தென்னிந்திய சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான பொன்னம்பலம், நடிகர் விஜயகாந்தை நேரில் சந்தித்தால் நான் இறந்துவிடுவேன் என்று கூறிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக புகழ் பெற்றவர் பொன்னம்பலம். 1988-ம் ஆண்டு வெளியான கலியுகம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படத்தில் இவர் நடித்த வில்லன் கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது.
மேலும் பல படங்களில் சண்டை கலைஞராக நடித்துள்ள பொன்னம்பலம் தமிழ் தெலுங்கு, கன்னடம் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிளில பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பு, ஸ்டண்ட் மட்டுமல்லாமல் ஸ்ரீமன் நடிப்பில் பட்டையை கிளப்பு என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் உடல்நலக்குறைபாடு காரணமாக பொன்னம்பலம் கடுமையாக நிதி நெருக்கடியை எதிர்கொண்டார். அந்த சமயத்தில் அவருக்கு நடிகர்கள் பலரும் பண உதவி செய்தனர். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம் அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது நலமுடன் இருக்கிறார்.
இதனிடையே தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது தனக்கு உதவிய நடிகர்கள் குறித்து பொன்னம்பலம் ஒரு யூடியூப்சேனல் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதில், கேப்டன் விஜயகாந்த் எனக்கு கடவுள் போன்றவர். அவர் இப்போது நன்றாக இருந்திருந்தால், நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது முதல் ஆளாக உதவி செய்திருப்பார்.
எனக்கு இதயநோய் சிறுநீரகநோய் இருக்கிறது. இதனால் அவரை நான் நேரில் சென்று பார்க்கவில்லை. அப்படி பார்த்தால் என் மனசு தாங்காது. அங்கேயே நான் செத்துவிடுவேன். ஒருவர் மீது அளவுகடந்த பாசம் வைத்துவிட்டால் அவர் உடல்நிலை சரியில்லாதபோது பார்க்க முடியாது. அதனால் தான் விஜயகாந்தை இன்னும் நேரில் சென்று பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது எனது வீட்டு வாடகையை நடிகர் சரத்குமார்தான் கொடுத்துள்ளார். அதேபோல் நடிகர் பிரகாஷ் ராஜூக்கு ஒரு போன் செய்தேன். அவர் இரண்டு லட்சம் கொடுத்தார். அதேபோல் சிரஞ்சீவி பெரிய மனிதர்.
எனக்கு உடல்நிலை சரியில்லை என்றதும், இரண்டு லட்சம் பணம் அனுப்பியதோடு போன் செய்து நலம் விசாரித்தார். மேலும் உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள் எதுவாக இருந்தாலும் எனக்கு போன் செய்யுங்கள் என்று சிரஞ்சீவி அனுப்பிய வாடஸ்அப் ஆடியோவை காண்பித்துள்ளார்.
அதேபோல் நடிகர் தனுஷ் சரியான நேரத்தில் எனக்கு உதவி செய்தார். இதை பற்றி ஒரு பெரிய இடத்தில் தனியாக சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். சரியான நேரத்தில் உதவி செய்து என் மானத்தை காப்பாற்றினார் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil