Advertisment

'மிஸ்' ஆன சமூக இடைவெளி: தேர்தல் களத்தில் அத்தனை 'கட்சி'களையும் வீழ்த்திய கொரோனா!

Election News: வேட்பாளர்கள் பலரும், கொரோனா வந்தாலும் பரவாயில்லை. தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் என்ற முனைப்பில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
'மிஸ்' ஆன சமூக இடைவெளி: தேர்தல் களத்தில் அத்தனை 'கட்சி'களையும் வீழ்த்திய கொரோனா!

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்த தொடங்கிய காலத்தில்,. தமிழகத்தில் பல இடங்களில் எங்கள் தொகுதியின் எம்.எல்.ஏ.வை காணவில்லையே என மக்கள் போராட்டம் நடத்திய காட்சிகளை எல்லாம் நாம் கடந்து வந்துள்ளோம். ஊரடங்கால், மக்கள் அவதியடைந்த நிலையில், ஆறுதலுக்கு கூட அவர்கள் வரவில்லையே என்பது தான் அவர்களின் குமுறல்.

Advertisment

இந்தாண்டு தொடக்கம் முதல், கொரோனாவுக்கு அஞ்சி தலைமறைவாய் இருந்த தலைவர்கள் பலரும் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தொகுதிக்கு உள்பட்ட பகுதியிலேயே குடியேறி இருந்தனர். தேர்தல் பரப்புரை தொடங்கியதும், ஊர் ஊராக, வீதி வீதியாக பரப்புரையில் ஈடுபட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அரசியல் கட்சித் தலைவர்கள் என வாக்கு வேட்டையில் ஈடுபட்ட பலரையும், பதம் பார்க்கத் தொடங்கி இருக்கிறது, கொரோனா வைரஸ்.

முகக் கவசம் அணிந்து தொகுதிக்குள் வாக்கு சேகரிக்கச் சென்றால், மக்களுக்கு தாம் யார் என்றே தெரியாத சூழல் உருவாகிவிடுமோ என்ற பயத்திலேயே, பல வேட்பாளர்களும் முகக் கவசம் அணியாமலேயே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் போது சமூக இடைவெளிக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்த வேட்பாளர்கள் பலரும், கொரோனா வந்தாலும் பரவாயில்லை. தேர்தலில் வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாகவே, பல வேட்பாளர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

publive-image

திமுக எம்பி கனிமொழியை, தென் தமிழகத்தின் தேர்தல் பொறுப்பாளராக கட்சித் தலைமை அறிவித்ததிலிருந்து, திருநெல்வேவி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனல் பறந்த பரப்புரைகளை மேற்கொண்டார். கொரோனா தொற்று அறிகுறிகள் ஏற்பட்டதை தொடர்ந்து, திடீரென --- விமானம் மூலம் சென்னை திரும்பிய கனிமொழிக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் பெற்று வந்த நிலையில், நலமுடன் வீடு திரும்பி உள்ளார் கனிமொழி.

publive-image

திமுக பொதுச் செயலாளரும், காட்பாடி தொகுதி வேட்பாளாருமான துரைமுருகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 82 வயதான துரைமுருகன், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்ட நிலையிலும், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரோடு, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பி உள்ளார், துரைமுருகன்.

publive-image

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கும், திமுக வின் திருவெறும்பூர் தொகுதியின் வேட்பாளார் அன்பில் மகேஷுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த டிசம்பரில் கொரோனா தொற்றுக்கு உள்ளானார். சில நாள்கள் சிகிச்சைக்குப் பிறகாக, மருத்துவமனையிலிருந்து நலமுடன் வீடு திரும்பினார்.

publive-image

விருப்ப ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சகாயத்தையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. சகாயம் அரசியல் பேரவை சார்பாக 20 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ராஜூவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு, தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

publive-image

பாஜக மாநில துணைத் தலைவரும், அரவக்குறிச்சி வேட்பாளருமான அண்ணாமலைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

மக்கள் நீதி மய்யத்தின் அண்ணா நகர் தொகுதி வேட்பாளர் பொன்ராஜ் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட, ஆன்லைன் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். குறிஞ்சிப்பாடி தொகுதியின் திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாபநாசம் தொகுதி வேட்பாளரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான ஜவாஹிருல்லாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

பல்லடம் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன், திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.சுப்பிரமணியன் ஆகியோருக்கும் வாக்குப்பதிவுக்கு பின் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளரான மாதவராவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” ( https://t.me/ietamil )

Corona Tamilnadu Election 2021 Annamalai Mp Kanimozhi Dmk Duraimurugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment