சீனாவில் பாகுபலி 2 ஓபனிங் வசூல் ஒரு பார்வை

தங்கலின் சீன வசூலை பாகுபலி 2 எட்டிப்பிடிப்பது கடினம் என்றே தெரிகிறது. முதல்நாளில் குறைவாக வசூலித்தாலும் அடுத்தடுத்த நாள்களில் தங்கலின் வசூல் கூடியது.

பாபு

பாகுபலி 2 படம் மே 4 சீனாவில் வெளியானது. பாகுபலி சீனாவில் சுமாராக வசூலித்த நிலையில், பாகுபலி 2 படத்தின் ஓபனிங் வசூல் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்தியாவில் பலமாக இருந்தது. இரண்டு காரணங்கள்.

பாகுபலி 2 கடந்த 2017 ஏப்ரல் 28 வெளியாகி இந்தியாவில் பிரமாண்ட வசூலை பெற்றது. சீனாவில் அதற்கான வரவேற்பு எப்படி என்பதை அறியும் ஆவல் அனைவருக்கும் இருந்தது. இரண்டு, அமீர்கானின் தங்கல் சீனாவில் 1200 கோடிகளை வசூலித்து. பாகுபலி 2 படத்தின் மொத்த வசூல் சாதனையை முறியடித்தது. பாகுபலி 2 சீனாவில் நல்ல வசூலைப் பெற்றால் தங்கலின் மொத்த வசூலை முறியடிக்க வாய்ப்புள்ளது. முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு பாகுபலி டீமுக்கும், படபடப்பு அமீர்கான் டீமுக்கும் இருப்பது இயல்பு.

பாகுபலி 2 வெள்ளிகிழமை முதல் நாளில் 2.85 மில்லியன் யுஎஸ் டாலர்களை வசூலித்தது. இது பாகுபலி முதல் பாகத்தின் ஒட்டு மொத்த சீன வசூலைவிட அதிகம். ஆக, முதல் நாளிலேயே ஒரு சாதனையை தன்னளவில் நடத்தியது பாகுபலி 2.

மேலும், தங்கல் படத்தின் முதல் நாள் சீன வசூலை பாகுபலி 2 தாண்டியது. சீனாவில் தங்கல் முதல் நாளில் 2.27 மில்லியன் டாலர்களையே வசூலித்திருந்தது. சீனாவில் முதல் நாளில் அதிகம் வசூலித்த இந்தியப் படங்களில் அமீர்கானின் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் 6.74 மில்லியன் டாலர்கள் வசூலுடன் முதலிடத்திலும், இந்தி மீடியம் 3.39 மில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. பாகுபலி 2 மூன்றாவது.

பாகுபலி 2 படம் இரண்டாவது நாளில் 2.94 மில்லியன் டாலர்களை வசூலித்தது. மூன்றாவது நாளான நேற்று 2.27 மில்லியன் டாலர்கள். முதல் மூன்று தினங்களில் சுமாராக 50 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்த வசூல் கணக்கை வைத்துப் பார்க்கையில் தங்கலின் சீன வசூலை பாகுபலி 2 எட்டிப்பிடிப்பது கடினம் என்றே தெரிகிறது. முதல்நாளில் குறைவாக வசூலித்தாலும் அடுத்தடுத்த நாள்களில் தங்கலின் வசூல் கூடியது. ஒன்பதாவது நாளில் மட்டும் 13.86 மில்லியன் டாலர்களை வசூலித்தது. பதினாறாவது நாளில் மட்டும் 16.16 மில்லியன் டாலர்கள். அப்படியொரு சாதனையை பாகுபலி 2 படைப்பதற்கான வாய்ப்பு குறைவு.

அதேநேரம் ஒட்டு மொத்த வசூலில் தங்கலை பாகுபலி 2 முந்துவதற்கான வாய்ப்பு உள்ளது. சீனாவின் 1200 கோடிகளையும் சேர்த்து இரண்டாயிரம் கோடிகளுக்கு சற்றுக்குறைவாகவே தங்கல் வசூலித்தது. பாகுபலி 2 சீன வசூலை சேர்க்காமலே 1700 கோடிகளை வசூலித்துள்ளது. சீனாவில் 300 கோடிகளை கடந்தாலே தங்கலின் ஒட்டு மொத்த வசூலை பாகுபலி 2000 கோடியைத் தாண்டிவிடலாம்.

இந்திய சினிமாவின் சீன சந்தை ஆச்சரியங்களை நிகழ்த்தும் களமாக மாறியிருக்கிறது

×Close
×Close