Advertisment

இ.வி.எம். மெஷின் பாதுகாப்பு: ஒரே குரலில் திமுக-அதிமுக; மாறுபட்ட பாஜக

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், பாஜக தலைவர் முருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
இ.வி.எம். மெஷின் பாதுகாப்பு: ஒரே குரலில் திமுக-அதிமுக; மாறுபட்ட பாஜக

TamilNadu Election News Updates : தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எவ்வித பிரச்னைகளும் இன்றி சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு எந்திரங்கள் வாக்குப்பதிவு நிறைவடைந்த நாள் அன்றே வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேர்தல் ஆணையத்தால் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டன. வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களை காவல்துறையினர் பாதுகாத்து வந்தாலும், அனைத்து கட்சியினரும் இரவுப் பகல் பாராது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு சென்ற பின், திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், ‘வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களைப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமை. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் பாதுகாக்கப்பட்ட மையங்களை 24 மணி நேரமும், இரவு பகல் பாராது கண் விழித்துப் பாதுகாத்திட வேண்டும். வாக்குப்பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் உள்ள இடைப்பட்ட காலத்தில், மிகுந்த விழிப்புணர்வுடன் சுழற்சி முறை அடிப்படையில் கண்காணித்திட வேண்டும். வாக்கு எண்ணிக்கை நாள் வரும் வரையில், தேர்தல் பணி என்பது தொடரவே செய்கிறது’,என அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஸ்டாலினின் அறிக்கையைத் தொடர்ந்து அதிமுக சார்பில், ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர், அவர்களது அறிக்கையில், ‘ மே 2-ம் தேதி அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும், வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும், முகவர்களும், கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பார்க்காமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்’, என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் பாதுகாப்பு வசதிகள் குறைவாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக வாக்குப்பதிவு மையங்களுக்கு இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்களும், கண்டெயினர் லாரிகளும் வந்து செல்வதாக குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியான சத்ய பிரதா சாஹூவை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், சந்தித்தார். அப்போது, வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும், இரவு நேரங்களில் மர்ம கண்டெயினர் லாரிகள் உலாவுவதாகவும் குற்றம் சாட்டினார். அவரது சந்திப்புக்கு பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், ‘வாக்கு எண்ணும் மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயலிழப்பதாகவும், வாக்கு எண்ணும் மையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய வைஃபை இணைப்புகள் வந்து செல்வதாகவும், லேப்டாப்புடன் மர்ம நபர்கள் உலா வருவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘தமிழக சட்டசபை தேர்தல் எவ்வித முறைகேடும் இல்லாமல் சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. அதற்காக தேர்தல் ஆணையத்திற்கு தமிழக பாஜக நன்றி தெரிவிக்கிறது. வாக்குப்பெட்டிகளை தேர்தல் ஆணையம் கவனத்துடன் பாதுகாத்து வருகிறது. ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு குறைவு என்றும், வாக்குப்பெட்டிகளில் முறைகேடு நடந்துவிடுமோ என்ற சந்தேகம் வருவதாகவும் மனுக்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளார்.

வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு குறித்து திமுக கூட்டணி கட்சிகளே எந்தக் கருத்தும் கூறவில்லை. ஆனால் திமுக மட்டுமே பல்வேறு இடங்களில் மனு கொடுப்பது, தவறான செய்திகளை அளிப்பது போன்ற முயற்சிகளை கையாண்டு வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் இருப்பின், நீதிமன்றத்தை திமுக நாடலாம். வாக்குப் பெட்டிகளை நம்புகிற கட்சி பாஜக. ஆனால், பணப்பெட்டிகளை நம்புகிற கட்சி திமுக. இருப்பினும், மே 2இல் தெரிந்துவிடும் மக்கள் யார் பக்கமென்று. மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு', என தனது அறிக்கையில் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு தன்மை குறித்து, திமுக அதிமுக அகிய இரு கட்சிகளுக்கிடையே ஒருமித்த குரலில் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணிக் கட்சியான பாஜக மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருவது, அரசியல் வட்டாரத்தில் பேசி பொருளாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Admk Stalin Election Commission Evm Machine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment