விஷால் விடுதலை! தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு சீல் வைப்பு!

கைது செய்யப்பட்டிருக்கும் விஷால் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் பாண்டி பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

தயாரிப்பளர்கள் சங்க அலுவலகத்தில் போடப்பட்டிருந்த பூட்டை உடைக்க முயன்ற சங்கத் தலைவர் விஷாலை போலீசார் கைது செய்து, இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இன்று மாலை அவர் விடுதலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு எதிராக, அந்த சங்கத்தில் உள்ள சிலர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். பணத்தை கையாடல் செய்ததாகவும், ஒரு சாராருக்கு மட்டும் விஷால் ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டிய தயாரிப்பாளர்கள், தி.நகரில் உள்ள சங்க அலுவலகத்திற்கு நேற்று பூட்டு போட்டு, சாவியை அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர்.

இந்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில், தனது ஆதரவாளர்களுடன் சங்க அலுவலகத்துக்கு வந்த விஷால், பூட்டை உடைக்க முயன்றார். சாவியை வைத்து திறக்கலாம் என்று போலீசார் கூறியதை ஏற்க மறுத்த விஷால், ‘பூட்டை உடைத்து தான் திறப்பேன்’ என்றார்.

இதையடுத்து, விஷாலையும் அவரது ஆதரவாளர்கள் 10 பேரையும் போலீசார் உடனடியாக கைது செய்துள்ளனர். அப்போது ஆவேசமாக பேட்டியளித்த விஷால், “தயாரிப்பாளர் சங்கத்திற்கு நான் தான் தலைவர். யாரோ சிலர் வந்து பூட்டு போட்டிருக்கிறார்கள். அந்த திருட்டுப் பூட்டுக்கு போலீசார் பாதுகாப்பு தருகின்றனர். ஏன் என்று கேட்டால், கடமையை செய்கிறோம் என்கிறார்கள்” என குற்றம் சாட்டினார். கைது செய்யப்பட்டுள்ள விஷால், தி.நகரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், மூத்த இயக்குனர் பாரதிராஜா தலைமையில் விஷால் எதிர் தரப்பு தயாரிப்பாளர்கள் சிலர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசியுள்ளனர். அவர்கள் நேரடியாக விஷால் மீது முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர்.

முன்னதாக, நேற்று மாலை இயக்குனர் பாரதிராஜா மற்றும் தயாரிப்பாளர்கள் முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியிருந்தனர். அதைத் தொடர்ந்தே, இன்று காலை விஷால் பூட்டை உடைத்து தான் திறப்பேன் என்று போலீசாரிடம் அடம்பிடித்து கைதாகியுள்ளார்.

விஷால் கைதான பின் பேட்டியளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, “தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடக்கும் இந்த மோதலுக்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.

விஷால் கைது குறித்து போலீசார் தரப்பு கூறுகையில், “விஷால் எதிர் தரப்பினரின் புகார் விசாரணையில் இருக்கும்போது சங்க அலுவலக பூட்டை உடைக்க முயன்றதால் விஷால் கைது செய்யப்பட்டார்” என்று விளக்கம் அளித்துள்ளனர்.

கோலிவுட் வட்டாரத்தில் விஷால் – தயாரிப்பாளர்கள் மோதல் சூடுபிடித்துள்ளது.

மேலும் படிக்க – தீவிரமானது விஷால் எதிர்ப்பு அலை! தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு, முதல்வரிடம் புகார்

07:40 PM – விஷால் விடுதலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், கிண்டி வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளனர்.

07:00 PM – காலையில் கைது செய்யப்பட்ட விஷால், சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

04:30 PM – கைது செய்யப்பட்டிருக்கும் விஷால் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் பாண்டி பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், தகராறில் ஈடுபட்டு அமைதியை குலைத்தல் ஆகிய 2 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

03:00 PMஎங்கே இருந்தீர்கள் விஷால்? – சுரேஷ் காமாட்சி

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில், “ரெகுலரான தயாரிப்பாளர்களை ‘யாரோ சிலர்’ என்று எப்படி சொன்னீர்கள் விஷால்? இவ்வளவு நாள் எங்கு இருந்தீர்கள்? ரெகுலர் உறுப்பினர்கள் யார் என்று கூட உங்களுக்கு தெரியாதா? 15 மாதங்களாக எங்கு இருந்தீர்கள்? தயாரிப்பாளர் சங்க சட்ட விதியின் படி எதுவுமே நடப்பதில்லை. அதற்கு முதலில் ஏன் பதில் சொல்ல மாட்டேங்குறீங்க?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

02:00 PMமுதல்வரிடம் முன்வைத்த கோரிக்கைகள் என்ன? – எஸ்.வி.சேகர் விளக்கம்

01:40 PM – முதல்வர் பழனிசாமியிடம் விஷால் மீது புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பாரதிராஜா, “தற்போது இருக்கும் தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழுவில் வெளிப்படைத்தன்மை இல்லை. சங்கத்தின் கையிருப்பு நிதி 7.80 கோடி, அனுமதியின்று செலவிடப்பட்டுள்ளது. அதுகுறித்து கணக்கு கேட்டால் கோபப்படுகிறார்கள். பொறுப்பில் இருப்பவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்றார்.

01:20 PMவிஷால் ட்வீட்

“தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு நேற்று பூட்டு போடப்பட்டபோது மவுனமாக இருந்த போலீசார், எந்த தவறும் செய்யாத என்னையும் என் ஆதரவாளர்களையும் இன்று கைது செய்தது முற்றிலும் நம்பமுடியாத ஒன்று. நிச்சயம் மீண்டும் போராடி இளையராஜா சார் நிகழ்ச்சியை நடத்தி, நிதி திரட்டி நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு உதவி புரிவோம்” என விஷால் ட்வீட் செய்துள்ளார்.

01:05 PM – முதல்வரிடம் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் ராஜன், “தயாரிப்பாளர்கள் சங்கத்தை விஷால் படுகுழியில் தள்ளிவிட்டுள்ளார். அதிகாரிகளிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்” என்றார்.

12:50 PM – தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இன்னும் 4 மாதத்தில் முறையாக தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் விஷால் எதிரணியினர் மனு அளித்துள்ளனர். பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், கே.ராஜன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட 10 பேர், முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

12:40 PM – தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டை, பதிவுத்துறை அதிகாரிகள் திறந்தனர். இதனால், சங்க அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close