பிருந்தாவனம் – சினிமா விமர்சனம்

மனித உறவுகளின் முக்கியத்துவம், நல்லுணர்வுகளின் வலிமை ஆகியவற்றை நகைச்சுவை கலந்து சொல்வதில் ராதா மோகன் மீண்டும் ஒருமுறை வெற்றியடைகிறார்

By: Updated: May 26, 2017, 03:52:57 PM

எல்லோரும் நல்லவரே

மனிதரின் நல்லியல்புகளை முன்னிறுத்தும் இயக்குநர் ராதா மோகன். மனிதர்களின் நல்லியல்புகளை, அன்பின் உன்னதத்தை அவர் படங்கள் பறைசாற்றும். படத்தில் வரும் பிரச்சினைகளின் பின்னணியிலும் கெட்ட எண்ணம் அவ்வளவாக இருக்காது. மனித உறவுகளின் மீதும் வாழ்வின் மீதும் நம்பிக்கை கொள்ளவைக்கும். ராதா மோகனின் படங்களின் வரிசையில் ‘பிருந்தாவனம்’ படமும் சேர்ந்துகொள்கிறது.

ஊட்டியில் முடியலங்கார நிலையம் ஒன்றில் பணிபுரியும் கண்ணனுக்கு (அருள்நிதி) வாய் பேச இயலாது, காது கேட்காது. பிறரது உதட்டசைவை வைத்தே எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறார். சிறிய வயதிலேயே அனாதையாகிவிட்ட அவரை எம்.எஸ்.பாஸ்கர் ஒரு விடுதியில் சேர்த்து வளர்த்து ஆளாக்குகிறார்.

அதே ஊரில் வசிக்கும் தான்யாவுக்கு அருள்நிதியின் மீது காதல். அவரிடம் நட்பாகப் பழகும் அருள்நிதி அவர் காதலை ஏற்க மறுக்கிறார்.

அந்த ஊருக்கு ஒரு வேலையாக வரும் நடிகர் விவேக்குக்கும் அருள்நிதிக்கும் பழக்கம் ஏற்படுகிறது. விவேக்கிற்கு அருள்நிதி உதவி செய்கிறார். தான்யாவின் காதலுக்கு உதவுவதன் மூலம் அருள்நிதியின் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்த விவேக் முயல்கிறார். ஆனால் அருள்நிதி பிடிவாதமாக இருக்கிறார். முரட்டுத்தனமாகக் காதலை எதிர்க்கிறார். அவரது பிடிவாதத்துக்குக் காரணம் என்ன, அதை எப்படி விவேக்கும் பிறரும் சேர்ந்து உடைக்கிறார்கள் என்பதையெல்லாம் நகைச்சுவையும் செண்டிமெண்டும் கலந்து சொல்கிறார் ராதா மோகன்.

அருள்நிதி, தான்யா, பாஸ்கர், விவேக் ஆகிய பாத்திரங்களை இயல்பாகவும் நேர்த்தியாகவும் செதுக்கியிருக்கிறார் இயக்குநர். படத்தின் முதல் பாதியில் திருப்பங்களோ கதை நகர்வோ அதிகம் இல்லாவிட்டாலும் நகைச்சுவையின் மூலம் படத்தை அலுப்பில்லாமல் கொண்டுசெல்கிறார். அருள்நிதியின் பின்னணி, அவர் மறைத்துவைக்கும் ரகசியம், காதல் போராட்டம் ஆகியவை இரண்டாம் பாதிக்கு வேகம் கூட்டுகின்றன. அருள்நிதி காதலை மறுப்பதற்குச் சொல்லும் காரணம் எதிர்பாராத திருப்பம். காதலுக்கு வெற்றி கிடைக்கும் விதம் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஊர் மக்கள் அனைவரும் இவ்வளவு அன்பாக, சினேகமாக இருப்பது பார்க்க நன்றாக இருந்தாலும் அவ்வளவு இயல்பாக இல்லை. ராதா மோகன் படத்தில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலும் நல்லவர்களாக இருப்பார்கள். இதிலும் அப்படித்தான். என்றாலும் இத்தகைய சித்தரிப்பு கதையின் இயல்புத் தன்மையைப் பாதித்துவிடுகிறது. சிக்கல்கள், முரண்கள் அதிகம் இல்லாததால் நகைச்சுவையை நம்பியே படத்தை நகர்த்திச் செல்கிறார். விவேக் புண்ணியத்தில் நகைச்சுவைக்குப் பஞ்சம் இல்லை.

விவேக்காகவே வரும் விவேக் நெடுநாட்களுக்குப் பிறகு திருப்தியான நகைச்சுவையை வழங்கியிருக்கிறார். அவரது அனுபவம் படத்துக்குப் பெரிய பலம். மாற்றுத் திறனாளியாக வரும் அருள்நிதி, தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். தனக்குள் ஒரு ரகசியத்தைப் பொத்திவைத்துக்கொண்டு குமுறுவதை நன்றாக வெளிப்படுத்துகிறார். தான்யா பார்க்க அழகாக இருக்கிறார். நேர்த்தியான நடிப்பை அனாயாசமாக வெளிப்படுத்துகிறார். எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய் ஆகியோரின் நடிப்பு படத்தின் மதிப்பைக் கூட்டுகின்றன.

விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் காதுக்கு இதமாக இருக்கின்றன. பின்னணி இசை சில இடங்களில் கதையோடு இயல்பாக இணைந்துகொள்கிறது. சில இடங்களில் தனியாகக் கேட்கிறது. விவேக்கானந்தின் ஒளிப்பதிவு ஊட்டியின் அழகையும் அமைதியையும் அள்ளித் தருகிறது.

மனித உறவுகளின் முக்கியத்துவம், நல்லுணர்வுகளின் வலிமை ஆகியவற்றை நகைச்சுவை கலந்து சொல்வதில் ராதா மோகன் மீண்டும் ஒருமுறை வெற்றியடைகிறார். திருப்பங்களோ நுட்பங்களோ அதிகம் இல்லாதது கதையின் ஓட்டத்தைக் குறைக்கிறது. நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, மனதைத் தொடும் சில காட்சிகள் ஆகியவை இந்தக் குறையை மறக்கவைக்கின்றன.

மதிப்பு: 3/5

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d %e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be %e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X