கேரள நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் திலீப் நீக்கம்

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் கேரளா நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பிரபல மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் கேரளா நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 17-ம் தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல மலையாள நடிகையை மர்ம கும்பல் ஒன்று கடத்தியது. அக் கும்பல், நடிகையை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி அதனை வீடியோவும் எடுத்துள்ளது.

இது தொடர்பாக அளிக்கப்பட புகாரின் பேரில் பல்சர் சுனில், பாதிக்கப்பட்ட நடிகையின் கார் ஓட்டுநர் மார்ட்டின் அந்தோனி உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இதன் பின்னணியில் பிரபல மலையாள நடிகர் திலீப் இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், இந்த புகாரை ஆரம்பம் முதலே திலீப் மறுத்து வந்தார். புகார் தொடர்பாக கடந்த வாரத்தில் அவரிடம் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே, வழக்கில் தன்னை சம்பந்தப்படுத்தாமல் இருக்க பணம் கேட்டு பல்சர் சுனில் தன்னை மிரட்டுவதாக காவல் நிலையத்தில் திலீப் புகார் அளித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, வழக்கில் திடீர் திருப்பமாக நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களை திலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனின் ஆடை நிறுவனத்தில் வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், சோதனை நடத்திய போலீசார் சில ஆதாரங்களை கைப்பற்றினர்.

அதனடிப்படையில், நடிகர் திலீப் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். இது மலையாள திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் திலீப் கேரளா நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கேரள நடிகர் சங்க அமைப்பான “அம்மா” சங்க ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அவர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close