதற்கேற்றபடி சீட்டுகளை கேட்போம் என்று கூறினார்.

அந்த வகையில், கடந்த தேர்தல்களில் இடது சாரிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார்கள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை பார்ப்போம்.

2011 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியமான தேர்தல் என்றே கூறலாம். இந்த தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் அதிமுக ஆட்சிக்கு வந்தது. 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், தேமுதிக, சிபிஐ, சிபிஎம் மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, ஃபார்வர்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதில் குறிப்பாக சிபிஐ 10 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிபிஎம் 12 தொகுதிகளில் போட்டியிட்டு 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால், 2011ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகான சட்டப்பேரவையில் இடதுசாரிகள் மட்டும் 19 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டிருந்தனர். அதனால்தான், சிபிஐ மாநில செயலாளராக உள்ள டி ராஜா மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஜெயலலிதா இடது சாரிகளுக்கு தலா 1 தொகுதி மட்டுமே தருவதாகக் கூறிய சிபிஐ, சிபிஎம் ஆகிய 2 கட்சிகளும் கூட்டணியைவிட்டு வெளியேறி தனித்து போட்டியிட்டனர். 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிபிஐ 9 தொகுதிகளிலும் சிபிஎம் 9 தொகுதிகளிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தன.

அதற்குப் பிறகு வந்த 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சிபிஐ, சிபிஎம் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் எந்த கட்சியும் ஒரு இடங்களில்கூட வெற்றி பெறவில்லை. 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் சிபிஐ, சிபிஎம் தலா 25 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது.

அரசியல் சூழல் மாறியதைத் தொடர்ந்து, 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டனர். சிபிஐ 2 தொகுதிகளிலும் சிபிஎம் 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றன.

அதனால், தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடிக்கும் இடதுசாரி கட்சிகள் இரண்டும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக திமுக கூட்டணியில் போட்டியிட்டதுபோலவே, சிபிஐ 10 இடங்களையும் சிபிஎம் 12 இடங்களையும் கேட்க திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், திமுக தலைமை ஒற்றை இலக்கத்தில் சீட் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், திமுக கூட்டணியில் இடதுசாரிகள் ஒற்றை இலக்கத் தொகுதிகளுக்கு ஒத்துப்போவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் அறிவித்த பிறகு, இடதுசாரிகள் திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி எப்படியாவது 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அதே எண்ணிக்கையில் அல்லது அதைவிட கூடுதலாக தொகுதிகளை பெற்றுவிடுவது என்று திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment