Advertisment

'பழம் நழுவிப் பாலில் விழுமா?' - விஜயகாந்தின் அடுத்த மூவ் என்ன?

'அவங்க பேச்சுக்கே அழைக்கவில்லை. அப்புறம் கூட்டணி வைப்பீங்களா-னா என்ன கேள்வி இது?'

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMDK State Party Status

DMDK State Party Status

வலிமையான கூட்டணியை உருவாக்கும் நோக்கில் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கும் அதிமுக, விஜயகாந்தின் தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், தேமுதிக முன்வைக்கும் சீட் எண்ணிக்கைக்கு அதிமுக இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை.

Advertisment

கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, 'பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கியிருக்கும் நீங்கள், எங்களுக்கும் குறைந்தது 7 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். எங்களுக்கும் பரவலாக வாக்கு வங்கி இருக்கிறது' என தேமுதிக தரப்பில் அழுத்தமாக கூறியிருப்பதாக தெரிகிறது.

ஆனால், இதற்கு அதிமுக தலைமை ஒப்புக் கொள்ளவில்லை. 'கடந்த 2014ல் இருந்த வாக்கு வங்கியை விட, தற்போது உங்களது வாக்கு வங்கி குறைந்துவிட்டது. ஆகவே, நீங்கள் சீட் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படியாக தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்திருக்கும் நிலையில், தேமுதிகவின் அடுத்தக் கட்ட மூவ் என்னவாக இருக்கும் என்பது கவனம் பெறுகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமரசம் பேசியும் கனிந்து வராத விஜயகாந்த், அதிமுக அமைச்சர்கள் வந்து (பேசும் விதத்தில் பேசாமல்) பேசினால் ஏற்றுக் கொள்வாரா என்பது கேள்விக்குறி. இதனால், விஜயகாந்தை எப்படி சமரசம் செய்வது என்று கையை பிசைந்து வருகிறது அதிமுக.

அதேசமயம், நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், 'தேமுதிகவுடன் இழுபறி என்றெல்லாம் இல்லை. சீட் பிரச்சனையால் தேமுதிகவுடன் இழுபறி என்பதெல்லாம் சரியான தகவல் கிடையாது' என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், நேற்று திமுக தலைவர் ஸ்டாலினிடம், 'தேமுதிக கட்சியுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறீர்களா? என்று செய்தி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, 'அப்படியெல்லாம் ஒன்றுமில்லை' என்று முக்கியத்துவம் கொடுக்காத டோனில் பதிலளித்து கடந்துவிட்டார்.

இந்நிலையில், கடைசி வரை அதிமுக இறங்கி வரவில்லை எனில், யாரும் கண்டுகொள்ளாத டிடிவியுடன் விஜயகாந்த் கூட்டணி வைக்கக் கூடும் என்றும் சில அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து சேலத்தில் டிடிவியிடம் செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு அவர், "தேமுதிகவும் எங்களுடன் கூட்டணி குறித்து பேசவில்லை. நாங்களும் அவர்களுடன் பேசவில்லை" என்றார்.

ஒருவேளை கூட்டணிக்கு அழைத்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டதற்கு, "அவங்க பேச்சுக்கே அழைக்கவில்லை. அப்புறம் கூட்டணி வைப்பீங்களா-னா என்ன கேள்வி இது?" என்றார்.

இந்தச் சூழ்நிலையில் தான், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இன்று விஜயகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த சந்திப்பு நட்பு ரீதியானது. அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பிய எனது நண்பர் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்தேன்" என்றார்.

அரசியல் ரீதியாக பேசப்பட்டதா? என்று திருநாவுக்கரசரிடம் கேட்டதற்கு, "அவர் ஒரு கட்சியின் தலைவர், நானும் ஒரு அரசியல் தலைவர். இது தேர்தல் நேரம். இரண்டு கட்சிகளின் தலைவர்களும் சந்திக்கும்போது, அரசியல் பேசாமல் இருக்க முடியுமா? பாராளுமன்றத் தேர்தல் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசினோம். அப்போது, நாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என விஜயகாந்திடம் கூறினேன்” என்றார்.

அதிமுக கூட்டணி இழுபறி, டிடிவியை பேச்சுவார்த்தைக்கு இதுவரை அழைக்கவில்லை என்ற சூழலில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸைச் சேர்ந்த திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்தித்து இருப்பது, மிக முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.

2016 சட்டமன்ற தேர்தல் சமயத்தில், தேமுதிகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்ட அந்த 'பழம்', இம்முறை நழுவி பாலில் விழுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Vijayakanth Su Thirunavukkarasar Dmdk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment