'விவசாய கடன் தள்ளுபடி; வேலைவாய்ப்பு அதிகரிப்பு' - சுடச் சுட ராகுல் காந்தியின் பிரஸ் மீட்!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்க இருப்பதால் திமுக – காங்கிரஸ் கூட்டணி பரப்புரையை தொடங்கி வைக்க இன்று தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அதில் செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு ராகுல் பதில் அளித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தலுக்கான களப்பணிகள் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கிட்டத்தட்ட கூட்டணியை அறிவித்துவிட்டன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, முஸ்லிம் லீக், சிபிஐ ,சிபிஎம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியில் ஒரு தொகுதி, தமிழகத்தில் 9 தொகுதிகள் என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

ராகுல் காந்தி தமிழகம் வருகை

இந்நிலையில் இன்று நாகர்கோவிலில் நடைபெறவுள்ள பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்தார்.

சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவரை காங்கிரஸ் மற்றும் திமுக பிரமுகர்கள் வரவேற்றனர். திமுக எம்.பி. கனிமொழி, எம்.எல்.ஏ மா சுப்பிரமணியன், ப. சிதம்பரம், கே.எஸ் அழகிரி, செய்தி தொடர்பாளர் குஷ்பு மற்றும் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் ராகுல் காந்தியை வரவேற்றனர்.

முன்னதாக இவரின் வருகை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறப்புரையாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பு

செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், “தமிழகத்தை டெல்லி இயக்குவது இதுவரை இல்லாத ஒன்று. நாங்கள் விவசாயிகளை இந்த நாட்டின் அங்கமாக பார்க்கிறோம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன் தள்ளுபடி செய்ய்யப்படும். நாட்டில் பயங்கரவாதத்தை விட வேலையின்மை மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், உற்பத்தி மாநிலமான தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிப்போம். அதேபோல், பெண்களுக்கு நாடாளுமன்றம், பேரவையில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிப்போம். நான் ஒவ்வொரு முறையும் செய்தியாளர்களை சந்திக்கிறேன், பிரதமர் மோடி சந்திக்கிறாரா?.

ரபேல் விவகாரத்தில், விமானத்தின் தரம், செயல்பாடுகள் பற்றி காங்கிரஸ் கேள்வி எழுப்பவில்லை. ரபேல் ஒப்பந்தம் குறித்தே நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். அனில் அம்பானிக்கு இதில் ரூ.30,000 கோடி கிடைக்க மோடி துணை போயிருக்கிறார்.

நாட்டில் யார் அடுத்த பிரதமர் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பிரதமர் யார் என்பதை மக்களிடம் திணிப்பதை அடவாடி செயலாக காங்கிரஸ் பார்க்கிறது. எங்கள் நோக்கம் மோடியை வீழ்த்துவதே!.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் மீது எனது தனிப்பட்ட கோபம் ஏதுமில்லை. அவர்கள் விடுதலை குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.

காவிரி விவகாரம் இரு மாநிலங்களும் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனை. நீட் தேர்வால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு காங்கிரஸ் தான் காரணம் என யாரும் சொல்லவில்லை” என்றார்.

Get all the Latest Tamil News and Election 2019 News at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close