'அதிமுக கூட்டணி தொகுதிகள் விவரத்தை பின்னர் அறிவிப்போம்' - ஓ.பி.எஸ்

Congress and DMK Alliance Seat Sharing Decision Today Live Updates : 'அதிமுக கூட்டணி தொகுதிகள் விவரத்தை பின்னர் அறிவிப்போம்' - ஓ.பி.எஸ்

Congress and DMK Alliance Seat Sharing : திமுக கூட்டணியில் எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது என்பது குறித்து தொடர் இழுபறி நீடித்து வருவதால், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், புதுவையில் காலியாக உள்ள ஒரு சட்ட மன்றத் தொகுதிக்கும் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் வரும் 19-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி முடிவடைகிறது. வேட்பு மனுக்கள் மீது 27-ந் தேதி பரிசீலனை நடைபெறும். 29-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு மே 23-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

DMK Alliance Seat Sharing : திமுக தொகுதி பங்கீடு முடிவுகள்

வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தமிழகம், புதுவையில் பல்வேறு கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. குறிப்பாக திமுக – காங்கிரஸ் கூட்டணியில், எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகளில் திமுகவும் காங்கிஸும் போட்டியிடும் என்று இன்னும் உறுதியாகவில்லை. எனவே இந்த இழுபறிக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

07:50 PM – மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப்பின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.

07:25 PM – இன்னும் சிறிது நேரத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த முழு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

06:30 PM – அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டுக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

06:00 PM – காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்திருந்த நிலையில், #GoBackRahul #GoBackPappu ஆகிய ஹேஷ்டேக்குகள் அகில இந்திய அளவில் டிரெண்டானது.

05:25 PM – தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கலைஞர் கருணாநிதி நம்மிடம் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தனது தொழில் நண்பர்களுக்காகவே மோடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். நாட்டில் ஒரு பக்கம் பணக்காரர்கள் சொகுசாகவும், ஏழைகள் வறுமையிலும் வாடிக் கொண்டிருக்கின்றனர். உண்மை வெல்லும் என திருவள்ளுவர் கூறியிருக்கிறார். அந்த உண்மை கூறும் போது, மோடி சிறையில் இருப்பார்” என்றார்.

05:00 PM – நாகர்கோவிலில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “இன்னும் சில வாரங்களில் நாட்டின் பிரதமராகப் போவது ராகுல் காந்தி தான். தேர்தலுக்குப் பிறகு 40க்கு 40திலும் வென்று டெல்லியில் ராகுலை சந்திப்பேன் என்று உறுதி கூறுகிறேன்” என்று பேசினார்.

04:45 PM – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கி கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அது தஞ்சாவூரா அல்லாது மயிலாடுதுறையா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

04:30 PM – அதிமுக – தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

03:45 PM – அதிமுக – த.மா.கா கட்சியின் கூட்டணி ஒப்பந்தம் இன்னும் சிறிது நேரத்தில் கையெழுத்தாக உள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

02:30 PM – அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதியை ஒதுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று மாலை அதற்கான அறிவிப்பும் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

02:00 PM – ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் இன்று மாலைக்குள் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

01:28 PM : தேமுதிக நேர்காணல்

2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. அவைத்தலைவர் Dr.V.இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம்.R.மோகன்ராஜ், Ex:MLA., துணை செயலாளர்கள் L.K.சுதீஷ், ப.பார்த்தசாரதி,Ex:MLA., AS.அக்பர், பேராசிரியர்.S.சந்திரா ஆகியோர் உடனிருந்தனர்.

01:25 PM : ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பு

01:15 PM : கிண்டியில் உள்ள லீ மெரீடியன் ஹோட்டலில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

12.40 PM : மோடியை கட்டிப்பிடித்தது பற்றி ராகுல் பதில்

மோடியை ஏன் கட்டிப்பிடித்தீர்கள் என்று மாணவி கேட்ட கேள்விக்கு பதில் கூறிய ராகுல். “அன்பு தான் அடிப்படையானது. எனக்கு அவர் மீது வெறுப்போ கோவமோ கிடையாது. அவர் கோவமாக இருந்ததை பார்த்தேன். என் குடும்பத்தை அதிகமாகவே குறைக் கூறினார். அதன் மூலம் அவர் நேசிக்கப்படவில்லை என்று புரிந்துக் கொண்டேன். எனவே அன்பு மூலம் தான் கோவத்தை குறைக்க முடியும். அதனால் நான் அவருக்கு அன்பை காட்ட வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் கட்டிப் பிடித்தேன்” என்றார்.

12.20 PM : மோடியையும் விசாரிக்க வேண்டும்

ஊழல் குறித்து பேசும்போது நீரவ் மோடி, விஜய் மல்லைய்யா உட்பட பலரின் பெயரையும் குறிப்பிட்ட நீங்கள் ஏன் ராபர்ட் வத்ரா பெயரை குறிப்பிடவில்லை என மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், யாரை வேண்டுமானாலும் விசாரிக்க அரசுக்கு அனுமதி உள்ளது. ஆனால் ஒருவரையே குறி வைத்து விசாரிப்பது சரியாகாது. நானே சொல்கிறேன் ராபர்ட் வத்ராவை விசாரியுங்கள் ஆனால் ரஃபேல் விவகாரத்தில் மோடியையும் விசாரிக்க வேண்டும் என்றார்

12.00 PM : ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரிஸ் பேச்சு.

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகள் எழுப்பு அரசியல் மற்றும் நாட்டின் நடப்பு பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார் ராகுல் காந்தி. பெண்களுக்கான மரியாதை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “வட இந்தியாவை விட தென் இந்தியாவில் பெண்களுக்கான மரியாதை அதிகமாக உள்ளது” என்றார்

11.00 AM : கனிமொழி மற்றும் பலர் வரவேற்பு

திமுக எம்.பி. கனிமொழி, எம்.எல்.ஏ மா சுப்பிரமணியன், ப. சிதம்பரம், கே.எஸ் அழகிரி, செய்தி தொடர்பாளர் குஷ்பு மற்றும் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் ராகுல் காந்தியை வரவேற்றனர்.

10.30 AM : ராகுல் காந்தி சென்னை வருகை

தமிழகத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கி வைக்க சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி. நாகர்கோவிலில் இன்று பரப்புரையை தொடங்கி வைக்கிறார். பிற்பகல் நடக்க இருக்கும் இந்த பரப்புரைக்கு முன்னர், திமுகவுடன் இணைந்து கூட்டணி தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10.00 AM : காங்கிரஸ் – திமுக தொகுதி பங்கீடு

தென் மாவட்டங்களில் உள்ள 10 மக்களவை தொகுதிகளில் 1 தொகுதியில் மட்டுமே திமுக போட்டியிட உள்ளதாகவும், மற்ற 9 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Get all the Latest Tamil News and Election 2019 News at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

×Close
×Close