'நானும் காவலாளி தான்'! டிரெண்டாகும் பிரதமர் மோடியின் புதுப்பெயர்!

உங்களுடைய காவலாளிக்கு ஆதரவாகவும், தேசத்துக்குச் சேவை செய்யும் துணையாகவும் இருங்கள். நான் தனியாக இல்லை

பிரதமர் நரேந்திர மோடி, ட்விட்டர் அக்கவுண்ட்டில் தனது பெயரை Chowkidar Narendra Modi என்று மாற்றியுள்ளார். மோடியைத் தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினர் பலரும் தங்களது பெயரை ட்விட்டரில் மாற்றியுள்ளனர்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ‘நானும் தேசத்தின் காவலன்’ (Main Bhi Chowkidar) எனும் தேர்தல் பிரச்சாரத்தை சனிக்கிழமை அன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் ட்விட்டர் அக்கவுண்ட் ‘Chowkidar Narendra Modi’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பியூஷ் கோயல், ஜே.பி. நட்டா, ஹர்ஷ்வர்த்தன், தர்மேந்திர பிரதான் ஆகியோர் தங்கள் பெயர்களுக்கு முன்னால் ‘சவுகிதார்’ என்ற பெயரைச் சேர்த்துள்ளனர்.

மேலும் படிக்க – Election 2019 Candidates List Live Updates : சூடு பிடிக்கும் தேர்தல் களம்… வரிசையாக வேட்பாளர்களை அறிவிக்கும் கட்சிகள்!

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய நரேந்திர மோடி, ‘நாட்டில் யாரும் ஊழல் செய்ய விடமாட்டேன், நானும் ஊழல் செய்யமாட்டேன். தேசத்தின் காவலாளியாக இருப்பேன்’ என்று பேசியிருந்தார்.

ஆனால், ரஃபேல் போர் ஒப்பந்த ஊழல் குறித்த பேச்சின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘காவலாளி ஒரு திருடன்’ என்று மோடியை மறைமுகமாகக் குற்றம் சாட்டி வருகிறார். ஆனால், ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டை பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் ‘காவலாளி ஒரு திருடன்’ எனும் வார்த்தைக்குப் பதிலடி தரும் வகையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு, ‘தான் மட்டும் காவலாளி அல்ல, மக்கள் அனைவரும் காவலாளிகள்தான் என்று காவலாளி’ என்று குறிப்பிட்டார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட ட்வீட்டில், “உங்களுடைய காவலாளிக்கு ஆதரவாகவும், தேசத்துக்குச் சேவை செய்யும் துணையாகவும் இருங்கள். நான் தனியாக இல்லை. ஊழலுக்கும், தேசத்தில் சமூகக் கொடுமைக்கும் எதிராகப் போராடும் ஒவ்வொருவரும் காவலாளிதான். ஆதலால், காவலாளியாகிய நான் தனியாக இல்லை. தேசத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளிதான். இன்று ஒவ்வொரு இந்தியரும் நானும்கூட காவலாளிதான் என்று கூறுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்

அதேபோல், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தனது ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், “நடைமுறை வாழ்க்கையிலும், ஒழுக்கத்திலும் யார் ஒருவர் கறைபடியாமல் இருக்கிறாரோ அவரே காவலாளி. அனைவரும் மனதளவில் காவலாளியாக இருப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, #ChowkidarPhirSe என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. பாஜகவினர் பலரும் தங்களது ட்விட்டர் கணக்கில் பெயருக்கு முன்பு, ‘சவுகிதார்’ என்பதை சேர்த்து வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Election news in Tamil.

×Close
×Close