Advertisment

12 தொகுதிகளில் 4 மட்டுமே பாஸ்: இடதுசாரிகள் வெற்றி விகிதம் வீழ்ச்சி ஏன்?

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிட்ட 12 இடங்களில், மொத்தமாக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1.09 சதவீத வாக்குகளையும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 0.85 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.

author-image
Gokulan Krishnamoorthy
புதுப்பிக்கப்பட்டது
New Update
12 தொகுதிகளில் 4 மட்டுமே பாஸ்: இடதுசாரிகள் வெற்றி விகிதம் வீழ்ச்சி ஏன்?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியில், கம்யூனிஸ்ட் கட்சிகளும் அங்கம் வகித்தன. திமுக தனித்து போட்டியிட்டு தனிப் பெரும்பானமையோடு ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த அளவிலான தொகுதிகளையே ஒதுக்கியது.

Advertisment

குறிப்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களையும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களையும் திமுக ஒதுக்கியது. அதன் படி, தளி, திருப்பூர் வடக்கு, பவானிசாகர், சிவகங்கை, வால்பாறை, திருத்துறைப்பூண்டி ஆகிய ஆறு தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர் (தனி), கீழ்வேளூர் (தனி) ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின் வெற்றி நிலவரம் :

தளி தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் 1,20,641 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். தொகுதியில் 62.18 சதவீதம் வாக்குகளை அவர் பெற்றுள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நாகேஷ் குமார் 64,415 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

திருப்பூர் வடக்கு தொகுதியில், எம்.சுப்ரமணியம் 73,282 வாக்குகளை பெற்று, சுமார் 40,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். இங்கு, அதிமுக வேட்பாளர் சுமார் 1 லட்சம் வாக்குகளை கடந்து, அமோக வெற்றிப் பெற்றுள்ளார்.

பவானிசாகர் தொகுதியில், பி.எல்.சுந்தரம் 83,173 வாக்குகளை பெற்று, சுமார் 15 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில், அதிமுக வேட்பாளர் பன்னாரியிடம் தோல்வியடைந்துள்ளார்.

சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட குணசேகரன், 70,900 வாக்குகளைப் பெற்று, அதிமுக வேட்பாளர் செந்தில் நாதனிடம் தோல்வியடைந்துள்ளார்.

வால்பாறை தொகுதியில் போட்டியிட்ட ஆறுமுகம், 59449 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளரான அமுல் கந்தசாமியிடம் தோல்வியடைந்துள்ளார்.

திருத்துறைப்பூண்டியில் போட்டியிட்ட வேட்பாளர் மாரிமுத்து, அதிமுக வேட்பாளர் சுரேஷ் குமாரை சுமார் 30000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளார். மாரிமுத்து 97,092 வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின் வெற்றி நிலவரம் :

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட மார்க்ஸிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாய் 74,194 வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவிடம் தோல்வியை தழுவியுள்ளார். கந்தர்வக்கோட்டை தனித் தொகுதியில் போட்டியிட்ட சின்னதுரை, 69710 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் ஜெயபாரதியை சுமார் 13000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட, என்.பாண்டி 72,848 வாக்குகளை பெற்று அதிமுக வேட்பாளரான சீனிவாசனிடம் தோல்வியடைந்துள்ளார். கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட சீனிவாசன், 37,380 வாக்குகளை பெற்று, அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூவிடம் படுதோல்வி அடைந்துள்ளார். அரூர் தனித் தொகுதியில் போட்டியிட்ட குமார், 68,699 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரான சம்பத்குமாரிடம் தோல்வி அடைந்துள்ளார்.

கீழ்வேளூர் தனித் தொகுதியில் போட்டியிட்ட நகைமாலி 67,988 வாக்குகள் பெற்று, பட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வடிவேல் ராவணனை சுமார் 40000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்கு சதவீதம் :

தளி, திருத்துறைப்பூண்டி ஆகிய தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரகளும், கந்தர்வர்வக்கோட்டை தனித் தொகுதி மற்றும், கீழ்வேளூர் தனித் தொகுதியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றிப் பெற்றுள்ளது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிட்ட 12 இடங்களில், மொத்தமாக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1.09 சதவீத வாக்குகளையும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 0.85 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், 1.94 சதவீத வாக்குகளையே இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பெற்றுள்ளது.

இந்த நிலையில், திமுக தனிப் பெரும்பான்மையோடு வெற்றிப் பெற்றிருக்க கூடிய நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாபெரும் சரிவை கண்டுள்ளன. இது குறித்து, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த பாலபாரதியிடம் பேசினோம்.

‘திமுக பெரிய உறுப்பினர்களை கொண்ட இயக்கம். கம்யூனிஸ்ட் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்களை கொண்ட இயக்கம். 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ள நிலையில், ஏன் இந்த தோல்வி என்பதை எங்களுடைய கட்சிகளுக்கு உள்ளாக பரிசீலனை செய்வோம். கம்யூனிஸ்ட் போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும் அதிமுக, பாமக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றிருப்பது அவர்களின் பண பலத்தை காட்டுகிறது. திமுக தனித்து பெருவாரியான இடங்களில் போட்டியிட்டதால், கூட்டணி கட்சிகளை கண்டு கொள்ளவில்லை எனும் வாதத்தை கம்யூனிஸ்ட் சார்பில் ஏற்றுக் கொள்ள முடியாது. திமுக நிர்வாகிகள் பலரும் எங்களுடன் இணைந்து நல்ல ஒத்துழைப்பு வழங்கி உள்ளனர். தற்போது, இடதுசாரிகள் சார்பில் பெரும்பாண்மையான தனித்தொகுதிகளை கேட்டு வாங்கி போட்டியிட்டோம். அதிலிருந்து 3 பட்டியலின சமூகங்களிலிருந்து சட்டசபைக்கு செல்ல உள்ளனர். இதுவே பெரு வெற்றி தான்’, என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Assembly Elections 2021 Marxist Communist Party Dmk Alliance Cpi And Mmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment