Advertisment

அதிமுக, திமுக அணிகளில் இழுபறி: கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி

அதிகமான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று ஆளும் அதிமுக எதிர்க்கட்சியான திமுகவும் திட்டமிட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் அதிகமான தொகுதிகளைக் கேட்பதால், கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளும் இழுபறியில் இருந்து வருகின்றன.

author-image
WebDesk
New Update
Tamil nadu assembly elections 2021, dmk alliance talks, அதிமுக, திமுக, பாமக, சிபிஎம், சிபிஐ, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சட்டமன்றத் தேர்தல் 2021, admk alliance talks, cpi, cpm, mdmk,admk, dmdk, pmk, vck

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கிய கூட்டணி பேச்சு வார்த்தைகள் தேர்தல் அறிவித்த பிறகும் முடிவாகாமல் நீடித்து வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று தமிழக அரசியல் களத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தில் ஆளும் அதிமுக கூட்டணி கட்சிகளிடம் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணியில் உடன் இருந்த கட்சிகளை முடிந்தவரை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக தனது கூட்டணியில் உள்ள பிரதான கட்சி பாமகவுக்கு 23 தொகுதிகளை அளித்து தக்கவைத்துக்கொண்டது.

பாஜகவின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து அதிமுக தலைவர்கள் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு டெல்லி சென்றார். பாமகவுக்கு அளித்த இடங்களைவிட கூடுதலாக அல்லது அதற்கு நிகராக இடங்களை அளிக்க வேண்டும் என்று பாஜக கேட்டு வருகிறது.

அதே போல, அதிமுக கூட்டணியில் தேமுதிகவும் தங்களுக்கு பாமகவுக்கு நிகரான இடங்களைக் கேட்டு வருகிறது. இல்லையென்றால், தனித்து போட்டியிடுவோம் என்று கூறி வருகிறது. தேமுதிகவின் எல்.கே.சுதீஷ், தனது சமூக ஊடகப் பக்கத்தில், நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு என்று பதிவிட்டிருந்தார். இதனால், தேமுதிக தங்களுக்கு பாமகவுக்கு நிகரான இடங்கள் அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதிமுக தலைவர்கள் இன்று தேமுதிகவுன் மீண்டும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணியில் இணைந்துள்ளார்.

மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி இந்த தேர்தலில் அதிமுக-பாஜகவுடன் கூட்டணி நடந்தால் மஜக கூட்டணியில் இருந்து விலகும் என்று தெரிவித்தார். அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகும் என்பதால் மஜக கூட்டணியில் இருந்து விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் உள்ள மற்றொரு கூட்டணி கட்சியான தமாகா கூட்டணியில் உறுதியாக இருக்கும். ஏனென்றால், அதிமுகவில் இருந்துதான் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

மற்றொரு புறம், திமுக கடந்த மக்களவைத் தேர்தலில் அதே கூட்டணி கட்சிகளுடன் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. ஆனால், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைதான் திமுகவுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது.

அதிமுக தனது கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான பாமகவுடன் முதலில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தது என்றால், திமுக தனது கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளான மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளது.

அதிமுக எப்படியானாலும் கூட்டணி கட்சிகளை சிதறவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றன. அதே நேரத்தில், 170 இடங்களுக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உம்மன் சாண்டி, சுர்ஜித்வாலா, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிர் ஆகியோர் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார்கள். அதில் காங்கிரஸ் 50 சீட்டுகள் கேட்க திமுக 24-25 என்று தருவதாக கூறியுள்ளது. ஆனால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக 35-30 இடங்களைப் பெறும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், திமுக கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி தோல்வியடைந்ததற்கு காரணம் குறைவான இடங்களில் போட்டியிட்டதே காரணம் என்று நம்புகிறது. அதனால், இந்த தேர்தலில் திமுக 170-180 இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ஆனால், திமுகவில் கூட்டணி கட்சிகள் நிறைய உள்ளன. மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், என பல கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அதனால், அனைத்து கட்சிகளுக்கும் முடிந்தவரை குறைவான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது.

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் 2006 மற்றும் 2011ம் ஆண்டு தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் பெற்ற இடங்களின் எண்ணிக்கையை பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. அதற்கு குறைத்து இடங்களைப் பெற்றால், அடுத்து வரும் தேர்தலில் உயர்த்தி கேட்க முடியாது என்று கூட்டணி கட்சிகள் கருதுகின்றன.

மதிமுகவும் விசிகவும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெற வேண்டும் என்று நோக்கத்தில் உள்ளன. திமுக இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஒற்றை இலக்கத்தில் இடங்களை வழங்க வேண்டும் என்று பேசி வருகிறது.

அதிகமான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று ஆளும் அதிமுக எதிர்க்கட்சியான திமுகவும் திட்டமிட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் அதிகமான தொகுதிகளைக் கேட்டு நெருக்கடி கொடுப்பதால்தான் இந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளும் இழுபறியில் இருந்து வருகின்றன. இதனால், கூட்டணி கட்சிகளும் அதிருப்தியில் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், தமிழகத்தின் இரு பெரும் தலைவர்களாக இருந்த கருணாநிதி ஜெயலலிதா இல்லாத சட்டமன்றத் தேர்தல் இது என்பதால், கூட்டணி கட்சிகளை கடந்த காலங்களைப் போல, அலட்சியமாகவும் கையாளமுடியாமல் அதிமுகவும் திமுகவும் நிதானமாக அணுகிவருகின்றன. கூட்டணி கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியே போனால், மக்கள் நீதி மய்யம், அமமுக, என 3வது அணி அமைப்பதற்கான ஒரு பெரும் வாய்ப்பும் உள்ளதால், இரு பெரும் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் தங்கள் கூட்டணி கட்சிகளிடம் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை இழுபறியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil
Dmk Aiadmk Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment