Advertisment

6 முறை அதிமுக வெற்றி... 5-வது முறையாக இபிஎஸ்: எடப்பாடி தொகுதியின் ஜாதகம் என்ன?

1971-ம் ஆண்டு துவங்கி 2016 வரையில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது

author-image
WebDesk
New Update
edappadi palanisamy

2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன பிறகு தான் இந்த ஊர் பற்றியே நம்மில் பலரும் அறிந்திருப்போம். ஆனால் பழனிசாமியின் வருகைக்கு பிறகு அந்த ஊரும், எடப்பாடியாரும் பிரிக்கவே முடியாத பந்தங்கள் போல் நம்முடைய அன்றாட வாழ்வில் இடம் பெற துவங்கின. வருகின்ற 15ம் தேதியன்று எடப்பாடியில் போட்டியிடுவதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என்ற அறிவிப்புகள் வெளியாகிய அதே நேரத்தில் திமுக தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. எடப்பாடியில் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் போட்டியிடுகிறார். இந்த கட்டுரை எடப்பாடி தொகுதி குறித்த சிறப்பு பார்வை.

Advertisment

எடப்பாடி கள வரலாறு

1971-ம் ஆண்டு துவங்கி 2016 வரையில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாமக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிகபட்சமாக 6 முறை வெற்றியை சந்தித்துள்ளது அதிமுக. 4 முறை அங்கிருந்து எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1989ம் ஆண்டு அதிமுக கட்சி இரண்டாக உடைந்து ஜெ அணி, ஜானகி அணி என்று உருவான போது ஜெக்கு ஆதரவாக நின்றார் எடப்பாடி பழனிசாமி. அப்போது சேவல் சின்னத்தில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றார் பழனிசாமி. பின்னர் 1991ம் ஆண்டு ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றியை கைப்பற்றினார் பழனிசாமி. 1971ம் ஆண்டு எடப்பாடி சட்டமன்ற தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

எடப்பாடி பாமகவின் கோட்டையாக மாறியது எப்போது?

1996ம் ஆண்டு துவங்கி அடுத்து மூன்று முறை அந்த தொகுதியில் வெற்றிக்கனியை பறித்தது பாமக. வன்னியர்களின் ஆதரவு இப்பகுதியில் பாமகவிற்கு கணிசமாக கிடைப்பதால் இந்த தொகுதியில் நின்று மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது பாமக. 1996ம் ஆண்டு மற்றும் 2001ம் ஆண்டு தேர்தல்களில் பாமகவின் எல். கணேசன் என்பவர் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். 2006ம் ஆண்டு தேர்தலில் பாமக காவேரி என்பவரை இக்களத்தில் போட்டியாளராக களம் இறக்கி வெற்றியை கைப்பற்றியது. பின்பு 2011ம் ஆண்டு தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிட்டது. கார்த்தி என்பவரை வேட்பாளராக நிறுத்தியது. அதிமுக சார்பில் பழனிசாமி போட்டியிட்டார்.

எடப்பாடி பழனிசாமி :

2011ம் ஆண்டு தேர்தல் பாமகவிற்கு பெரிய அளவில் வெற்றியை தரவில்லை என்று தான் கூற வேண்டும். 1,04,586 வாக்குகளை அந்த தேர்தலில் பெற்றார் எடப்பாடி பழனிசாமி. அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திக் 69848 வாக்குகளை மட்டுமே கைப்பற்றினார். அங்கு போட்டியிட்ட மற்ற கட்சிகள் டெபாசிட் இழந்தனர். 2016ம் ஆண்டு தேர்தலின் போது அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, திமுக சார்பில் முருகேசன், தனித்து களம் இறங்கிய பாமக சார்பில் அண்ணாதுரை ஆகியோர் போட்டியிட்டனர். பழனிசாமி அந்த தேர்தலின் போது 98,703 வாக்குகளை பெற்றார். பாமக அந்த தேர்தலில் 56681 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. மூன்றாவது இடத்தில் 55149 வாக்குகளை பெற்றது திமுக. தற்போது எடப்பாடியில் அதிமுக கூட்டணியில் பாமக இருப்பது மற்றும் 10.5% உள் ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் பழனிசாமிக்கு 5வது முறையாக வெற்றி வாய்ப்பினை உருவாக்கி தரலாம். ஆனால் முடிவுகள் மக்கள் கையில் தான்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment