Advertisment

6 அத்தியாயம் - சினிமா விமர்சனம்

பேய் என்ற ஒற்றை மையத்தைக் கொண்டு எடுக்கப்பட்ட 6 குறும்படங்களை ஒன்றாகத் தொகுத்து வெளியிடப்படும் படம்தான் ‘6 அத்தியாயம்’.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
6 Athiyayam

பேய் என்ற ஒற்றை மையத்தைக் கொண்டு எடுக்கப்பட்ட 6 குறும்படங்களை ஒன்றாகத் தொகுத்து வெளியிடப்படும் படம்தான் ‘6 அத்தியாயம்’.

Advertisment

முதல் அத்தியாயம் : ‘சூப்பர் ஹீரோ’ என்ற தலைப்பைக் கொண்ட இந்த அத்தியாயத்தில், சூப்பர் ஹீரோக்களின் கதையைப் படிக்கும் ஒரு இளைஞன், தன்னையும் சூப்பர் ஹீரோவாகவே நினைத்துக் கொள்கிறான். தான் சம்பந்தப்பட்டவர்கள் சிக்கவுள்ள ஆபத்தில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவதாக அவன் கூறுவதைப் பார்த்து, மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கின்றனர் அவன் குடும்பத்தினர். அவன் சொல்வதை நம்பாத மனநல மருத்துவர், அவன் தகுந்த ஆதாரத்தைக் காட்டியதும் நம்புகிறார். இருந்தாலும், உண்மையை சோதித்துப் பார்க்க ஒரு முடிவு எடுக்கிறார். அது என்ன என்பதுதான் இந்த அத்தியாயம்.

இரண்டாவது அத்தியாயம் : ‘இனி தொடரும்’ என்ற தலைப்பைக் கொண்ட இந்த அத்தியாயத்தில், ஒரு இளைஞனை சிறுமி ஒருத்தி பயமுறுத்திக் கொண்டே இருக்கிறாள். அதைப் பார்க்கும் ஒரு இளம்பெண், ‘அவனை ஏன் பயமுறுத்துகிறாய்?’ என்று கேட்க,  ஃப்ளாஷ்பேக் சொல்கிறாள் சிறுமி. அதைக் கேட்கும் இளம்பெண் அதிர்கிறார். அந்த ஃப்ளாஷ்பேக் என்ன? அதன்பிறகு இளம்பெண் என்ன முடிவெடுத்தாள்? என்பதுதான் இந்த அத்தியாயத்தின் கதை.

மூன்றாவது அத்தியாயம் : ‘மிசை’ என்ற இந்த அத்தியாயத்தில், தன்னுடைய அறை நண்பர்கள் தன் காதலியின் புகைப்படத்துக்கு முத்தம் கொடுத்ததாகப் பேசிக் கொள்வதைக் கேட்கும் இளைஞன், அவர்களைக் கொல்ல முடிவெடுத்து கத்தியை எடுக்கிறான். அந்த நேரத்தில், அவனைத் தேடி அறைக்கு வருகிறாள் அவன் காதலி. அதன்பிறகு என்ன நடக்கிறது? என்பது இந்த அத்தியாயத்தின் கதை.

நான்காவது அத்தியாயம் : ‘அனாமிகா’ என்ற தலைப்பைக் கொண்ட இந்த அத்தியாயத்தில், ஆளரவமற்ற இடத்தில் இருக்கும் தன் மாமா வீட்டுக்குச் செல்கிறான் ஒரு இளைஞன்.  அந்த வீட்டில் ஒரு பெண் தூக்கு மாட்டி இறந்ததாகச் சொல்லும் மாமா, அவனை அங்கேயா தனியாக விட்டுவிட்டு வைப்பாட்டி வீட்டுக்குச் சென்றுவிடுகிறார். இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்ட அவன், அந்த வீட்டில் தனியாக எப்படி இருந்தான்? என்பதுதான் இந்த அத்தியாயத்தின் கதை.

ஐந்தாவது அத்தியாயம் : ‘சூப் பாய் சுப்ரமணி’ என்ற இந்த அத்தியாயத்தில், ஒரு இளைஞன் எந்தப் பெண்ணிடம் பேசினாலும், அந்தப் பெண்ணிடம் நெருங்க விடாமல் செய்வதோடு, அவனை அடி வாங்கவும் வைக்கிறது ஒரு பேய். அந்தப் பேய் யார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக  மந்திரவாதியிடம் செல்கிறான் அவன். அது யார் எனத் தெரிய வரும்போது குபீரென சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது. அந்தப் பேய் யார்? அந்தப் பேயை எப்படி ஓட்டினார் மந்திரவாதி? என்பதுதான் இந்த அத்தியாயத்தின் கதை.

ஆறாவது அத்தியாயம் : ‘சித்திரம் கொல்லுதடி’ என்ற இந்த ஆறாவது அத்தியாயத்தில், ஓவியம் வரையும் ஒரு இளைஞனுக்கு, வெளிநாட்டில் இருந்து பெண் ஓவியம் ஒன்று வரைந்து தரும்படி ஆர்டர் வருகிறது. அதற்கு ரெபரன்ஸுக்காக பழைய புத்தகக் கடையில் இரண்டு புத்தகங்கள் வாங்குகிறான். அப்போது ‘கோகிலா’ என்ற புத்தகமும் தவறுதலாக அந்தப் புத்தகங்களுடன் சேர்ந்து வருகிறது. அதில் கூறப்பட்டிருந்தபடி பெண் ஓவியத்தை வரைய ஆரம்பிக்கிறான். ஆனால், கண் மட்டும் பாக்கியிருக்கும்போது, அந்தப் புத்தகம் பாதிதான் இருக்கிறது என்று தெரிய வருகிறது. மீதியைத் தேடி அவன் செல்லும்போது என்ன நடக்கிறது என்பதுதான் இந்த அத்தியாயத்தின் கதை.

கேபிள் சங்கர், சங்கர் தியாகராஜன், அஜயன் பாலா, சுரேஷ், லோகேஷ். ஸ்ரீதர் வெங்கடேசன் என வரிசைப்படி ஆளுக்கொரு அத்தியாயத்தை இயக்கியுள்ளனர். ஆளுக்கொரு குறும்படத்தை எடுத்து, ஒரு படமாகத் தொகுத்துள்ளனர். பேய் என்பது மட்டும்தான் இந்த 6 அத்தியாயங்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை.

6 அத்தியாயங்களில், முதல் நான்கில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ‘சூப் பாய் சுப்ரமணி’ கில்மா + காமெடி கலந்து சிரிக்க வைக்கிறது. ‘சித்திரம் கொல்லுதடி’ என்ற ஆறாவது அத்தியாயம் தான் உண்மையில் பிரம்மிப்பையும், திகிலையும் ஏற்படுத்துகிறது. இன்னும் கொஞ்சம் விஷயம் சேர்த்து தனிப்படமாகவே எடுக்கும் அளவுக்கு கதையையும், மேக்கிங்கையும் கொண்டுள்ளது இந்தப் படம்.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் முதலில் காட்டிவிட்டு, க்ளைமாக்ஸை மட்டும் கடைசியில் தனித்தனியாக காண்பிக்கிறார்கள். இது கொஞ்சம் அலுப்பை ஏற்படுத்தினாலும், தமிழில் புதிய முயற்சி என்பதால் வரவேற்கலாம்.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment