Advertisment

சர்ச்சைகளால் சாதனை படைத்த சினிமாக்கள்

ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் கூட எளிதில் பிறர் எடுக்குமளவுக்கு தனிநபர் ரகசியங்களை மலிவானதாக தொழில்நுட்ப உலகு மாற்றிவிட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vishal - irumbuthirai

பாபு

Advertisment

நேற்று வெளியான விஷாலின் இரும்புத்திரை படத்தில் இடம் பெற்றுள்ள மத்திய அரசுக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும் என்று பாஜகவினர் சென்னை காசி திரையரங்கின் முன் போராட்டம் நடத்தினர். காசி திரையரங்கு நிர்வாகம் இரண்டு காட்சிகளை இதன் காரணமாக ரத்து செய்தது.

இரும்புத்திரை படம் சைபர் க்ரைம் குற்றங்களை பின்னணியாக வைத்து தயாராகியுள்ளது. ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் கூட எளிதில் பிறர் எடுக்குமளவுக்கு தனிநபர் ரகசியங்களை மலிவானதாக இந்த தொழில்நுட்ப உலகு மாற்றிவிட்டது என்பதை இரும்புத்திரை விரிவாகச் சொல்கிறது. ஆதார் அட்டை தகவல்கள் குறித்தும், டிஜிட்டல் இந்தியா குறித்தும் படத்தில் வரும் வசனங்களுக்கே இந்த எதிர்ப்பு. இதனால் ஏற்பட்ட உடனடி விளைவு, ஏற்கனவே நல்ல ஓபனிங்கை பெற்ற இரும்புத்திரை படத்தின் இரவுக் காட்சிக்கு ரசிகர்களின் கூட்டம் அதிகமானது. பாஜகவினர் இந்தப் படத்தையும் சர்ச்சைகளின் மூலம் பிளாக் பஸ்டர் ஆக்குவார்கள் என சமூகவலைத்தளங்களில் மீம்ஸ்கள் குவிந்தன.

சர்ச்சைகள் ஒரு படத்தை ஓட வைக்குமா? எல்லா படங்களும் ஓடும் என்பதில்லை. அதே நேரம் சுமாராக போக வேண்டிய பல படங்களை சூப்பர் ஹிட்டாக சர்ச்சைகள் மாற்றியுள்ளன. சர்ச்சைகளால் சாதனைப் படைத்த சில படங்களைப் பார்க்கலாம்.

முதல்வன் (1999)

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா நடித்த இந்தப் படம் ஊழல்வாதியான முதல்வரை எதிர்த்து துடிப்பான இளைஞனொருவன் போராடுவதை மையப்படுத்தியது. இதில் சொல்லப்பட்ட ஒருநாள் முதல்வன் கான்செப்ட்தான் படத்தின் ஒட்டுமொத்த கவர்ச்சிக்கும் காரணம். நான் நடித்தால் அரசியல்ரீதியாக நிறைய விமர்சனங்கள் வரும் என ரஜினி ஒதுங்கிக் கொள்ள அர்ஜுன் நாயகனானார். அப்போது கலைஞர் முதல்வராக இருந்தார். படத்தில் வரும் முதல்வர் திருக்குறள் உள்பட பழந்தமிழ் இலக்கியங்களை பேசியதால் அந்த கதாபாத்திரம் கலைஞரை குறிப்பதாக எடுத்துக் கொள்ளப்பட்டது. படம் வெளியானதும் மதுரையில் மு.க.அழகிரி ஆள்கள் பிரச்சனை செய்தனர். படம் இரண்டாவது நாளே மதுரையில் உள்ள கேபிள்களில் ஒளிபரப்பப்பட்டது. சிடிகள் தாராளமாக கிடைத்தன. பயந்துபோன ஷங்கர் முதலமைச்சர் நிவாரண நிதியாக சில லட்சங்கள் அளித்தார். இந்த சர்ச்சைகள் எழாமலிருந்தாலும் படம் வெற்றி பெற்றிருக்கும். இந்தச் சர்ச்சைகள் படத்தை சென்சேஷனலாக்கி படத்தின் வெற்றியை மேலும் பூஸ்ட் செய்தன.

விருமாண்டி (2004)

விருமாண்டிக்கு கமல் முதலில் சண்டியர் என்று பெயர் வைத்திருந்தார். சண்டியர் என்பது ஊரில் சண்டித்தனம் செய்பவர்களை குறிப்பது. தஞ்சாவூர் பக்கம் அது குறிப்பிட்ட ஆதிக்கச் சாதியினரை அடையாளப்படுத்துவது. கமலின் தேவர்மகன் கிராமப்புறங்களில் சாதிரீதியாக பெரும் சேதாரத்தை ஏற்படுத்தியிருந்ததால் கிருஷ்ணசாமி சண்டியர் பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்தார். படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் தடுப்போம் என்றார். வேறுவழியில்லாமல் கமல் படப்பிடிப்பை சென்னை கேம்பகோலா மைதானத்தில் நடத்தினார். பெயரை விருமாண்டி என்று மாற்றினார். கிருஷ்ணசாமியின் எதிர்ப்பால் விருமாண்டி நல்ல ஓபனிங்கை பெற்று வெற்றிப்பட வரிசையில் அமர்ந்தது (சண்டியர் பெயாரில் பிறகு ஒரு படம் வந்ததும், கிருஷ்ணசாமி உள்பட யாரும் அதனை கண்டுகொள்ளாததும் வரலாறு).

விஸ்வரூபம் (2013)

கமல் படங்கள் சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. அனேகமாக எல்லா படங்களும் சர்ச்சையைதாண்டியே திரைக்கு வரும். ஆனால், விஸ்வரூபத்தில் இது உச்சத்தை எட்டியது. முஸ்லீம்களை தவறாக சித்தரித்திருப்பதாகவும், படத்தில் வரும் காட்சிகள் ஏற்கனவே இந்தியாவில் நிலவும் முஸ்லிம் விரோதப்போக்கை தீவிரப்படுத்தும் எனவும் முஸ்லீம் அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு தர முடியாது என ஜெயலலிதா தலைமையிலான அரசு படத்துக்கு தடை விதித்தது. பலகட்ட போராட்டங்கள்... நாட்டைவிட்டுப் போகிறேன் என்ற கமலின் ஸ்டேட்மெண்ட் என்று தமிழகம் தகித்தது. இறுதியில் 25 ஜனவரி 2013 கேரளாவிலும், வெளிநாடுகளிலும் விஸ்வரூபம் வெளியானது. படம் ஏற்கனவே தேசிய அளவில் சர்ச்சையாகியிருந்தபடியால் மிகப்பெரிய ஓபனிங்கை பெற்றது. 29 ஜனவரி படம் கர்நாடகாவில் வெளியான போதும் வசூல் மிரட்டியது. பிப்ரவரி 1 ஆம் தேதி இந்திப் பதிப்பு விஸ்வரூப் வெளியாகி முதல் நாளில் 11 கோடிகளை வசப்படுத்தியது. இறுதியாக பிப்ரவரி 3 தடை விலக்கப்பட பிப்ரவரி 7 விஸ்வரூபம் தமிழகத்தில் வெளியானது. சுமாராகப் போக வேண்டிய படம் சர்ச்சைகளால் 100 கோடிக்கு மேல் வசூலித்தது. சர்ச்சைகளால் ஓடிய படம் என்றால் அது விஸ்வரூபம்தான்.

மெர்சல் (2017)

சர்ச்சைகளால் ஓடிய இன்னொரு தமிழ்ப் படம் விஜய்யின் மெர்சல். குழப்பமான கதை, குளறுபடியான திரைக்கதை, அரதபழசான காட்சிகள் என்று மிகச்சுமாரான படமாக மெர்சல் வெளியானது. படத்தில் டிஜிட்டல் இந்தியா குறித்தும், ஜிஎஸ்டி குறித்தும் இடம் பெற்ற இரண்டங்குல வசனங்கள் பாஜகவினரை சீண்டிவிட அவர்கள் மீடியாவில் மெர்சல் குறித்து பேசத் தொடங்கி, இந்திய அளவில் மெர்சலை ட்ரெண்டிங்காக்கினர். காணாமல் போக வேண்டிய படம் இதன் காரணமாக அரசியல் விழிப்புணர்ச்சி படமாக கொண்டாடப்பட்டது சென்ற வருடத்தின் அபத்த களஞ்சியம். படம் எக்குதப்பாக வசூலித்தாலும், படத்தின் இயக்குநர் அட்லி அளவுக்கு மீறி செல்வை இழுத்துவிட்டதால் படத்தை தயாரித்த தேனாண்டாள் ஸ்டுடியோஸுக்கு கடனே மிஞ்சியது. பாஜகவினர் மட்டும் மெர்சலுக்கு மெனக்கெட்டு விளம்பரம் செய்யாமலிருந்திருந்தால் தேனாண்டாள் மஞ்சள் நோட்டீஸ் தரவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

பத்மாவத் (2018)

இந்த வருடம் வெளியான சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவத் வரலாற்றுரீதியாக மோசமான படம். ஆனால், தனது கமர்ஷியல் கலர்ஃபுல் வேலைகளால் படத்தை பார்க்கும்படி செய்திருந்தது மட்டுமே அவரது வெற்றி. பாஜிராவ் மஸ்தானி பார்த்தவர்களுக்கு பத்மாவத் மற்றுமோர் படம். ராணி பத்மினியை படம் கொச்சைப்படுத்துகிறது என சில ராஜபுத்திர அமைப்புகள் போராட்டத்தில் இறங்க, பாஜக அதனை தாங்கிப் பிடிக்க, பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளும்கட்சியே போராட்டத்தை விசிறிவிட, பல்வேறு சிக்கல்களை படம் எதிர்கொண்டது. நீதிமன்றம் அனுமதித்தும் சென்சார் முரண்டுபிடித்தது. பத்மாவதி என்ற பெயரை பத்மாவத் என்று மாற்றச் சொன்னது. கடைசியில் எதிர்ப்புகளுக்கிடையில் 25 ஜனவரி 2018 வெளியாகி உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. சர்ச்சை மட்டும் இல்லையென்றால் பத்மாவதி 100 கோடிக்கே நுரை தள்ளியிருக்கும்.

ஆக, கறை நல்லது போல் சிலநேரங்களில் சர்ச்சை நல்லது.

Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment