Advertisment

வன்னியர் இடஓதுக்கீட்டு கோரிக்கையில் அமைதி காக்கிறதா பாமக? தேர்தல் கணக்கு என்ன?

பாமகவின் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்றதன் மூலம், அதிமுக - பாமக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியானதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

author-image
WebDesk
New Update
vanniyar reservation, Pmk silence on reservation issue, pmk, dr ramadoss, பாமக, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு, pmk Next move, pmk How much constituencies aims, pmk alliance options, வன்னியர் இடஒதுக்கீடு, பாமக, டாக்டர் ராமதாஸ், பாமக கூட்டணி, அதிமுக, திமுக, pmk alliance with aiadmk, dmk

பாமக நிறுவனர் கடந்த சில மாதங்களாகவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் வருகிற வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரிக்கையை தனது கட்சியினரிடம் பேசி வந்தார். அதன் உச்ச கட்டமாக சென்னையில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டு சென்னையே ஸ்தம்பித்தது. அப்போது சிலர் ரயிலை மறித்து கற்களால் தாக்கிய காட்சி ஊடகங்களில் வெளியானது. அது தேர்தல் நேரத்தில் பாமகவின் போராட்டம் மீது மக்களுக்கு தவறான எண்ணத்தை உருவாக்கிவிடுமோ என்ற ஐயம் பாமகவினரிடையே ஏற்பட்டது. அதே நேரத்தில், அந்த போராட்டம் பாமகவின் சக்தியை வெளிப்படுத்தியது.

Advertisment

அதனால், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் போராட்டங்களை நடத்துவதில் இருந்து பின்வாங்கிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமகவினர் கிராம அளவிலும் தாலுகா அளவிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டங்களை நடத்த உத்தரவிட்டார். அவருடைய வழிகாட்டலின் பேரில், பாமகவினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

டாக்டர் ராமதாஸும் தனது அறிக்கைகளில், வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்பவர்களுடன்தான் கூட்டணி என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அதிமுக தங்கள் கூட்டணியில் பெரிய கட்சியாக உள்ள பாமகவை வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

அதனால், அதிமுகவின் மூத்த அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி இருவரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுடன் கடந்த மாதம் அவருடைய இல்லத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

டாக்டர் ராமதாஸ் அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையில் வன்னியர் இடஒதுக்கீடு சம்பந்தமாக மட்டுமே பேசப்பட்டது. அரசியல் எதுவும் பேசப்படவில்லை என்று கூறினார்.

அதற்குப் பிறகும், அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் பாமக நிறுவனருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கடந்த வாரம் பாமகவின் முக்கிய தலைவர்கள், பாலு, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அதிமுக அமைச்சர்கள் பல கட்டமாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அக்கட்சி தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி உள் இடஒதுக்கீடு அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனால்தான், ராமதாஸ் வன்னியர்களின் தனி இடஒதுக்கீடு கோரிக்கையில் அமைதி காப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாமகவின் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்றதன் மூலம், அதிமுக - பாமக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியானதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாமக கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்து அதிமுக கூட்டணியில்தான் உள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி உறுதி என்றாலும், பாமகவுக்கு வேறு கூட்டணி வாய்ப்புகள் இல்லையா என்ற கேள்விகளும் எழுந்தன.

திமுக ஆரம்பத்தில் இருந்து பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க விரும்பியது. ஆனால், ஏற்கெனவே திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் சாதியவாத மதவாத கட்சிகள் இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என்று திட்டவட்டமாகக் கூறினார். அதனால், ஒருவேளை திமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றால் விசிக வெளியே சென்றுவிடும் என்ற இக்கட்டான நிலை திமுகவுக்கு ஏற்பட்டது. அதே நேரத்தில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிமுக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் காட்டிய ஆர்வத்தை, திமுகவுடன் காட்டவில்லை என்று திமுக வட்டாரங்கள் குறைபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

திமுக கூட்டணியில் ஏற்கெனவே காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் என நிறைய கட்சிகள் இருப்பதாலும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் தனது கோரிக்கையில் பிடிவாதமாக இருந்ததாலும் திமுக ஒரு கட்டத்தில் பாமகவை கூட்டணிக்கு அழைக்கும் விருப்பத்தை இழந்துவிட்டது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாமக ஏற்கெனவே 2016 சட்டமன்றத் தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தனித்து போட்டியிட்டது. எந்த இடத்திலும் வெற்றிபெறவில்லை என்றாலும் 10 சதவீத வாக்குகளை பெற்றது. அதனால், இதுதான் பாமகவின் அதிகபட்ச வாக்கு சதவீதம் என்று பெரிய கட்சிகள் கணக்கு போடுகின்றன.

பாமக வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்றாலும் அது 40-30 இடங்களைக் கேட்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், அதிமுக கூட்டணியில் அதிக சீட்களைப் பெறும் பெரிய கூட்டணி கட்சியாக பாமக இருக்கும் என்று தெரிகிறது. வன்னியர்களுக்கு தனி உள் இடஒதுக்கீடு அறிவிப்போடும் அதிமுக பாமகவுடன் கூட்டணி அமைக்கும்போது வன்னியர்களின் வாக்குகளை சிதறாமல் பெற்றுவிடலாம் அதிமுக கணக்கு போடுவதாக தெரிகிறது.

இதனால், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரிக்கையில் அமைதி காக்கவில்லை; அவருடைய கோரிக்கை கிட்டத்தட்ட ஏற்கப்பட்டுவிட்டது. அதே நேரத்தில் அவர் கேட்ட சீட்களை திருப்தியாகத் தர அதிமுக ஒத்துக்கொண்டுள்ளது அதனால் அவர் நிதானமாக இருப்பதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Aiadmk Pmk Doctor Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment