Advertisment

விறுவிறு தேர்தல் ஏற்பாடுகள்… தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடைசி நேர பேட்டி

பூத் சிலிப் இல்லையென்றாலும் அவர்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால் உரிய ஆவணத்துடன் வந்து வாக்களிக்கலாம் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
TN election chief sathya pratha sahoo, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, voters may vote without booth slip with valid documents, தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, tamil nadu assembly election, tamil nadu polls

தமிழகத்தில் நாளை காலை 7 மணிக்கு சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு தொடங்க உள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும் வாக்காளர்கள் தரப்பில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்.

Advertisment

தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 6) காலை 7 மணிக்கு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குகிறது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. முன்னதாக, நேற்று மாலையுடன் அரசியல் கட்சிகளின் பிரசாரம் முடிவடைந்தது. தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுவென தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழகத்திலுள்ள மொத்தம் 6,28,69,955 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேர் ஆண் வாக்காளர்களும் 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேர் பெண் வாக்காளர்களும் 7192 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாளை வாக்குப்பதிவின்போது 4,17,521 தேர்தல் பணியாளர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் விவிபேட் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடி மையங்களில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க பாதுகாப்பு உடை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 88,937 வாக்குச்சாவடிகளில் 10,813 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று (மார்ச் 5) மாலைக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப்கள் வழங்கப்படும். அப்படி பூத் சிலிப் இல்லையென்றாலும் அவர்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால் உரிய ஆவணத்துடன் வந்து வாக்களிக்கலாம். பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேகமான பூத் சிலிப்கள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய மாநகரங்களில் ஊபர் செயலியில் கோரிக்கை விடுப்பதன்மூலம் 2 கிலோமீட்டருக்குள் உள்ள தொலைவில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிப்பதற்கு 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் இலவச பயண வசதியை பெறலாம். அதே நேரத்தில், வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் எத்தனைபேர் வரிசையில் இருக்கின்றனர் என்பதையும் தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற எண்ணை தொடர்புகொண்டு வாக்காளர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.

தமிழகத்தில் நேற்று (மார்ச் 4) மாலை 3 மணிவரை மொத்தம் ரூ.428.46 கோடி பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் சி விஜில் மூலம் அதிக தேர்தல் விதிமீறல் புகார்கள் வந்துள்ளன. அதே போல, குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்கும்” என்று சத்ய் பிரதா சாகு கூறினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிக்கு நிறைவடைய உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் விறுவிறு வேகத்தில் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Tamil Nadu Assembly Elections 2021 Ias Sathyabrata Sahu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment